மக்கள் உருவாக்கிய அன்பில் தேர்

By மு.இசக்கியப்பன்

திருச்சி மாவட்டம் அன்பில் சுந்தரராஜப் பெருமாள் கோயில், 108 திவ்யதேசங்களில் 5-வது திவ்யதேசம் ஆகும். திருச்சியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

அன்பில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் உற்சவர்: வடிவழகிய நம்பி

சிவபெருமானுக்கும், பிரம்மதேவனுக்கும் 5 தலைகள் இருந்தன. ஒருமுறை பிரம்மதேவனுக்கு பார்வதி தேவி பாத பூஜை செய்து கொண்டிருந்தார். இதைக் கண்ட சிவபெருமான் சினம் கொண்டு, இருவருக்கும் ஐந்து தலைகள் இருப்பதால் ஏற்பட்ட குழப்பத்தால், பார்வதி தேவி பிரம்மனுக்கு பாஜ பூஜை செய்ய வேண்டியது ஏற்பட்டது என எண்ணி, பிரம்மதேவனின் தலைகளில் ஒன்றைச் சிவன் கிள்ளியெறிந்து விட்டார்.

இதனால் சிவபெருமானுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டு, பிரம்மாவின் கபாலம் (மண்டை ஓடு) சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது. அத்துடன் பல ஸ்தலங்களை தரிசித்து கொண்டு வந்த சிவன், திருச்சி அருகே கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள கரம்பனூர் என்னும் உத்தமர் கோவிலுக்கு வந்தார். அங்கு மஹாலட்சுமி தாயார் இட்ட பிச்சையால் கபாலம் நிறையப்பெற்ற பின் கண்டியூர் செல்லும் வழியில் சிவபெருமான் அன்பில் திருத்தலத்துக்கு வந்து, சுவாமி சுந்தரராஜ பெருமாளை தரிசித்துச் சென்றார். இவ்வரலாறு கந்த புராணத்திலும் கூறப்பட்டுள்ளது.

அத்தி மரத்தில் புதிதாகச் செய்யப்பட்ட தேர்

திரு அன்பில் தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் இங்கு திருமால் தாரக விமானத்தின் கீழ் உள்ளார். திருமழிசை ஆழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.

ஆண்டுதோறும், வைகாசி விசாகம் அன்று, இக்கோயிலில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்துள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக‌ தேர் நிலையில் நின்றபடியே செல்லரித்துப் போய்விட்டது. இக்கிராம மக்களின் முயற்சியால், 45 லட்ச ரூபாய் செலவில் அத்தி மரத்தில் அழகிய தேர் ஒன்றை உருவாக்கினர். புதிய கொடிமரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2022ம் ஆண்டு தேரோட்டம் நடைபெற்றது. நடப்பாண்டு வைகாசி விசாக தேரோட்டம் வரும் 2-ம் தேதி நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE