செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலில் முருகப் பெருமான் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியுள்ளார். இங்கு பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த யந்திரத்தில் முருகப் பெருமானின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. செவ்வாய் கிரகத்துக்கு அதிபதியாக முருகப் பெருமான் இருப்பதால், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இந்த யந்திரத்துக்கு (ஸ்ரீசக்ரம்) திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது வழக்கம்.
கந்தசுவாமி கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. முருகப் பெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றபின் யந்திரத்துக்கு பூஜை நடைபெறும். பிரம்மதேவருக்கு உரிய அட்சர மாலை மற்றும் கண்டிகை, சிவபெருமானை போல வலது கையால் அருள்பாலிக்கும் அபயஹஸ்த நிலை, திருமாலைப் போல இடது கையை தொடையில் வைத்துக் கொண்டிருக்கும் ஊருஹஸ்த நிலை என்று பக்தர்களுக்கு காட்சி அருள்வதால், இத்தல முருகப் பெருமான் மும்மூர்த்திகளின் அம்சமாகப் போற்றப்படுகிறார்.
தல வரலாறு
ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவர்கள் மற்றும் முனிவர்களுக்கு அசுரர்கள் பல இன்னல்களைக் கொடுத்து வந்தனர். அவர்களைக் காக்கும் பொருட்டு, முருகப் பெருமான் அசுரர்களை அழிக்கப் புறப்பட்டார். அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை அழிக்கும் பொருட்டு இந்த போர்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் போரிட்டு மாயையை அடக்கினார். இதன் மூலம் உலகம் நிலையானது என்பது உணர்த்தப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து வினைப்பயனை (கன்மம்) அழித்தார். திருப்போரூரில் கந்தசுவாமியாக எழுந்தருளி விண்ணில் போர் செய்து ஆணவத்தை அடக்கி ஞானத்தை அருளியுள்ளார்.
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இன்னல்கள் கொடுத்துவந்த தாரகாசுரனை அழிப்பதாக அவர்களுக்கு உறுதியளித்த முருகப் பெருமான், இத்தலத்தில் தாரகாசுரனை அழித்தார். தாரகாசுரனுடன் போர் நடைபெற்றதால் இத்தலம் புனிதப் போரின் இடமாகக் கருதப்பட்டு திருப்போரூர், தாருகாபுரி, சமராபுரி என்று அழைக்கப்படுகிறது.
பாலதேவராய சுவாமி, கந்த சஷ்டி கவசத்தில் ‘சம்ராபுரி வாழ் சண்முகத்தரசே’ என்று இத்தல முருகப் பெருமானைப் போற்றிப் பாடியுள்ளார். பொதிகை மலை செல்லும் வழியில் அகத்திய முனிவர், இத்தல முருகப் பெருமானை தரிசித்துள்ளார்.
பல காலமாக கவனிக்கப்படாத நிலையில் இருந்த இக்கோயில் ஒருசமயம் மண்ணில் புதையுண்டு போனது. ஒரு பனை மரத்தடியில் மூலவர் சிலை இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், திருப்போரூரில் மண்ணில் புதையுண்டு போன தனது விக்கிரகம் குறித்து தெரிவித்தார். அதன்படி சிதம்பர சுவாமியும் இத்தலத்துக்கு வந்து முருகப் பெருமான் விக்கிரகத்தைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார்.
ஒருசமயம் திருப்போரூர் பகுதியை ஆட்சி புரிந்த ஆற்காடு நவாப் மன்னர், தனது மனைவிக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டதை நினைத்து வருந்தினார். சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்த மன்னர், அவரை சந்திக்க வந்தார். சிதம்பர சுவாமிகள் கொடுத்த திருநீற்றைப் பூச, நவாப் மனைவியின் வயிற்று வலி நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நவாப், சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோயிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்தார்.
காட்டுப் பகுதியை சீரமைத்து, சிதம்பர சுவாமிகள் அங்கு கோயில் எழுப்பினார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்களைப் பாடிய சிதம்பர சுவாமிக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. இத்தல முருகப் பெருமானைப் பற்றி இவர் பாடிய ‘திருப்போரூர் சந்நிதி முறை’ என்ற பிரபந்தம் சிறந்த இலக்கியப் புகழ் பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாத விசாக நட்சத்திர தினத்தில் சிதம்பர சுவாமிக்கு குருபூஜை நடத்தப்படுகிறது. அப்போது முருகப் பெருமான் எதிரே சிதம்பர சுவாமி விக்கிரகத்தை வைத்து, அவர் முருகப் பெருமானுடன் இரண்டறக் கலப்பது போன்ற நிகழ்வு நடைபெறும்.
கோயில் அமைப்பும் சிறப்பும்
பதிமூன்றாம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டில், திருப்போரூர் தொண்டை நாடு, ஆமூர் கோட்டத்தில் உள்ள ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிரம சோழர் ஏற்படுத்திய நிவந்தங்கள், விஜய கண்டதேவர் நந்தா விளக்காகப் பொன் கொடுத்த சம்பவங்கள் ஆகியவற்றை விளக்கும் கல்வெட்டுகள், தெய்வானை கோயில் சுவர்களில் சிதைந்து காணப்படுகின்றன.
திருப்போரூர் கோயிலின் பிரதான வாயில் தெற்கு நோக்கு அமைந்துள்ளது. கருவறையில் முருகப் பெருமான் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூல மூர்த்திக்கு முன்னால் மிகச் சிறிய வள்ளி, தெய்வானை, கந்தன் விக்கிரகங்கள் உள்ளன. கந்தன் கரங்களில் உடம்பிடி, குலிசை முதலிய ஆயுதங்கள் இல்லாமல், தூக்கிய கரங்களில் ஜெபமாலை மற்றூம் கமண்டலம் காணப்படுகின்றன.
24 தூண்களுடன் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. ஒவ்வொரு தூணிலும் ஒரு கையில் கேடயம், ஒரு கையில் வாளும் உடைய நவவீரர் முதலானோரின் உருவங்கள் உள்ளன. பிரளயத்தால் ஆறு முறை அழிவைச் சந்தித்து, ஏழாவது முறை கட்டப்பட்ட கோயில்தான் தற்போது உள்ளது. ஓம்கார அமைப்பில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது சந்நிதியில் இருந்து பார்த்தால், முன்னால் செல்பவர்களின் முதுகுப்பகுதி தெரியாதபடி நுட்பமாக கட்டப்பட்டுள்ளது. முருகப் பெருமான் சந்நிதி கோஷ்டத்தில் பிரம்மதேவர் இடத்தில் பிரம்ம சாஸ்தா (முருகப் பெருமானின் ஒரு வடிவம்) உள்ளார். இக்கோயிலில் நவக்கிரக சந்நிதி கிடையாது.
கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள குன்றில் கைலாசநாதர், பாலாம்பிகை கோயில் உள்ளது. மலை மீது சிவபெருமானும், மலையடிவாரத்தில் முருகப் பெருமானும் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. முன்பொரு காலத்தில் சுயம்புமூர்த்தியாகத் தோன்றிய முருகப் பெருமான் விக்கிரகம் மட்டுமே இருந்துள்ளது. பின்னர் வள்ளி மற்றும் தெய்வானை விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சுயம்பு மூர்த்திக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாத்தப்படுகிறது.
முருகப் பெருமானின் சிலை கண்டறியப்பட்டபோது அது ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போல் இந்த பாத்திரம் செல்வத்தைத் தருவதாக நம்பப்படுவதால், நைவேத்தியத்துக்கான அரிசி இதில் வைக்கப்பட்டுள்ளது.
சிவபெருமான் கோயில்களில் அம்பிகைக்கும், திருமால் கோயில்களில் தாயாருக்கும் நவராத்திரி விழா நடத்தப்படுவதைப் போல இத்தலத்தில் வள்ளிக்கும் தெய்வானைக்கும் நவராத்திரி நடைபெறுகிறது. ஒன்பது நாட்களில் இரு தேவியருக்கும் ஒன்பது விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. முருகப் பெருமானுக்கு, ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகமும், மாசி மாத சிவராத்திரி தினத்தில் இரவு நேரத்தில் நான்கு கால பூஜையும் நடைபெறுகிறது.
முருகப் பெருமான் சந்நிதி சுற்றுச்சுவரில் குக்குடாப்தஜர் விக்கிரகம் உள்ளது. இவர் முருகப் பெருமானின் ஒரு வடிவமாகப் போற்றப்படுகிறார். (குக்குடம் - சேவல்). ஒரு கையில் சேவலை வைத்துக் கொண்டிருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. பாஸ்போர்ட், விசா தொடர்பான சிக்கல் மற்றும் தாமதம் இருந்தால், இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. வெளிநாடு செல்ல இயலாதவர்கள் இப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர் களுக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் இவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தல முருகப் பெருமானை , ‘சகல வேதங்களின் வடிவம்’ என்று போற்றுகிறார். இதன் காரணமாக, கந்தசுவாமி ‘வேத உச்சி யாக சுவாமி’ என்றும் அழைக்கப்படுகிறார். கல்வியில் சிறக்க, அனைத்து வேதங்களுக்கும் தலைமையாக இருக்கும் இத்தல முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
அதிரச அம்பிகை
திருப்போரூர் கோயில் பிரகாரத்தில் வன்மீகநாதர் சந்நிதியும் புண்ணியகாரணியம்மன் சந்நிதியும் அமைந்துள்ளன. பக்தர்களுக்கு புண்ணியம் கிடைக்க காரணமாக அம்பாள் இருப்பதால், புண்ணியகாரணியம்மன் என்று அழைக்கப்படுகிறார்.
சிவபெருமான் சந்நிதியின் மேல் உள்ள விமானத்தில் ஒரு கலசம் இருக்கும், இத்தல அம்பாள் சந்நிதியின் மேல் உள்ள விமானம், ஐந்து கலசங்களுடன் அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நடைபெறும் கேதார கௌரி விரத தினத்தில் அம்பாள் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விதவிதமான இனிப்பு வகைகள் அம்பாளுக்கு நைவேத்தியம் செய்யப்படும். பெண்கள், தங்கள் சுமங்கலி பாக்கியத்துக்காகவும், கணவரது உடல் ஆரோக்கியத்துக்காகவும் அம்பாளுக்கு அதிரசம் படைத்து வேண்டிக் கொள்வர்.
திருவிழாக்கள்
திருப்போரூர் தலத்தில் கந்த சஷ்டி விழா, நவராத்திரி, வைகாசி விசாக விழா, மாசி பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. கந்த சஷ்டி விழாவில் கஜமுகன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன், அஜமுகி, தாரகாசுரன் ஆகிய அசுரர்களை முருகப் பெருமான் வதம் செய்வார். கந்த சஷ்டி விழாவின் மூன்றாம் நாளில் முருகப் பெருமானுக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். கையில் வில்லேந்தி, மயில்மேல் காலை வைத்தபடி இருக்கும் சம்ஹார முத்துக் குமார சுவாமிக்கு கோயிலில் சிலை வைத்துள்ளனர்.
மாசி பிரம்மோற்சவத்தின்போது முருகப் பெருமான், பிரம்மதேவருக்கு பிரணவ மந்திரம் உபதேசம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். சிவபெருமானின் மடியில் அமர்ந்தபடி, அவருக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்யும் முருகப் பெருமான் சிலையும் இங்கு உள்ளது. சிவபெருமான் தன் வாய் மீது கை வைத்தபடி உபதேசம் பெறுவது சிறப்பு. இந்நிகழ்வில் திருமால், விநாயகர், நந்திதேவர், பிரம்மதேவர், இந்திரன் முதலானோர் உடனிருப்பர்.
வைகாசி விசாக தினத்தில் சுவாமிக்கு திருப்பாவாடை வைபவமும், தைப்பூச விழாவை ஒட்டி தெப்பத் திருவிழாவும் நடைபெறும். திருவிழா நாட்களில் சுவாமிக்கு திரிசதி அர்ச்சனை, அபிஷேகம், பால்குடம் சுமந்து, காவடி எடுத்து, அலகு குத்திக்கொண்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன் செலுத்துவர்.