சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள திவ்யதேசங்களில் மாமல்லபுரம் ஒன்று. கடல்மல்லை எனப்படும் இங்கு ஸ்தலசயனப் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். 15-ம் நூற்றாண்டில் தற்போதைய நிலையில் இக்கோயிலைக் கட்டி திருப்பணிகள் செய்தவர் சுவாமி பிள்ளைலோகம் ஜீயர். இவர் அவதரித்த நாள் சித்திரை மாதம் திருவோணம்.
ஸ்ரீ வைஷ்ணவத்தை பரப்புவதற்காக பகவத் ராமானுஜர் 74 சிம்மாசனாதிபதிகளை நியமித்தார். அவர்களில் நடுவிலாழ்வான் என்பவர் ஒருவர். இவரது வம்சத்தில் பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் என்பவர் அவதரித்தார். இவர் சுவாமி மணவாள மாமுநிகளின் பிரதான எட்டு சீடர்களான அஷ்டதிக் கஜங்களில் ஒருவராகத் திகழ்ந்தார். பரவஸ்து பட்டர்பிரான் சுவாமியில் பேரனாக அவதரித்தவர் பிள்ளைலோகம் ஜீயர்.
சுவாமி மணவாள மாமுநிகளின் சரிதத்தை விவரிக்கும் ‘யதீந்திரப் பிரணவ பிரபாவம்’ என்ற நூலை இயற்றியவர் இவரே. ஸ்ரீரங்கத்தில் பெரியபெருமாள் சன்னதியில் ஒருமுறை இவர் இந்நூலை காலட்சேபம் செய்தார். இதைக்கேட்டு மகிழ்ந்த பெரிய பெருமாள், சுவாமி பிள்ளை லோகாசார்யர் வழிபட்டு வந்த அழகிய மணவாளன் என்ற விக்ரகத்தை இவருக்கு கொடுக்க, அதுமுதல் இவருக்கு பிள்ளைலோகம் ஜீயர் என்ற பெயர் ஏற்பட்டது.
ராமானுஜரின் வாழ்க்கையை விவரிக்கும் ராமானுஜ திவ்யசரிதை, திருவாய்மொழி நூற்றந்தாதி வியாக்யானம், நாலாயிர திவ்ய பிரபந்த தனியன்களுக்கு வியாக்யானம், உபதேச ரத்தினமாலை வியாக்யானம் என 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.