பழநி முருகன் கோயிலில் மே 18-ம் தேதி போகர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
பதினெண் சித்தர்களில் ஒருவர் போகர். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 500 - 100-ம் ஆண்டுகள். பழநியில் அவதரித்த போகர், சித்த மருத்துவம், ரசவாதம், தத்துவம், தவம், எழுத்து, அஷ்டாங்கயோகம், காயகற்பம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கியவர். இத்துறைகளில் பல்வேறு நூல்களை படைத்தவர். நவசித்தர்களில் ஒருவரான காலங்கி நாதர் இவரது குரு. இந்தியா மட்டுமல்ல சீனா உட்பட ஆசிய நாடுகள் பலவற்றிலும் போகர் வழிபாடு தற்போதும் உள்ளது. பழனி மலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மூலவர் திருவுருவச்சிலையை நவபாஷாணங்களைக் கொண்டு போகர் வடிவமைத்தார். புலிப்பாணி சித்தர் உட்பட இவரது சீடர்கள் பலரும் புகழ்பெற்று விளங்கின.
போக முனிவரின் சுவடிகள் பலவும், சென்னை சுவடிகள் மையம், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம், கேரள பல்கலைக்கழக சுவடிப்புலம், புதுச்சேரி பிரெஞ்சுக் கழக நூலகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாக்கப்படுகின்றன.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உள்ள போகர் சன்னதியில் ஆண்டுதோறும் போகர் ஜெயந்தி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த விழா மே 18-ம் தேதி நடைபெற உள்ளது. அடிவாரம் புலிப்பாணி ஆசிரமம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.