பிரம்மனின் சாபம் தீர்த்த பிரம்மபுரீஸ்வரர்!

By மு.இசக்கியப்பன்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் சப்த விடங்கர் தலங்களில் ஒன்றான வண்டமர் பூங்குழலாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் சுவாமி, தியாகராஜ சுவாமி கோயில் அமைந்துள்ளது. பிரம்மனுக்கு படைப்புத் தொழிலை அருளிய தலம் இது.

சாபத்தினால் தனது தொழிலை இழந்து தவித்த பிரம்மன், சந்திர நதியின் வெண்மணலைக் கொண்டு சிவலிங்கத் திருமேனியை உருவாகி வழிபட்டு வந்தார். பின்னர் சிவபெருமானின் காட்சியைக் கண்டு, அவரது சாபம் நீங்கப்பெற்ற தலம் இது என்பதால், இங்குள்ள இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. நவகோள்களின் தோஷங்களை சிவபெருமான் போக்கியருளிய தலம் இது என்பதால், இக்கோயிலில் உறையும் இறைவனுக்குக் கோளிலிநாதர் என்ற பெயரும் ஏற்பட்டது. சுந்தரர் பெற்ற நெல் மலையை திருவாரூருக்கு கொண்டு சேர்க்க பூதகணங்களை அனுப்பி அருளிய தலம் இது. மாசி மாதம் நடைபெறும் இவ்விழாவில் பக்தர்கள் பூதகணங்கள் போல வேடமிட்டு நேர்ச்சை செலுத்துவது பிரசித்தமானது. தருமை ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயிலில் 21 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருந்திருவிழா தற்போது நடந்து வருகிறது. கடந்த 16-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது.

திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர், கோளிலிநாதர், தியாகராஜ சுவாமி கோயில்

மே 24-ம் தேதி இரவில் வசந்த உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. அப்போது, பல்லக்கில் சுவாமியை வைத்து நடனமாடியபடியே சுமந்து வந்தனர். இதனைக் காண திரண்டிருந்த பக்தர்கள், ‘ஆரூரா.. தியாகேசா’ என்று கோஷமிட்டனர். தொடர்ந்து வசந்த மண்டபத்தில் பிரிங்க நடன கோலத்தில், கமலாம்பாளுடன் தியாகராஜ சுவாமி எழுந்தருளினார். அங்கு மகா தீபாராதனை நடைபெற்றது. வரும் 30-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE