காக்கும் கார்த்திகைச் செல்வன் - 28

By கே.சுந்தரராமன்

கந்தக்கோட்டம் என்று அழைக்கப்படும் சென்னை முத்துக்குமார சுவாமி கோயில், ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான கோயில் என்று அறியப்படுகிறது. சிதம்பர சுவாமி, பாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள், வள்ளலார் சுவாமிகள் (ராமலிங்க அடிகள்) இத்தல முருகப் பெருமானை (கந்தசுவாமி) போற்றிப் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை பாரிமுனை அருகில் உள்ள இக்கோயிலில் கந்தப் பெருமான் விரும்பி நின்றதால், பீடம் ஏதும் இல்லாமல் தரையில் நின்றபடியே பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். உற்சவர் முத்துக்குமார சுவாமி தனி கொடிமரத்துடன், முகத்தில் புள்ளிகளுடன் அழகு பொருந்தியவராக காட்சி அருள்வது தனிச்சிறப்பு.

தல வரலாறு

அந்நியர்கள் ஆட்சியில் பல கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. அதுசமயம், செங்கல்பட்டு அருகில் உள்ள திருப்போரூர் கோயிலில் இருந்த கந்தசுவாமி விக்கிரகத்தை பக்தர்கள் அருகில் இருந்த புற்றுக்குள் மறைத்து வைத்தனர். பல்லாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருப்போரூர் கோயிலில் வழிபாடு நடைபெறத் தொடங்கியது. பழைய விக்கிரகத்தைக் கண்டுபிடிக்க இயலாததால், புதிய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்த பக்தர்கள், பழையபடி வழிபாட்டைத் தொடர்ந்தனர்.

சென்னை பாரிமுனை பகுதியில் சிவாச்சாரியார் ஒருவர் வசித்து வந்தார். ஒருசமயம், அவர் திருப்போரூர் தலத்துக்குச் சென்று கந்தசுவாமி பெருமானை தரிசித்துவிட்டு, சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் சில ஆச்சாரியர்களும் வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் வரும்வழியில் திடீரென்று கனமழை பெய்தது. நேரம் ஆக ஆக வெள்ளம் பெருக்கெடுத்தது. ஊர் திரும்ப முடியாமல் சிவாச்சாரியாரும், ஆச்சாரியர்களும் தவித்தனர். சுற்றும் முற்றும் பார்த்து, அருகில் இருந்த ஒரு மடத்தில் தங்கினர். அன்றிரவு சிவாச்சாரியாரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், “நான் உனக்கு அருகில் உள்ள புற்றில் குடி கொண்டுள்ளேன். எனக்கு கோயில் கட்ட வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தார்.

கண்விழித்த சிவாச்சாரியார் அருகில் இருந்த புற்றில் முருகப் பெருமான் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். மழையும் சற்று ஓய்ந்தது. உடனே, முருகப்பெருமான் சிலையுடன் சிவாச்சாரியார் மற்றும் ஆச்சாரியர்கள் அங்கிருந்து கிளம்பி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

நீண்ட நேரம் பயணித்ததால், களைப்படைந்த அவர்கள் ஓரிடத்தில் முருகப் பெருமான் சிலையை வைத்துவிட்டு, சற்று ஓய்வெடுத்தனர். சிறிது நேரம் கழித்து, அங்கிருந்து அவர்கள் கிளம்ப முற்பட்டபோது, சிலையை அங்கிருந்து எடுக்க முடியவில்லை. முருகப் பெருமான் அங்கேயே தங்க முடிவுசெய்துவிட்டார் என்பதை உணர்ந்த அவர்கள், அதே இடத்தில் அவருக்கு கோயில் எழுப்பினர்.

திருப்போரூர் சென்றுவிட்டு திரும்பும் வழியில் கிடைத்த விக்கிரகம் என்பதால் இந்த மூர்த்தி ‘கந்தசுவாமி’ என்ற பெயரால் அழைக்கப்பட்டார். ‘பெத்தநாயக்கன் பேட்டை’ என்று அழைக்கப்பட்ட இத்தலம், முருகன் கோயில் அமைந்த பிறகு ‘கந்தக்கோட்டம்’ என்று அழைக்கப்பட்டது.

(மாரிச்செட்டியார், கந்தப்ப ஆசாரி ஆகிய இருவரும் முருகப் பெருமானின் விக்கிரகத்தை தூக்க இயலாமல் தவித்தபோது, அவர்களுக்காக 10 மாத குழந்தை எடை அளவில் தனது எடையைக் குறைத்துக் கொண்டார் கந்தன் என்று கூறப்படுகிறது)

கோயில் அமைப்பும் சிறப்பும்

கந்தசுவாமி கோயிலின் வடக்குப் பகுதியில் பிரதான நுழைவாயிலும், 5 நிலை ராஜ கோபுரமும் அமைந்துள்ளது. மூலவருக்கும் கொடிமரத்துக்கும் இடையே துளைகளுடனான சுவர் மட்டுமே உள்ளது. நேர் வாயில் கிடையாது.

கந்தசுவாமியே விரும்பி இத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக அருள்பாலிக்கும் முருகப் பெருமான், நின்ற கோலத்தில் தனித்து காட்சி அருள்கிறார். வள்ளி, தெய்வானை ஆகியோர், முருகப் பெருமானுக்கு இருபுறமும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

விசேஷ நாட்களில் உற்சவர் முத்துக்குமார சுவாமிக்கே பிரதான பூஜை நடைபெறுகிறது. இக்கோயிலில் உள்ள விநாயகப் பெருமான் தனி சந்நிதியில் சித்தி - புத்தி விநாயகராக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். சித்தியும் புத்தியும் ஒரு காலை மடக்கி, மற்றொரு காலை தொங்கவிட்டபடியும் அருள்பாலிக்கின்றனர். சரவணப்பொய்கைத் தீர்த்தக் கரையில் உள்ள விநாயகரின் வலப்புறத்தில் லட்சுமி தேவியும், இடப்புறத்தில் சரஸ்வதி தேவியும் உள்ளனர். ஒரே சமயத்தில் விநாயகர், லட்சுமி தேவி, சரஸ்வதி தேவியை வணங்கினால் கல்வி சிறக்கும், செல்வம் பெருகும், ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

உற்சவர் சிறப்பு

17-ம் நூற்றாண்டில் கோயிலில் உற்சவர் சிலை செய்ய வேண்டும் என்று நிர்வாகத்தினர் முடிவு செய்து, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றன. சிற்ப வல்லுநர்கள் மூலம் பஞ்சலோகத் திருமேனி வார்க்கப்பட்டது. வார்ப்படச் சூடு அடங்கும் முன்பாக விக்கிரகம் வெளியே எடுக்கப்பட்டது. விக்கிரகத்தின் பிசிறுகளைக் களைந்து தூய்மைப்படுத்த தலைமைச் சிற்பி தொடங்கியபோது, தன் உடலில் ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்தார். சிறிது நேரம் கழித்து விழித்த அவர், “இந்தச் சிலை தெய்வ சாந்நித்யம் நிறைந்ததாக உள்ளது. என்னால் தொட இயலாது. பிசிறுகளைப் போக்கி தூய்மைப்படுத்தும் சக்தி எனக்கு இல்லை” என்று பயத்துடன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அந்த விக்கிரகத்தை ஓர் அறையில் பூட்டி வைத்தனர். இச்சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காசிக்குச் சென்று திரும்பும்போது, இக்கோயிலுக்கு வந்த வேத பண்டிதர் சாம்பு ஐயர், மூலவரை தரிசித்தப் பின், உற்சவரையும் தரிசிக்க விரும்பினார். கோயில் பணியாளர்கள், உற்சவரின் கதையைக் கூறினர். இருப்பினும் சாம்பு ஐயர், உற்சவரை தரிசிப்பதில் உறுதியாக இருந்தார்.

உற்சவரை தரிசித்த பண்டிதர், கோயில் பணியாளர்களிடம், “மூலவரிடம் உள்ள அதே சாந்நித்யம் உற்சவரிடமும் உள்ளது. அருளை அள்ளித் தரும் இந்த உற்சவரை உளி கொண்டு செதுக்கக் கூடாது. ஆத்ம சக்தியால் தூய்மை செய்தால் பிசிறுகள் நீங்கி, விக்கிரகம் தூய்மை அடையும்” என்று கூறி சில மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினார். விக்கிரகத்தில் இருந்த பிசிறுகள் உதிர்ந்து, முன்பை விட பளபளப்புடன் இருந்தார் உற்சவர். இவரே கந்தக்கோட்ட கோயிலின் உற்சவமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திருவருட்பா போற்றும் கந்தக்கோட்டம்

ராமலிங்க அடிகளார் (வள்ளலார் சுவாமிகள்) தனது திருவருட்பாவில் சென்னை கந்தக்கோட்டத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.

‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்’ எனத் தொடங்கும் திருவருட்பாவில் ’தருமமிகு சென்னையிற் கந்தக்கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேலே!’ என்று கந்தப் பெருமானைப் போற்றிப் புகழ்கிறார்.

‘இறைவனிடம் பொன், பொருள் பெற, உடல் நலம் தேற, நல்ல வேலை கிடைக்க, திருமண யோகம் கிட்ட வேண்டும் என்று பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். இது பக்தியாகக் கருதப்படாது. அனைவரும் ஒரே சிந்தனையுடன் அவன் மலரடியை நினைக்க வேண்டும். அவர்களின் தோழமை நமக்கு வேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வஞ்சகர்களின் நட்பு நமக்கு வேண்டாம். உண்மையாகவே இறைவன் புகழ் பாடுவர்களின் நட்பே சிறந்தது. மதத்தை முன்னிறுத்தி செய்யப்படும் செயல்கள் நல்லவை அல்ல. எப்போதும் இறைவனை மறவாமை வேண்டும். தீய வழியில் செல்லாத மனம் வேண்டும். குளிர்ந்த முகத்தை உடைய, தூய்மையான மணிகளில் சிறந்த மணியான சைவ மணியே, சண்முகத் தெய்வ மணியே! மேற்கூறிய அனைத்தையும் நீ அனைவருக்கும் தந்தருள வேண்டும்’ என்று கந்தக்கோட்டப் பெருமானை வேண்டுகிறார் வள்ளலார் சுவாமிகள்.

‘கந்தக்கோட்டம் தல புராணம்’ – நூல்

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் வரலாற்றை அக்கோயில் குருக்கள் (சோமாசி குருக்கள்) தனது மனைவியிடம் கூறினார். அருகில் இருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த சபாபதி குருக்கள், பத்து விருத்தங்களாக எழுதி, தனது பேரனிடம் (சோமாஸ்கந்த குருக்கள்) அளித்தார். தனக்கு ஏற்பட்ட சில ஐயப்பாடுகள் குறித்து வேதகிரி குருக்களிடம் இருந்து விளக்கம் பெற்ற சோமாஸ்கந்த குருக்கள், தம்முடைய சீடர் குளத்தூர் கோயில் கிருஷ்ணப்ப செட்டியாரிடம் அதைக் கூறி, தனது பாட்டனார் அளித்த (கந்தபெருமான் வரலாற்றைக் விளக்கும்) 10 விருத்தங்களையும் அவரிடம் அளித்தார். மேலும், அவருக்கு ஆகமங்கள், புராணங்கள், சமய நூல்கள், சாஸ்திரங்கள் முதலானவற்றையும் கற்பித்தார். இப்பாடல்களில் உள்ள வரலாறுகளை மனதில் கொண்டு, 206 விருத்தப்பாக்களில் சென்னை கந்தப்பெருமான் கோயிலின் தலபுராணத்தைப் பாடினார் கிருஷ்ணப்பச் செட்டியார்.

கோமாதா பூஜை

இந்தக் கோயிலில் கோமாதா பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் எண்ணற்ற பக்தர்கள் வந்திருந்து கோபூஜை செய்கின்றனர். கோபூஜை செய்தால் குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம்.

நோய்கள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுமாட்டுக்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வழிபாடு செய்தால் தோஷ நிவர்த்தி ஆகும் என்பது நம்பிக்கை. தோல் நோய் மற்றும் சரும கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கோபூஜை செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, சரவணப் பொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைப்பது வழக்கம்.

நேர்த்திக் கடன்

பக்தர்கள் பால்குடம், பால் காவடி எடுத்தும், முடி காணிக்கை செய்தும், திருக்கல்யாண உற்சவம் செய்தும் நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானுக்கு சிறப்பு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பம் சிறக்கும், ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் பிரச்சினை உள்ளவர்கள் சித்தி - புத்தி விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால், பிரச்சினை தீரும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

வைகாசி வசந்த உற்சவம், ஆடிக் கிருத்திகை விழா, பங்குனி உத்திரத் திருவிழா, ஐப்பசி கந்த சஷ்டி திருவிழா, தை மாதத்தில் பிரதான திருவிழா (18 நாள்) உள்ளிட்டவை இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE