சமயபுரம் மாரியம்மன்: சங்கடங்களை தீர்க்கும் தாயாக விளங்கி வருகிறார் திருச்சி மாவட்டத்தில் வீற்றிருக்கும் சமயபுரம் மாரியம்மன். கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் ஆண் குழந்தையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் தேவகியிடமிருந்த பெண் குழந்தையை கொலை செய்வதற்காக மேலே தூக்கினான். அப்போது அந்த குழந்தை அவன் கையிலிருந்து மேலே எழும்பி வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் உள்ளிட்ட ஆயுதங்களை தரித்துத் தோன்றினாள். அந்த தேவியே மகா மாரியம்மன் என்று அழைக்கப்பட்டாள்.
மாரியம்மனின் உற்சவத் திருமேனியை ஆதியில் விஜயநகர மன்னர்கள் வழிபாடு செய்து வந்தனர். அந்த ஆட்சிக்கு தளர்ச்சி ஏற்பட்டபோது, அதை வேறொரு இடத்துக்கு பல்லக்கில் எடுத்துச் சென்றனர். சமயபுரத்தில் பல்லக்கை இறக்கி வைத்து விட்டு உணவு உட்கொண்டு விட்டு மீண்டும் வந்து பல்லக்கை தூக்கிய போது அதை தூக்க முடியவில்லை. அதன் பிறகு விஜயரங்க சொக்கநாதர் கண்ணனூரில் தனிக்கோயில் அமைத்து அம்மனை பிரதிஷ்டை செய்தார் என்று கூறப்படுகிறது.
சித்திரைத் தேர்த் திருவிழா, மாசி மாத பூச்சொரிதல், தைப்பூசத் திருவிழா, பஞ்சப்பிரகார விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வதுண்டு. ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு முதல், 28 நாட்களுக்கு சமயபுரம் மாரியம்மன், பக்தர்களுக்காகவும் உலக நன்மைக்காகவும் பச்சைப் பட்டினி விரதம் மேற்கொள்வதாக ஐதீகம். இந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, திராட்சை, ஆரஞ்சு ,இளநீர், பானகம் மட்டும் படைக்கப்படும்.
ஈரோடு பண்ணாரி மாரியம்மன்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப் பகுதியில், திண்டுக்கல் - மைசூரு தேசிய நெடுஞ் சாலையில் பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பண்ணாரியைச் சுற்றியுள்ள கிராம மக்கள், தங்கள் மாடுகளை, மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். அப்போது பட்டியில் உள்ள ஒரு பசுமாடு மட்டும், தோரணப்பள்ளம் என்ற ஓரிடத்தில் நிற்பதும், அங்கு அதன் மடியிலிருந்து பால் தானாகவே சொரிவதையும் கிராம மக்கள் கண்டுள்ளனர். அந்த இடத்தை தோண்டிப்பார்த்தபோது, அங்கு சுயம்பு வடிவ சிலை இருந்தது.
இதையடுத்து அந்த இடத்தில் கூரை அமைத்து, ‘பண்ணாரி மாரியம்மன்’ எனப் பெயரிட்டு வழிபாடு செய்யத் தொடங்கியதாக கோயில் தல வரலாறு கூறுகிறது. அதன்பின், 22 அடி அகலத்துக்கு சுற்றுப்பிரகார மண்டபம் மற்றும் தங்கரதம் சுற்றி வர 22 அடி அகல மண்டபம் என படிப்படியாக கோயில் விஸ்தரிக்கப் பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் பண்ணாரி மாரியம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கிழக்கு பகுதியில் சந்தான விநாயகரும், தென்மேற்கில் மாதேஸ்வரரும், மேற்குப்பகுதியில் தெப்பக்குளம் அருகே சருகுமாரியம்மன் ஆலயங்களும் அமைந்துள்ளன.
அம்மன் சந்நிதிக்கு அடுத்த மண்டபத்தில் மேற்கு பார்த்த முகமாய் பொம்மையராய சுவாமிகளும், மகா மண்டபத்தில் கிழக்கு பார்த்த முகமாய் விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். ஆண்டுதோறும், பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில், தமிழகம் - கர்நாடகாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது பண்ணாரி மாரியம்மன் கோயிலின் தனிச்சிறப்பாகும்.
கூடுவாஞ்சேரி லலிதா பரமேஸ்வரி அம்மன்: கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியுடன் சொரூபமாக, லலிதா பரமேஸ்வரி அம்மன் மற்றும் முத்துமாரி அம்மன், கனக துர்க்கை அம்மனுக்கு தனி சந்நிதிகள் உள்ளன. இங்கு, லலிதா பரமேஸ்வரி சமேத மாமரத்தீஸ்வருடன் அருள் பாலிக்கிறார்.
ஆடி மாதத்தில் இங்குள்ள அனைத்து அம்மன்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நவராத்திரியில் ஒன்பது நாட்கள் சிறப்பு பூஜைகளுடன் சண்டி யாகம், தேவி மகாத்மியம் பாராயணம் என ஒவ்வொரு நாளும் களை கட்டும். இதில், நெய்க்குளம் தரிசனம் மிக சிறப்பான முறையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
வரும் ஆடி மாத இரண்டாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று, கோயில் வளாகத்தில் முத்துமாரி அம்மனுக்கு 108 பால்குடம் பக்தர்களால் ஊர்வலமாக, எடுத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.
கோயிலில் உள்ள முப்பெரும் தேவியரை இந்த ஆடி மாதத்தில் தரிசனம் செய்வது மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கு, வீடு கட்ட வேண்டி வருவோருக்கு அந்த வரங்களை வழங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
வில்லிவாக்கம் தேவி ஸ்ரீ பாலியம்மன்: சென்னை வில்லிவாக்கத்தில் பழமை வாய்ந்த சக்தி தலமாக இருப்பது ஸ்ரீ பாலியம்மன் திருக்கோயில். பாலியம்மன் இங்கு கைகளில் கத்தி, சூலம், கபாலம், உடுக்கை ஆகியவற்றை ஏந்தி பக்தர்களுக்கு காட்சித் தருகிறார். பாலியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தால் குடும்பத்தில் நிம்மதி நிலவும் என்ற நம்பிக்கை உள்ளது.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள், செய்வினை கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் பாலியம்மனை மனமுருகி வேண்டி அபிஷேகம் செய்தால், அங்கப்பிரதட்சணம் செய்தால் பிரச்சினைகள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. எந்தவகையான நீங்க வேண்டிய குணாதிசயங்கள் இருந்தாலும், இந்த மண்ணை மிதித்தால், அவர்களின் குணங்கள் மாறி அன்னையின் அருள் அவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
பக்தர்களுக்கு என்ன குறை இருந்தாலும், அன்னையின் பாவாடை துணியால் மந்திரித்து, வேப்பிலை அடித்து, விபூதி, குங்குமம் பூசினால் அவர்களின் குறை உடனடியாக நிவர்த்தியடையும். ஆடி மாதம் முழுவதும் பாலியம்மனுக்கு விழா தான். ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ் வார்த்து, சீர் கஞ்சி ஊற்றி விழா நடைபெறும்.
ஆடி கடைசி வாரத்தில் இங்கு தீ மிதி திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறும். திருமணமாகாதவர்கள் இக்கோயிலில் உள்ள சுமார் 300 ஆண்டு பழமையான அரச மரத்தில், மஞ்சள் கயிற்றை கட்டி பூஜை செய்தால், 48 நாட்களில் திருமணம் கைகூடும் என்பதும் நம்பிக்கை. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் இங்கு நாகதோஷ நிவர்த்தி சர்ப்ப சாந்தி பெற்று சுகமடையலாம்.
பஞ்சுப்பேட்டை திரௌபதி அம்மன்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே, அரக்கோணம் சாலை பிரியும் இடத்துக்குப் பக்கத்தில் பஞ்சுப்பேட்டை பகுதியில் உள்ளது அருள்மிகு பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் திருக்கோயில். கோயிலின் மூலவராக திரௌபதி அம்மன் வீற்றிருக்கிறார். அவருடன் குந்திதேவி, பஞ்ச பாண்டவர்கள் உள்ளிட்டோரும் இங்கு தெய்வங்களாக எழுந்தருளியுள்ளனர்.
கோயிலின் பின் பகுதியில் சப்த கன்னிகள் வீற்றிருக்கின்றனர். இங்கு, சித்திரை மாதத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தீ மிதித் திருவிழா 22 நாள் உற்சவமாக கோலாகலமாக நடைபெறும். இதில், 11 நாட்கள் தெருக்கூத்து நடத்தப்பட்டு, அனைத்து நாட்களிலும் பாரத கதை படிக்கப்படும்.
அர்ஜூனன் தபசு நடைபெறும் நாளில் பக்தர்களுக்கு வழங்கப்படும் எலுமிச்சை பழம் பிரசாதம் இங்கு மிக விசேஷம். இதைச் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாதோர் இங்கு வழிபாடு செய்வதுண்டு. அம்மனின் வரம் பெற்று, இந்தக் கோயிலிலேயே திருமணம் செய்வோரும் உண்டு.
இத்திருமண வைபவங்களுக்காக கோயில் வளாகத்திலேயே மண்டபம் உள்ளது. உணவு பரிமாறவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் தீ மிதித் திருவிழா தவிர்த்து, ஆடி மாதத்தில் விளக்கு பூஜையும் நடைபெறும். இந்த பழங்கால கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. திங்கள்கிழமை தோறும் சிறப்பு வழிபாடும் பஞ்சுப்பேட்டை திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெறுகிறது.
கொரட்டூர் நாகவல்லி அம்மன் கோயில்: சென்னை, கொரட்டூர் டிஎன்எச்பி குடியிருப்பு 47-வது தெருவில் ஓம்சக்தி நாகவல்லி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் புற்றும், வேப்பமரமும் மட்டும் அமைந்திருக்க, நாகவல்லியை இங்கு பிரதிஷ்டை செய்து, பக்தர்கள் வழிபட, நற்காரியங்கள் கைகூட, கோயிலாக உருபெற்று, அம்மன் இங்கு அருள்பாலிக்கிறார்.
வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தரும் நாகவல்லி அம்மனிடம் குழந்தை வரம், திருமண வரம் வேண்டி வந்து, அப்பலன் பெற்றுச் செல்வோர் உண்டு. 1,500 பேர் பால்குடம், 600 பேர் தீ மிதித்தல் என ஆடி மாத இரண்டாவது வார திருவிழா இந்த நாகவல்லி அம்மன் கோயிலில் களை கட்டுகிறது.
ராகு - கேது தோஷம் கொண்டோர், தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கான சிறப்பான தலம் இது. இங்குள்ள நாக லிங்கேஸ்வரருக்கு பிரதோஷத்தின்போது சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மதுரை முக்குறுணி விநாயகரைப் போல, இங்கும் ஒரு விநாயகர் அருள்பாலிக்கிறார்.
அவருக்கு சங்கடஹர சதுர்த்தி, பைரவருக்கு அஷ்டமி பூஜை மற்றும் கிருத்திகை உள்ளிட்ட பிற பூஜைகளும் இக்கோயிலில் நடைபெறுகின்றன. நடப்பாண்டுக்கான ஆடித் திருவிழா தற்போது தொடங்கி, 28-ம் தேதி வரை சிறப்பு வழிபாடுகளுடன் கோலாகலமாக நடந்து வருகிறது. தொடர்ந்து ஆக.16-ம் தேதி திருவிளக்கு பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புலியகுளம் மாரியம்மன்: கோவையில் உள்ள பழமையான அம்மன் கோயில்களில் முதன்மையானது புலியகுளம் மாரியம்மன் கோயில். வடக்கு நோக்கி நின்ற கோலத்தில், அம்மன் இக்கோயிலில் காட்சி தருகிறார். கருவறையில் முன்புறம் குறிஞ்சி மண்டபமும், உள்ளே முன் மண்டபத்தில் கொடிமரமும் காட்சியளிக்கின்றன. இக்கோயில் வளாகத்தில் விநாயகர், முருகன், தேவேந்திரன் எனப்படும் இந்திரன், துர்க்கையம்மன், நவ நாகர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன.
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வேண்டுதலுடன் இக்கோயிலுக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஆடி மாதம் முழுவதும் அம்மன் அருள் வேண்டி பூஜைகள் நடைபெற, ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரங்களில் அம்மன் காட்சி தருகிறார். இங்கு வந்து பூப்போட்டுப் பார்த்து, அம்மனின் உத்தரவு கேட்டு, அதன்பின் வீட்டில் நல்ல காரியங்களை நடத்துவது உண்டு. திருமணத் தடை நீங்க, வீட்டில் உள்ளவர்களின் நோய்கள் தீர என இந்த அம்மனை வேண்டிச் செல்வோர் உண்டு.
இக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள துர்க்கை அம்மனுக்கு வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் ராகு கால நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவையில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக, 9 நாக சிலைகளுடன் கூடிய நவ நாகர் சந்நிதி இங்குள்ளது. ஏழரை அடி உயரத்தில் இரும்பினால் ஆன, பிரத்யேக சனீஸ்வர பகவான் சந்திதியும் இங்கிருப்பது, இந்த அம்மன் கோயிலின் தனிச்சிறப்பு. தினமும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து, அம்மனின் அருள் பெற்றுச் செல்கின்றனர்.
சென்னை மாம்பலம் முப்பாத்தம்மன்: சென்னையின் மையப்பகுதியாக திகழும் தியாகராயர் நகரில் (மாம்பலம்) கோயில் கொண்டு, முப்பாத்தம்மன் அருள்பாலித்து வருகிறார். ஒருகாலத்தில், தற்போதைய பனகல் பூங்காவின் பின்புறத்தில் வயல்கள் நிறைந்து காணப்பட்ட பகுதியில், விவசாயிகள் நெல், வாழை, காய்கறி, பூச்செடிகள் மற்றும் பழம் தரும் மரங்களை விதைத்தனர், இப்பகுதியில் வேப்ப மரம், அரச மரம் அருகில் பாம்பு புற்று ஒன்றை அடையாளம் கண்ட அவர்கள், தங்கள் வழிபாட்டை அங்கு தொடங்கினர்.
அதே இடத்தில் அம்மன் விக்கிரகம் ஒன்றும் கண்டெடுக்கப்பட, அதை புற்றின் அருகே பிரதிஷ்டை செய்து, மக்கள் வழிபடத் தொடங்கினர். முப்போகமும் விளையும் நிலத்தில் இருந்து அம்மன் விக்கிரகம் கண்டெடுக்கப்பட்டதால், அம்மன் ‘முப்பாத்தம்மன்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.
‘முப்பாத்தம்மனை வேண்டி, ஒரு செயலைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்’ என்ற நம்பிக்கையுடன் இருந்த மக்களுக்கு, அமோக விளைச்சலை அம்மன் அருளினார். வெட்டவெளியில் இருந்த சந்நிதிக்கு முதலில் கூரை அமைக்கப்பட்டது. பின் மண்டபம் எழுப்பி, சந்நிதிக்கு விமானம் அமைத்து, பரிவார தேவதைகளை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு வைபவமும் நடைபெற்றது. தற்போது ஐந்தாவது தலைமுறையாக வழிபாடு நடைபெற்று வருகிறது.
300 ஆண்டுகள் பழமையான கோயிலில் சூலம், சிம்மத்தின் எதிரே கருவறையில் முப்பாத்தம்மன் அமர்ந்த கோலத்தில் பின்னிரு கரங்களில் உடுக்கை, பாசம், முன்னிரு கரங்களில் சூலம், கபாலம் ஏந்தியபடி அருள்பாலிக்கிறார். சுற்றியுள்ள சிறிய கோயில்களில் முப்பாத்தம்மனின் உத்தரவுக்குப் பிறகே உற்சவங்கள் தொடங்குகின்றன. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு சிறப்பு வழிபாடு செய்கின்றனர். 365 நாட்களும் இக்கோயில் விழாக் கோலம் பூண்டிருக்கும்.
சேலம் சின்ன மாரியம்மன்: ‘சேலம் மாநகரின் காவல் தெய்வம்’ என பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில், திருமணிமுத்தாறு நதிக்கரையின் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது. பழங்காலத்தில், பாதுகாக்கப்பட்ட கோட்டையாக இருந்த இடத்தில், அம்மன் வீற்றிருக்க, கோட்டைக்கு வெளியே வசிக்கும் பாமர பக்தர்கள், கோட்டைக்குள் எளிதில் வந்து, வழிபட முடியாமல் தவித்தனர்.
பக்தர்களின் குறையை அறிந்தவளான பெரிய மாரியம்மன், கோட்டைக்கு வெளியே வந்து, சின்னக்கடை வீதி என்னும் இடத்திலும் குடி கொண்டு, பாமர பக்தர்களுக்கும் தாயாகி அருள்பாலிக்க, இங்குள்ள அம்மனுக்கு, ‘சின்ன மாரியம்மன்’ என்ற பெயர் வழங்கலாயிற்று.
இதன் காரணமாகவே, கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கியதும், அதைத் தொடர்ந்து இங்கும் பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கும். பின்னர், பெரிய மாரியம்மன் கோயிலில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு, சின்ன மாரியம்மன் கோயிலுக்கு வந்துவிட்டு தான் மீண்டும் கோயில் திரும்பும். பழங்காலத்தில், ஊர் மக்களால் வீண் பழி சுமத்தப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பெண்ணை, தனது திருவிளையாடல் மூலம் ‘உத்தமி’ என உணர்த்தியதாக சின்ன மாரியம்மனின் அருள் பற்றி சிலிர்த்துக் கூறும் பக்தர்கள் உண்டு.
குழந்தை வரம் வேண்டுகிற பெண்கள், சின்ன மாரியம்மனுக்கு வளையல் வைத்து வழிபடுவதும், அந்த வளையல்களை தங்கள் கைகளில் அணிந்து வளைகாப்பு வழிபாடு நடத்துவதும் இக்கோயிலில் இன்றளவும் பிரசித்தம். இக்கோயிலில் வளையல் வாங்கி வேண்டுதல் வைத்தால் அவர்களுக்கு உடனே திருமணமும், தொடர்ந்து வளைகாப்பும் நடைபெறும் என்பது நம்பிக்கை.
ஈரோடு பெரிய மாரியம்மன்: ஈரோடு நகரின் மையப்பகுதியில், மீனாட்சி சுந்தரனார் சாலையில், மாநகராட்சி அலுவலகத்தின் எதிர்புறத்தில் பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஈரோட்டின் காவல் தெய்வமாக போற்றப்படும் பெரிய மாரியம்மன் கோயிலின் கிழக்கு பிரகாரத்தில் நாச்சியார் சிலையும், மேற்கு பிரகாரத்தில் பரசுராமரும், பட்டாலம்மனும் எழுந்தருளியுள்ளனர்.
கருவறையில், கரங்களில் நாக பந்தத்துடன் உடுக்கை, பாசம், கபாலம், கத்தி ஆகியவற்றுடன் அமர்ந்த கோலத்தோடு இருக்கும் அன்னையை கண் குளிர வழிபடலாம். இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பின் கீழ் உள்ள இக்கோயிலில், காலை 6 மணிக்கு காலை சந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 6 மணிக்குச் சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.
ஆடி மாதம் முழுவதும் பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. குறிப்பாக ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் பக்தர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். ர்த்திக் கடனாக கூழ் காய்ச்சி அம்மனை வேண்டி வருவோருக்கு வழங்குவது, மா விளக்கு போடுதல், பூக்கள் மற்றும் உப்பினை படைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இக்கோயில் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் கோயில்களையும் சேர்த்து ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடக்கும் குண்டம், தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கம்பத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆற்றில் விட்டு, திருவிழாவை நிறைவு செய்யும் நடைமுறை உள்ளது.