ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்: ஸ்ரீரங்கம், அழகர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரம் வருகை

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை (ஆகஸ்ட் 7) ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் மதுரை அழகர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) தினசரி பூஜையின் போது ஆண்டாள் சூடிய மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதேபோல் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா, ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சித்திரை தேரோட்டம், திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவத்தில் கருட சேவை ஆகிய திருவிழாக்களின் போது பெருமாளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடி கலைந்த பூ மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

அதற்கு மறு சீராக ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவில் ஆண்டாளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் மதுரை கள்ளழகர் உடுத்தி கலைந்த பட்டு வஸ்திரம் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்படும். ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தின் போது திருப்பதி பெருமாள் உடுத்தி கலைந்த பட்டு வஸ்திரம் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதன்படி நாளை ஆடிப்பூர தேரோட்ட திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் மற்றும் மதுரை ஆழகர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரம், மாலை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வரப்பட்டது. நாளை காலை ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மங்கல பொருட்கள் மூலவருக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் பின் தேரில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு அழகர் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு, காலை 9:05 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE