காஞ்சிபுரம்/பூந்தமல்லி: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள்மற்றும் வரதராஜ பெருமாள் கோயில்களில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத் துடன் தொடங்கியது.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ சுவாமி கோயிலின் வைகாசிதிருவிழாவையொட்டி நேற்று அதிகாலையில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன.
கருடாழ்வார் ஓவியம் பொறித்த கொடி, கோயில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. கொடியேற்றத்தின் போது ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் வரதராஜ பெருமாள் வெங்கடாத்திரி கொண்டை அலங்காரத்தில் வைர வைடூரிய ஆபரணங்கள் அணிந்து வந்தார்.
அவர் கோயில் கொடிமரம் அருகே உள்ளதேசிகர் சந்நிதிக்கு அழைத்து வரப்பட்டார். இந்த நேரத்தில் வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.
» காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆதிசங்கரர் ஜெயந்தி இன்று நிறைவு
» சென்னை | போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற பெண் கைது
விழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்ற விழா, நேற்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இதில், கொடி கம்பம் அருகே உள்ள உற்சவர் மண்டபத்தில் தங்க ஆபரணங்கள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீற்றிருக்க, கொடி கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
நாளை கருடசேவை: தொடர்ந்து, வரதராஜ பெருமாள் தங்கமுலாம் கேடயத்திலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த வைகாசி பிரம்மோற்சவ விழா மே 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 22-ம் தேதி (நாளை) காலை கருடசேவையும், 28-ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.