காரைக்கால்: புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட காரைக்கால் சவுந்தராம்பாள் சமேத ஒப்பிலாமணியர் கோயிலில் ஆண்டுதோறும் மாமுனிவர் அகத்தியருக்கு, சிவபெருமான் அருளிய திருமணக் காட்சியை விளக்கும் வகையில், திருக்கல்யாண வைபவம் பல்வேறு நிகழ்வுகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு வைபவம் மே 13-ம் தேதி தொடங்கியது. முதல்நாளில் விநாயகர் புறப்பாடு நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பிற்பகலில் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர், அகத்தியர் தென்புலம் செல்லும் நிகழ்வும், உச்சிகாளியம்மன் கோயிலில் இருந்து வரிசை பொருட்கள் கொண்டு வரும் நிகழ்வும் நடைபெற்றன.
தொடர்ந்து, பார்வதி சமேத பரம சிவன் ஊஞ்சலில் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி, மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் செய்யப்பட்டு, பார்வதி தேவிக்கு திருமாங்கல்யதாரணம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
திருக்கல்யாண வைபவத்தை அகத்தியர் நேரடியாக காண்பது போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்னர் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
» திடீரென அடைக்கப்பட்ட அழகர்கோவில் மலைப்பாதை - 4 கி.மீ. மலைப் பாதையில் நடந்து சென்ற பக்தர்கள்