சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் ஸ்ரீ செளம்ய நாராயணப் பெருமாள் கோவில்மைந்துள்ளது. ‘வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்’ என்று சுவாமி பெரியாழ்வாரால் பாடப்பட்ட திருத்தலம் இது.
சம்பிரதாய விஷயங்களை முற்காலத்தில் குரு தனது சீடனுக்கு சொல்வார். சீடன் பிற்காலத்தில் தனது சீடருக்குச் சொல்வார். இப்படியே குரு - சீடனுக்குள் மட்டுமே சம்பிரதாய விஷயங்கள் பகிரப்படும். மற்றவர்களுக்கு தெரியாது. இதற்கு அநுவ்ருத்த பிரஸந்நாசார்ய பரம்பரை என்று பெயர்.
ஸ்ரீ ரங்கத்தில் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவாமி ஆளவந்தாருக்கு சீடர்கள் ஏராளம். ஒவ்வொருவரும் ஞானக் கடலாகத் திகழ்ந்தனர். அவர்களின் ஒருவரான சுவாமி திருக்கோஷ்டியூர் நம்பி வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் திருக்கோஷ்டியூரில் அவதரித்தார். சம்பிரதாய விஷயங்களை பகவத் ராமானுஜருக்கு கற்றுக் கொடுக்க சுவாமி ஆளவந்தாரால் நியமிக்கப்பட்ட ஐந்து ஆசார்யர்களில் இவரும் ஒருவர்.
இவரிடம் ரகஸ்ய அர்த்தங்களை அறிவதற்காக பகவத் ராமானுஜர் திருக்கோஷ்டியூருக்கு சென்றார். திருக்கோஷ்டியூரின் எல்லையில் இருந்து, நம்பியின் வீடு வரை தரையில் விழுந்தும், பின்னர் எழுந்தும் நமஸ்காரம் செய்து கொண்டே பகவத் ராமானுஜர் சென்றார். அப்போதுதான் நம்பியின் பெருமை அந்த ஊர் மக்களுக்கே தெரியவந்தது.
எனினும் உடனடியாக ராமானுஜருக்கு பாடங்களை அவர் கற்றுத் தரவில்லை. மறுமுறை வருமாறு கூறி ராமானுஜரை திருப்பி அனுப்பினார். இவ்வாறு 17 முறை ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு வந்தபோதும் பாடம் சொல்லித் தர அவர் மறுத்துவிட்டார்.
18- வது முறையாக பகவத் ராமானுஜர் அங்கு சென்றபோதுதான் திருமந்திர ரகஸ்ய அர்த்தத்தை திருக்கோஷ்டியூர் நம்பி கற்றுக் கொடுத்தார்.
ஆனால் பகவத் ராமானுஜர், ஆன்மாக்கள் அத்தனை பேரும் ஸ்ரீ மந் நாராயணனை அடைவதற்கான வழியைச் சொல்லும், திருமந்திர உபதேசத்தை அனைத்து மக்களுக்கு கேட்க வேண்டும் என்று கருணையோடு எண்ணினார். அப்படியே செளம்ய நாராயணப் பெருமாள் கோபுரத்தின் மேலே ஏறிநின்று, ஊர்மக்கள் அத்தனை பேருக்கும் அதனை வெளிப்படுத்தினார்.
இச்சம்பவத்திற்கு பின்னரே, சம்பிரதாய விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆசையுடன் வரும் அத்தனை பேருக்கும் அதனைக் கற்றுத்தரலாம் என்ற க்ருபாமாத்ர பிரபன்னாசார்ய பரம்பரை பகவத் ராமானுஜரில் இருந்து தொடங்கியது.
திருக்கோஷ்டியூர் நம்பியின் அவதார திருநட்சத்திரமான வைகாசி ரோகிணி நாளான இன்று, திருக்கோஷ்டியூரிலும், மற்ற திவ்ய தேசங்களிலும் இன்று விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.