நடையழகு காட்டிய செளரிராஜப் பெருமாள்!

By மு.இசக்கியப்பன்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள திருக்கண்ணபுரத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றான இக்கோவிலில் மூலவர் நீலமேகப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தாயார் கண்ணபுர நாயகி தனிச்சன்னதியில் வீற்றிருக்கிறார்.

திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள்

உற்சவர் பெருமானுக்கு செளரிராஜப் பெருமாள் என்பது திருநாமம். செளரி என்றால் முடி என்று அர்த்தம். மன்னருக்கு பிரசாதமாக அளித்த மாலையில் முடி இருந்தது. மன்னர் கோபம் கொள்ளவே, ‘அது பெருமாளின் முடிதான்’ என்று அர்ச்சகர் கூறிவிட்டார். இதனை மன்னர் பரிசோதித்த போது உற்சவரின் திருத்தலையில் முடி இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார். இதனால் இப்பெருமாளுக்கு செளரிராஜன் எனப் பெயர் ஏற்பட்டது. ஸ்ரீ ராமபிரானின் பிரிவால் விபீஷணனுக்கு பெருமான் தனது நடையழகை ஓர் அமாவாசை நாளில் இத்திலத்தில் காட்டியருளினார். இந்நிகழ்ச்சி ஒவ்வொரு அமாவாசையன்றும் நடைபெறுகிறது. அமாவாசையன்று பெருமாள் உலா செல்லும்போது மட்டும் செளரிராஜப் பெருமாளின் திருத்தலையில் கேசம் (முடி) இருப்பதை காணலாம்.

திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயில்

ஆலயத்தின் உட்பிரகாரம்

இக்கோவில் ராஜகோபுரம் ஏழு அடுக்குகள் கொண்டது. கோவில் வாயிலில் மிக அழகிய புஷ்கரணி அமைந்துள்ளது. நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இத்தலப் பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளனர். மே 29-ம் தேதி தங்க கருட சேவையும், ஜூன் 2-ம் தேதி திருக்கல்யாண உற்சவம், ஜூன் 3-ம் தேதி தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE