காக்கும் கார்த்திகைச் செல்வன் - 26

By கே.சுந்தரராமன்

கந்தப் பெருமான் கோயில் கொண்ட தலங்களில் குறிப்பிடத்தக்க தலமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடி (அரசவனம்) சண்முகநாதர் கோயில் விளங்குகிறது. இத்தலத்தில் கண்ணபிரான், நான்முகன், இந்திரன், வசிஷ்டர், விஸ்வாமித்திரர், நாரத முனிவர், கருடன், சூரியன், மன்மதன் முதலானோர் வழிபாடு செய்துள்ளனர்.

பிரார்த்தனைத் தலங்களுள் மேன்மையான தலமாக விளங்கும் இங்கு, தேனாற்றுநாதர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். குன்றக்குடி மலை தோற்றத்தில் மயில் வடிவமாகக் காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம், காரைக்குடியில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து 3-வது கிலோ மீட்டரில் உலக பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டி திருத்தலம் இருக்கிறது.

தல வரலாறு

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் பகை இருந்து கொண்டே இருக்கும். ஒருசமயம், இந்த தொடர் பகை காரணமாக, அசுரர்கள் தேவர்களை பழிவாங்க எண்ணினர். அசுரர்கள் ஒன்று திரண்டு மயிலிடம் சென்று, பிரம்மதேவரின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை தாங்கள்தான் மயிலைவிட வேகமாகப் பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக உண்மைக்குப் புறம்பான செய்தியைக் கூறினர். அசுரர்களின் சூழ்ச்சி அறியாத மயில் கோபம் அடைந்து, பிரம்மாண்ட உருவம் எடுத்து அன்னத்தையும், கருடனையும் விழுங்கி விட்டது.

நடந்தவற்றை அறிந்த இந்திரனும், திருமாலும், இதுதொடர்பாக முருகப் பெருமானிடம் முறையிட்டனர். அவரும் மயிலிடம் இருந்து அன்னத்தையும் கருடனையும் மீட்டுத் தந்தார். மயிலின் அவசர முடிவு தொடர்பாக கடிந்து கொண்ட முருகப் பெருமான், அந்த குற்றத்துக்காக மலையாக மாறும்படி மயிலுக்கு சாபம் அளித்தார்.

தனது தவறுக்கு வருந்திய மயில், அரசவனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப் பெருமானை நோக்கி தவம் மேற்கொண்டது. முருகப் பெருமானும் மயிலை மன்னித்து சாப விமோசனம் அளித்தார். பின்பு, மயிலின் வேண்டுகோளுக்கு இணங்கி, மயில் வடிவில் உள்ள இந்த மலையில் எழுந்தருளி, முருகப் பெருமான் அருள்புரிந்தார். இத்தலம் அருணகிரிநாதரால் பாடல்பெற்ற தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயிலின் அமைப்பும், சிறப்பும்

முருகப் பெருமான், தனது வாகனமான மயிலுக்கு சாப விமோசனம் அருளியதால் இந்த மலை, மயில் மலை என்ற பெயரைப் பெற்றது. ஆறே முக்கால் ஏக்கர் பரப்பளவில் இம்மலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இத்தலம் 40 மீட்டர் உயரத்தில் உள்ளது. இக்கோயிலின் ராஜ கோபுரம் 16.15 உயரம் கொண்டதாக இருப்பது தனிச்சிறப்பு.

200 அடி உயரமுள்ள சிறிய குன்றின் மீது சண்முகநாதர் கோயில் கொண்டுள்ளார். மலை ஏறும்போது வல்லப விநாயகர், முருகப் பெருமானின் பக்தரான இடும்பன், பழநி முருகன் சந்நிதிகளைக் காணலாம். மலை அடிவாரத்தில் ஒரு குகையில் உள்ள சிவன் கோயிலுக்கான 5 நிலை கோபுரம் உள்ளது. குகையில் திருமால், பிரம்மதேவர் இருவரும் சிவபெருமானை வழிபடும் சிற்பங்கள் உள்ளன.

கோயிலைச் சுற்றி விநாயகர், சிவன், குழந்தை வேலப்பர், நவக்கிரகங்கள், பைரவர் சந்நிதிகள் அமைந்துள்ளன. திருவண்ணாமலை ஆதீன குன்றக்குடி திருமடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயில் உள்ளது.

மூலவர் சண்முகநாதர் ஆறு முகங்களுடனும், பன்னிரு கரங்களுடனும் எழுந்தருளியுள்ளார். செட்டி முருகன், குன்றையூர் உடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக் கந்தன், குன்றை முருகன், தேனாறு உடையான் என்று பல பெயரால் இத்தல முருகப் பெருமான் அழைக்கப்படுகிறார்.

முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனி மயில் வாகனங்களில் அமர்ந்து அருட்காட்சி வழங்குகின்றனர். இது வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும். மயில் மீது அமர்ந்திருக்கும் முருகப் பெருமான், இறங்கி வருவது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவது தனிச்சிறப்பு.

கடந்த இரு நூற்றாண்டுகளில் கோயிலில் பெரும்பாலான பணிகள் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தாரால் செய்யப்பட்டதால் இத்தல முருகப் பெருமான் ‘செட்டி முருகன்’ என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு ஞானிகள் வாழ்ந்ததற்கான கல் படுக்கைகள் காணப்படுகின்றன. கோயில் தகவல்களைத் தெரிவிக்கும் கல்வெட்டுகளும் உள்ளன. இங்குள்ள குடைவரைக் கோயில் சந்நிதிகள், கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. பாண்டவர்கள் இங்கு வழிபாடு செய்தது குறித்தும், கலிங்கநாட்டு இடும்பன் காவடி எடுத்து வழிபட்டு தன் வயிற்றுவலி நீங்கப் பெற்றது குறித்தும் கல்வெட்டுகள் உரைக்கின்றன.

மலைக்கு கீழ் உள்ள கோயிலில் சுயம்பு மூர்த்தியாக தேனாற்று நாதர் அருள்பாலிக்கிறார். தேனாற்றங்கரையில் இருப்பதால் இவருக்கு இப்பெயர் கிட்டியது. அகத்திய முனிவர் இத்தல ஈசனை வழிபட்டு பூஜைகள் செய்துள்ளார். அழகும், அருட்சக்தியும் நிறைந்தவராக அழகம்மை (அம்பாள்) பக்தர்களுக்கு காட்சி அருள்கிறார். அடிவாரத்தில் சரவணப் பொய்கை, தேனாறு, மயில் தீர்த்தங்கள் உள்ளன.

சண்முக நாதர், வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது ஆணும், பெண்ணும் சரி சமம் என்பதை உணர்த்துவதற்காகத்தான் என்று அறியப்படுகிறது. நவக்கிரகங்கள் அனைத்தும் நின்ற நிலையில் ஒரே முகமாக சண்முக நாதரை நோக்கி வணங்குவது குறிப்பிடத்தக்கது. சூரன் என்ற அசுரனிடம் இருந்து தேவர்கள் உள்ளிட்டோரைக் காத்தருளிய முருகப் பெருமானை வணங்குவோருக்கு நவக்கிரக தோஷங்கள் உடனே விலகும் என்பது ஐதீகம்.

ஜாதகம் சாதகமாக இல்லாத குழந்தைகளை சண்முக நாதருக்கு தத்து கொடுத்துவிட்டு, அவர்கள் வளர்ந்து திருமணத்துக்கு சில நாட்கள் முன்பு அவர்களை சண்முக நாதரிடம் இருந்து மீண்டும் பெற்றுக் கொண்டால், அவர்கள் தலையெழுத்து மாறும் என்பதும் ஐதீகம்.

நூல்கள் போற்றும் சண்முகநாதர்

அருணகிரி நாதர், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் உள்ளிட்டோர் இத்தல முருகப் பெருமானைப் போற்றிப் பாடியுள்ளனர். அருணகிரியார் தன்னுடைய திருப்புகழில் முருகப் பெருமானை ‘குருநாதா’ என்று அழைக்கிறார். இதன் மூலம் உலக மக்களுக்கு ஞானத்தை வழங்கும் குருநாதராக முருகப் பெருமான் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார் என்று அறியப்படுகிறது.

குன்றக்குடி பதிகமும் முருகப் பெருமானை குருநாதராக போற்றுகிறது. இப்பதிகத்தைப் படித்தால் 16 வகையான செல்வங்களும் கிட்டும் என்று கூறப்படுகிறது. செல்வம், புகழ், வெற்றி, குழந்தை பாக்கியம் பெற இப்பதிகம் வரம் அருள்வதாக போற்றப்படுகிறது.

கந்த சஷ்டி விரத பயன்கள்

சிவகங்கை மருது பாண்டியரில் மூத்தவரான பெரிய மருதுவுக்கு ஒருசமயம் உடல்நலம் குன்றியது. முதுகில் அவருக்கு ராஜபிளவை என்ற கட்டி ஏற்பட்டது. பல வைத்தியர்கள் வந்து மருத்துவம் பார்த்தனர், ஆனால், ஏதும் பலனளிக்கவில்லை. நிறைவாக குன்றக்குடி சண்முகநாதரின் அருட்பிரசாதம் (விபூதி) குணப்படுத்தியது என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இச்செய்தி முருகப் பெருமானின் பெருமையை நமக்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

கந்த சஷ்டி விரதம் இருந்து, இத்தலத்தில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதி மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்வர் என்பது ஐதீகம். ஒவ்வொரு கார்த்திகை நட்சத்திர தினத்திலும், கந்த சஷ்டி உற்சவ தினங்களிலும் இத்தலத்துக்கு எண்ணற்ற பக்தர்கள் வந்திருந்து, முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, கந்த சஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்கின்றனர். ’வேலுண்டு வினையில்லை... மயிலுண்டு பயமில்லை’ என்பதே ஒவ்வொரு பக்தரின் தாரக மந்திரமாக உள்ளது.

திருவிழாக்கள்

பங்குனி உத்திரத் திருவிழா (10 நாள்), தைப்பூசத் திருவிழா (10 நாள்) ஆகியன இத்தலத்தின் முக்கிய திருவிழாக்கள் ஆகும். சித்திரை - பால் பெருக்கு விழா, வைகாசி - விசாகப் பெருவிழா, ஆனி - மகாபிஷேகம், ஆடி - திருப்படி பூஜை, ஆவணி மூலம் - பிட்டுத் திருவிழா, புரட்டாசி - அம்பு போடும் திருவிழா, ஐப்பசி - கந்த சஷ்டி திருவிழா என்று ஆண்டு முழுவதும் இங்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

நேர்த்திக் கடன்

குன்றக்குடி காவடி சிறப்பானதாக போற்றப்படுகிறது. குன்றக்குடி முருகப் பெருமானுக்கு காவடி எடுத்தால் செயல்படுத்த முடியாத திட்டங்களைக் கூட செயல்படுத்தி வெற்றி பெறலாம். நடக்காத செயல்களையும் நடக்கச் செய்துவிடலாம். நினைத்தவை கைகூடியே தீரும். நோய் நீங்க, துன்பம் நீங்க, குழந்தை வரம் கிட்ட, ஆயுள் பலம் பெற, கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் ஆகியன செழிக்க இத்தலத்தில் வழிபாடு செய்யப்படுகிறது.

காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல் ஆகிய நேர்த்திக் கடன்கள் செலுத்தப்படுகின்றன. ஆண்கள் உடற்பிணி தீர அங்கப்பிரதட்சணம் செய்வதுண்டு. பெண்கள் கும்பிடு தண்டமும், அடிப்பிரதட்சணமும் செய்வது வழக்கம். உடல் உபாதைகள் நீங்க, வெள்ளியால் ஆன அந்தந்த உறுப்பு வடிவங்களை காணிக்கையாக பக்தர்கள் செலுத்துவர். தோல் வியாதி தீர, சொரி படை நீங்க சரவணப் பொய்கையிலும், இடும்பன் சந்நிதியிலும் உப்பு, மிளகு போடும் வழக்கம் உள்ளது.

விவசாயிகள் அறுவடைக் காலம் முடிந்ததும் தானியங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். மலைப் படிகளில் அரிசி தூவும் வழக்கமும் உள்ளது. இவை தவிர சண்முக வேள்வி, சண்முகார்ச்சனை செய்தல், கார்த்திகை விரதம் இருத்தல், எளியோருக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு நன்கொடை செய்தல் என்றெல்லாம் நேர்த்திக் கடன் பட்டியல் நீள்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE