கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள திருத்தலம் திருவெள்ளியங்குடி. இங்கு கோலவில்லி ராமர் புஜங்க சயனக் கோலத்தில் கிழக்கு நோக்கி சயனித்திருக்கிறார். தாயார்: மரகதவல்லி நாச்சியார்.
வாமன அவதாரத்தோடு தொடர்புடையது இக்கோவில். ஸ்ரீ மகாவிஷ்ணு வாமனனாக அவதாரம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலத்தை தானம் கேட்டார். மகாபலியும் கமண்டல நீரினால் நிலைத்தை தாரை வார்த்துக் கொடுக்க தயாரானார்.
வந்திருப்பவர் சிறுவன் அல்ல, மகாவிஷ்ணு தான் என்பதை அறிந்த மகாபலி மன்னனின் குரு சுக்கராசார்யார், சிறு வண்டாக மாறி கமண்டலத்தின் வாய்க்குள் புகுந்து அடைத்துக் கொண்டார். வாமனன் ஒரு தர்ப்பைப் புல்லால் கமண்டலத்தின் வாய்க்குள் குத்தவே, அது வண்டாக இருந்த சுக்கராசார்யாரின் கண்ணைக் குத்தியது. இதனால் ஒரு கண்ணை இழந்த அவர் பிரம்மதேவனின் வழிகாட்டுதலின் படி தவமிருந்து மீண்டும் கண் பார்வை பெற்ற இடம் அவரது பெயராலேயே (சுக்கிரன் என்றால் வெள்ளி என அர்த்தம்) திருவெள்ளியங்குடி என ஆயிற்று.
இங்குள்ள கருடாழ்வார் 4 கரங்களுடன் கைகளில் சங்கு சக்கரங்களும் கொண்டதாகக் காட்சித்தருவது வேறு எந்த தலத்திலும் காண முடியாதது.
இக்கோவிலில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்துவரும் காட்சியை இன்றும் காணலாம். இவ்வாழையே தலவிருட்சமாகவும் விளங்குகிறது.
வெள்ளியங்குடிக்கு அருகாமையில் சேங்கானூர் என்ற ஊர் உள்ளது. இதுதான் வைணவமேதை பெரியவாச்சான் பிள்ளையின் அவதார தலம் ஆகும்.
திருவெள்ளியங்குடியில் வைகாசி பிரம்மோற்சவம் 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். போதுமான வருவாய் இல்லாமல் பல ஆண்டுகளாக இங்கு பிரம்மோற்சவம் நடைபெறாமல் இருந்தது. நடப்பாண்டு பக்தர்கள் முயற்சியால் 12 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் மே 16-ம் தேதி தொடங்கியது. மே 25-ம் தேதி வரை தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா கண்டருள்கிறார். மே 22-ம் தேதி திருக்கல்யாணமும், 24-ம் தேதி தேரோட்டமும், 26-ம் தேதி விடையாற்று உற்சவமும் நடைபெறுகின்றன.