வாமனராக அவதரித்த ஸ்ரீ மகாவிஷ்ணு, பின்னர் திரிவிக்கிரமனாக, உலகளந்த பெருமாளாக வடிவெடுத்தார். இத்திருக்கோலத்தை காஞ்சிபுரம், திருக்கோவிலூர், சீர்காழி உள்ளிட்ட திருத்தலங்களில் சேவிக்கலாம்.
திருக்காழிச் சீராம விண்ணகரம் என புராணங்களில் இடம்பெற்றுள்ள சீர்காழி இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீர்காழியைச் சுற்றிலும் ஏராளமான வைணவ, சைவ திருத்தலங்கள் நிரம்ப உள்ளன.
மகாவிஷ்ணுவின் திரிவிக்கிரம அவதாரத்தை மீண்டும் காண வேண்டி உரோமச முனிவர் என்ற மகரிஷி இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்காக இத்திருக்கோலத்தை மீண்டும் காட்டியருளிய தலம் திருக்காழிச் சீராம விண்ணகரம் எனப்படும் சீர்காழி. இங்கு பெருமாள் தனது இடது திருவடியை விண்ணோக்கி தூக்கி இருக்கிறார். மூலவருக்கு திருவிக்கிரம நாராயணர் என்றும், உற்சவருக்கு தாடாளன் என்றும் பெயர். தாயார் திருநாமம் லோகநாயகி.
திரி விக்ரம அவதாரம் எடுத்து, தன் தாள்களால் உலகத்தையும், விண்ணையும் அளந்தமையால் இப்பெருமாளுக்கு தாள் + ஆளன் - தாளாளன் - தாடாளன் என்பதே திருநாமமாயிற்று. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம், மணவாள மாமுனிகளும் இரண்டுமுறை இங்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார்.
108 திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களை விண்ணகரம் என்று திருமங்கை ஆழ்வார் குறிக்கின்றார். விண்ணகரம் என்றால் விண்ணில் உள்ள பரமபதத்திற்குச் சமமான தலம் என்பது பொருள். அந்த விண் நகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.
1. பரமேச்சுர விண்ணகரம்.
2. காழிச் சீராம விண்ணகரம்.
3. அரிமேய விண்ணகரம்.
4. வைகுந்த விண்ணகரம்.
5. நந்திபுர விண்ணகரம்.
இக்கோவிலில்10 நாள் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மே 24-ம் தேதி தொடங்கியது. மே 27-ம் தேதி கருடசேவை நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்குப் பின் சென்றாண்டு வைகாசி விசாகத்தன்று தெப்பத் திருவிழா நடைபெற்றது. அதுபோல் ஜூன் 2-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.