பிராட்டிக்காக மேற்கு நோக்கி வீற்றிருக்கும் ஜெகன்நாதப் பெருமாள்!

By மு.இசக்கியப்பன்

நாதன் கோவில் எனப்படும் திரு நந்திபுர விண்ணகரம் சோழ நாட்டு திவ்யதேசங்களில் ஒன்று. ஜெகன்நாதப் பெருமாள் வடக்கே ஒடிசா மாநிலம் புரியில் வீற்றிருப்பது போல், இங்கும் வீற்றிருப்பதால் இது தட்சிண ஜகன்நாதம் எனப்படுகிறது. மூலவர் ஜெகன்நாதப் பெருமாள் மேற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறார்.

அமர்ந்த கோலத்தில் ஜெகன்நாதப் பெருமாள் செண்பகவல்லி தாயார்

நந்திபுர விண்ணகரம் துவாபர யுகத்திலேயே நாதன் கோவில் என்றே அழைக்கப்பட்டது. “நாதன் உறைகின்ற நந்திபுர விண்ணகரம்” என்பதே திருமங்கையாழ்வாரின் பாடலிலும் வந்துள்ளது.

திருப்பாற்கடலில் எம்பெருமானின் பாதாரவிந்தங்களையே பற்றிக் கொண்டிருந்த மகாலட்சுமி பிராட்டி, தேஜஸ் பொருந்திய எம்பெருமானின் திருமார்பைக் கண்டாள். எம்பெருமானின் திருமார்பில் தான் குடியேறி நித்யவாசம் செய்ய வேண்டும் என்ற ஆசை பிராட்டிக்கு ஏற்பட்டது.

இதற்காக செண்பகாரண்யம் எனப்படும் நாதன் கோவிலுக்கு வந்து கடும் தவம் இயற்றினாள்.

தேவியின் பிரிவாற்றாமையைத் தாங்க முடியாத பெருமாள் ஒரு ஐப்பசி மாதம் சுக்கில பட்ச வெள்ளிக்கிழமை அன்று தேவிக்கு காட்சி தந்து, அவளது எண்ணப்படியே தமது நெஞ்சில் திருமகளை ஏற்றுக் கொண்டார்.

கிழக்கு நோக்கி தவஞ்செய்த நிலையிருந்த பிராட்டியை, பெருமான் எதிர்கொண்டு ஏற்றுக் கொண்டமையால் இத்தலத்தில் எம்பெருமான் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருமகளின் எண்ணத்திற்கு இசைந்து பிராட்டியை நெஞ்சில் ஏற்றுக்கொண்டதால் பெருமானுக்கு போக ஸ்ரீநிவாசன் என்றும் ஒரு பெயர் உண்டாயிற்று. தாயாரின் திருநாமம் செண்பகவல்லி.

ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஜெகன்நாதப் பெருமாள், திரு நந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்)

சாபம் தீர்ந்த நந்தி

அதிகார நந்தி என்றும், நந்திகேஸ்வரர் என்றும் அழைக்கப்படும் சிவபெருமானின் வாகனமான நந்தி, ஒரு சமயம் மஹா விஷ்ணுவைக் காண வைகுண்டத்திற்கு வந்தார். காவலில் நின்ற துவார பாலகர்களைக் கேளாது உள்ளே புக முயன்றபோது, துவார பாலகர்கள் தடுத்து, ‘காரணம் காணாத அளவுக்கு உன் உடம்பில் உஷ்ணம் எரிந்து கொண்டிருக்கக் கடவது’ என்று சபித்துத் திருப்பியனுப்பினர்.

உடல் உஷ்ணம் தாங்க முடியாமல் தவித்த நந்திகேஸ்வரர், சிவபெருமானின் அறிவுரைப்படி இத்தலத்துக்கு வந்து தவமிருக்க, பெருமாளும் மனமிரங்கி சாப விமோச்சனம் தந்தார். தன் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும் என நந்திகேஸ்வரர் விண்ணப்பிக்க, மகாவிஷ்ணுவும் இசைந்தார். இதனால் இந்த தலத்துக்கு திரு நந்திபுர விண்ணகரம் என்றும், இங்குள்ள தெப்பக்குளத்துக்கு நந்தி தீர்த்த புஷ்கரணி என்றும் பெயர் ஏற்பட்டது.

இக்கோவில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஸ்ரீ வானமாமலை மடத்தின் ஆதிக்கத்தில் உள்ளது. இங்கு திருப்பணிகள் நிறைவுற்று மே 22-ம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கின. 24-ம் தேதி காலை 6.05 மணிக்கு மகா கும்பாபிஷேகம், தொடர்ந்து மூலவர் பெருமாளுக்கு சம்ப்ரோக்ஷணம் ஆகியவை, நான்குநேரி வானமாமலை மடம் 31-வது பட்டம் ஸ்ரீ மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமையில் நடைபெறுகின்றன. 24-ம் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE