சென்னை பல்லாவரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருநீர்மலை. மாமலையாவது திருநீர்மலையே என்று திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற பெருமாள் திருக்கோவில் இது. மலைக்கோவிலில் உள்ள அரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலுமாக, வருடத்திற்கு இரண்டு தேர்த் திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. இதே திருத்தலத்தில் வீற்றிருக்கும் நரசிம்மருக்கு ஆனியிலும், உலகளந்த பெருமாளுக்கு ஆடியிலும் ஒருநாள் விழா நடக்கிறது. அப்போது இவ்விருவரும் அடிவாரக் கோவிலுக்கு எழுந்தருளி கருடசேவை கண்டருள்கின்றனர்.
திருநீர்மலை ஸ்ரீ ரெங்கநாத பெருமான் பிரம்மோற்சவம் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. 8-ம் தேதி கருட சேவை உற்சவம் நடைபெற்றது. வரும் 12-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக சித்திரை உத்திரம் நட்சத்திரத்தில் நீர்வண்ண பெருமாள் - அணிமாமலர்மங்கை தாயார் ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதுபோல், பங்குனி உத்திரத்தில் அரங்கநாதர் - அரங்கநாயகி திருக்கல்யாணம் நடக்கிறது. இக்கோவிலில் மூலவர் அரங்கநாதர் மலைக்கோவிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோவிலிலும் காட்சி தருகின்றனர். சித்திரை பிரம்மோத்சவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோவிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.