கரூர் மாரியம்மனுக்கு வைகாசி பெருந்திருவிழா!

By மு.இசக்கியப்பன்

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் புகழ்பெற்ற கரூர் மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா நேற்று (14.05.2023) கம்பம் நாட்டுதலுடன் தொடங்கி 11.06.2023 வரை நடைபெறவுள்ளது.

அமராவதி ஆற்றில் இருந்து கம்பம் எடுத்து வரும் நிகழ்வு

நேற்று காலை அமராவதி ஆற்றில் இருந்து கம்பம் எடுத்து வரும் நிகழ்வும், மாலையில் கோவில் வாசலில் கம்பம் நடும் நிகழ்வும் நடைபெற்றது. வரும் 19.05.2023 வெள்ளிக்கிழமை இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது கரூர் நகரத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விதவிதமான பூக்கள் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும். தொடர்ந்து அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அம்மனின் முகம் மட்டும் தெரியும் வகையில் டன் கணக்கான பூக்களால் பூச்சொரிதல் நடைபெறும்.

21.05.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை காப்பு கட்டுதலும், அதைத் தொடர்ந்து ரிஷப வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும். 22-ம் தேதி திங்கட்கிழமை புலி வாகனத்திலும், 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு பூத வாகனத்திலும், 24-ம் தேதி புதன்கிழமை இரவு வெள்ளி சிம்ம வாகனத்திலும், 25-ம் தேதி வியாழக்கிழமை இரவு வெள்ளி அன்ன வாகனத்திலும், 26-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சேஷ வாகனத்திலும், 27-ம் தேதி சனிக்கிழமை இரவு யானை வாகனத்திலும், 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு குதிரை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா வருகிறார்.

கரூர் மாரியம்மன் திருக்கோயில்

வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 29-ம் தேதி திங்கட்கிழமை காலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. தேரில் மாரியம்மன் எழுந்தருள, ரதவீதிகளில் தேர் வலம் வருகிறது. அன்று இரவு காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து காட்சி தருகிறார். 30-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கஜலட்சுமி வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது. 29, 30-ம் தேதிகளில் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்தி கடன்கள் செலுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

முக்கிய நிகழ்வான கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி 31ம் தேதி காலை நடைபெறுகிறது. கோவிலில் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அதனை அங்கிருந்து எடுத்து ஊர்வலமாக கோவில் பூசாரிகள் எடுத்துச் செல்வார்கள். பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரை வரை நடைபெறும் ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பார்கள். பின்னர் ஆற்றில் கம்பம் விடப்படும். அன்று கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையைத் தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE