வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் இன்று சித்திரை தேர்த்திருவிழா

By மு.இசக்கியப்பன்

தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதக் கடைசி செவ்வாய்க் கிழமை தொடங்கி வைகாசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை வரை எட்டு நாட்கள் நடைபெறுவது வழக்கம். வழக்கமாக இந்நாட்கள் அக்னி நட்சத்திர வெயில் காலமாக இருக்கும். தேனி மாவட்டத்திலேயே மிகவும் பெரிய அளவில் நடைபெறும் இக்கோயில் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

நடப்பாண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ம் தேதி முல்லைப் பெரியாற்றில் இருந்து முக்கொம்பு வடிவிலான கம்பம் கொண்டு வரப்பட்டு கௌமாரியம்மன் கோயில் முகப்பில் நடப்பட்டது.

முக்கியமான 8 நாள் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (மே 9-ம் தேதி) தொடங்கியது. மே 16-ம் தேதி வரையான இந்த 8 நாட்களும் 24 மணி நேரமும் கோயில் திறந்திருக்கும்.

அக்கினிச் சட்டி எடுத்துவரும் பெண்பக்தர்

அலகு குத்தியும், அக்கினிசட்டி எடுத்தும், சேற்றாண்டி வேடமிட்டும், மஞ்சள் நீராடியும், ஆயிரம் கண் பானைகள் எடுத்தும், நெய் விளக்கு ஏற்றியும் பக்தர்கள் விதவிதமான நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வருகின்றனர். மேலும் அம்மன் கோயிலில் நடப்பட்டு இருக்கும் கம்பத்துக்கு, முல்லை ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகமாக ஊற்றிவிட்டு, அதன்பிறகு அம்மனை வழிபடுகின்றனர்.

வீரபாண்டி ஸ்ரீ கெளமாரியம்மன்

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (மே 12-ம் தேதி) வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் தேரோட்டத்தின் முதல் நாளான நேற்று நிலையில் இருந்து பக்தர்களால் இழுத்து வரப்பட்ட தேர் கிழக்கு கோபுர வாயிலில் அம்மன் சந்நிதி முன்பாக நிறுத்தப்பட்டது. நாளை 13-ம் தேதி தெற்கு வாயிலிலும், 14-ம் தேதி மேற்கு வாயிலிலும் தேர் நிறுத்தப்பட்டு வழிபாடுகள் நடைபெறும். வரும் 15-ம் தேதி நிலையம் வந்தடையும். நான்கு நாட்களுக்குத் திருத்தேரில் இருந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மனுக்கு 16-ம் தேதி ஊர் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். அத்துடன் திருவிழா நிறைவுபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE