காக்கும் கார்த்திகைச் செல்வன் - 18

By கே.சுந்தரராமன்

நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் குழந்தைகளின் பயத்தைப் போக்கும் தலமாக அமைந்துள்ளது. ஒருவர் பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை இத்தல முருகப் பெருமான் மாற்றிக் கொண்டு அருள்பாலிப்பார். குழந்தையாக நினைத்துப் பார்த்தால், குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்துப் பார்த்தால் முதியவர் வடிவிலும் காட்சி அளிப்பார்.

இத்தல விருட்சமான வன்னி மரத்தடியில் வான்மீகர் என்ற சித்தர் சமாதியானதாகக் கூறப்படுகிறது. தீபாவளி தினத்தில் கொண்டாடப்படும் கேதார கௌரி விரதம் தோன்றியது இத்தலத்தில்தான் என்பது தனிச்சிறப்பு.

தல வரலாறு

நாகப்பட்டினம் அருகே உள்ள பொருள்வைத்த சேரி கிராமத்தில் சிற்பி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் ‘சரவண பவ’ என்று கூறி, ஆறுமுகனை நினைத்து தியானித்து வந்தான். ஒருசமயம் தன் நாட்டைக் காக்கும் வகையில் முருகப் பெருமானுக்காக சிலை செய்ய வேண்டும் என்று அப்பகுதியை ஆட்சி புரிந்த சோழ மன்னர் விருப்பம் கொண்டார். தனது விருப்பத்தை சிற்பியிடம் மன்னர் தெரிவிக்க, அதன்படி இரவு பகல் பாராது கண்விழித்து வேலவன் சிலையை செய்தான் சிற்பி. சோழ மன்னர் சிலையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், இதுபோன்று மற்றொரு சிலையை அந்த சிற்பி செய்துவிடக் கூடாது எண்ணினார். உடனே அந்த சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டார்.

இதனால் மிகுந்த வருத்தமடைந்த சிற்பி, அந்த ஊரை விட்டுக் கிளம்பி அடுத்த ஊருக்குச் சென்றான். கைவிரல் இல்லாத நிலையிலும் உழைத்து உண்ண வேண்டும் என்று நினைத்த சிற்பி, அங்கு முருகப் பெருமானை வேண்டி, உயிர்த் துடிப்புள்ள கல்லைத் தேர்ந்தெடுத்து மற்றொரு முருகன் சிலையைச் செய்தான். இந்தச் சிலையைக் கண்ட குறுநில மன்னன் முத்தரசன், மெய்மறந்து நின்றார். சிலையில் இருந்து ஒளி வீசுவதைக் கண்டார். ஆறுமுகனின் உடலில் அக்னி ஜூவாலை உண்டானது. சிலை செய்யும் பணி நிறைவு பெற்றதும், அந்தக் கல்லிலேயே முருகப் பெருமான் வாகனமான மயிலையும் செதுக்கினார் சிற்பி. அப்போது முருகன் அமர்ந்திருந்த மயிலுக்கு உயிர் வந்து பறக்கத் தொடங்கியது.

மயில் பறக்கத் தொடங்கியதை அறிந்த மன்னர், அதை ‘எட்டிப்பிடி’ என்று பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அவர்களும் அதைப் பின்தொடர்ந்து போய் பிடித்தனர். ஆனால், அதன் கால்கள் சிறிது உடைபட்டன. மேலும், மயிலின் நகத்தில் அந்த சிற்பி சிறிது மாறுதல்கலைச் செய்ததும், மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. ‘எட்டிப்பிடி’ என்ற அந்த வார்த்தையே காலப்போக்கில் ‘எட்டுக்குடி’ ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதுவே இந்த ஊருக்கும் பெயராக அமைந்துவிட்டது.

முருகப் பெருமானே நேரில் நிற்பது போல் தோற்றம் கொண்ட முருகன் சிலைக்கு அங்கேயே மன்னர் கோயிலை எழுப்பினார். இந்தச் சிலைதான் எட்டுக்குடி சௌந்தரேஸ்வரர் கோயிலில் இன்றும் உள்ளது. தற்போதும் அச்சிலையில் இருந்து குருதி வெளியேறுவதாக நம்பப்படுகிறது.

இதே சிற்பி மற்றொரு முருகன் சிலையைச் செய்தான். அந்த சிலை எண்கண் தலத்தில் வைக்கப்பட்டது. சிற்பி செய்த முதல் சிலை சிக்கலிலும், இரண்டாவது சிலை எட்டுக்குடியிலும், மூன்றாவது சிலை எண்கண்ணிலும் வைக்கப்பட்டது. இந்த மூன்று சிலைகளுமே ஒரே தோற்றம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் அமைப்பும் சிறப்பும்

எட்டுக்குடி முருகன் தலத்தில் சஷ்டி விரதமும், கவுரி விரதமும் ஒன்றாக கடைபிடிக்கப்படுகிறது. முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்ய இத்தலத்தில் இருந்து புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மூலவர் கருவறையில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்துள்ளார். இந்த மயில் சிற்பத்துக்கு ஆதாரமாக தரையின் மீதுள்ள அதன் இரு கால்கள் மட்டுமே இருப்பது தனிச்சிறப்பு. முருகப் பெருமான் சந்நிதிக்கு வலது புறத்தில் சௌந்தரேஸ்வரர் சந்நிதியும் இடது புறத்தில் ஆனந்தவல்லி அம்பாள் சந்நிதியும் உள்ளன. கோயில் முன்னர் சரவணப் பொய்கை என்ற தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் கை பட்டாலே பாவ நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

வான்மீகி சித்தர்

கோயிலில் கூத்தாடும் விநாயகர், ஜுரதேவர், சீனிவாச சௌந்தரராஜப் பெருமாள், ஆஞ்சநேயர், மனோன்மணி அம்மை, ஐயப்பன், மகாலட்சுமி, நவக்கிரகங்கள், சனி பகவான், பைரவர் சந்நிதிகள் உள்ளன. பிரகாரத்தில் முருகப் பெருமானுடன் சூரசம்ஹாரத்துக்கு துணையாகச் சென்ற 9 வீரர்களின் உருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

முருகப் பெருமான் சூரனை அழிப்பதற்காக அம்பறாத் துணியில் இருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீரமும் அழகும் கொண்டவராகத் திகழ்வதால், இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விளக்கிச் சொன்னால், அவர்கள் ஆற்றல் கொண்டவர்களாகத் திகழ்வார்கள் என்பது ஐதீகம்.

அருணகிரிநாதர் திருப்புகழ்

’ஓங்கு மைம்புல னோட நினைத்தின் பயர்வேனை

ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் தனையாள்வாய்

வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் புகடாவி

வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் குமரேசா

மூங்கி லம்புய வாச மணக்குஞ் சரிமானு

மூண்ட பைங்குற மாது மணக்குந் திருமார்பா

கங்கை யங்கறு பாசில் மனத்தன் பர்கள்வாழ்வே

காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் பெருமாளே!’

“மிதந்து வளரும் ஐந்து புலன்களான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் முதலியன என்னை இழுத்தோட, யானும் அவ்வழியே ஓட நினைத்து இன்பம் கொண்டு தளர்ச்சி அடைவேன். ஓம் முதலிய பிரணவ மந்திரங்கள் அனைத்தையும் எனக்கு உபதேசித்து நீ என்னை ஆண்டருள வேண்டும். வில்லை வளைத்து கொடிய அம்புகளை ஏவி சூரர் குல இளைஞர்கள் பாய்ந்து வரும்போது, அச்சேனையை அம்பு செலுத்தியே வென்றவன் நீ.

மூங்கிலைப் போன்று அழகிய புயங்களை உடைய நறுமணம் கொண்டர் தெய்வயானையையும், உன் மேல் அளவு கடந்த காதலும் பக்தியும் கொண்ட அழகிய குறப்பெண் வள்ளியையும் மணந்த திருமார்பனே! மனக்கொதிப்பே இல்லாதவர்களும், பந்த பாசம் ஆகியவற்றை நீக்கிய மனதுடையவர்களுக்கும் செல்வமாக விளங்குபவனே. காஞ்சிரங்குடி (எட்டுக்குடி) என்ற தலத்தில் ஆறுமுகத்தோடு அமர்ந்த எங்கள் பெருமாளே!” என்று இத்தல முருகப் பெருமானைப் போற்றிப் பாடுகிறார் அருணகிரியார்.

திருவிழாக்கள்

சித்ரா பௌர்ணமி விழா இங்கு 10 நாட்கள் நடைபெறும். பௌர்ணமி தினத்துக்கு முதல் நாளே நடை திறக்கப்பட்டு பால் அபிஷேகம் தொடங்கும். பௌர்ணமிக்கு மறுநாள் வரை தொடர்ந்து பால் அபிஷேகம் நடைபெறுவது தனிச்சிறப்பு. பௌர்ணமிக்கு முதல் நாள் நடைபெறும் தேரோட்ட விழாவில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பால் காவடிகள் எடுத்துச் செல்வர். முருகப் பெருமான் இத்தலத்தில் உக்கிர கோலத்தில் இருப்பதால், அவரைக் குளிர்விக்க பால் அபிஷேகம் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

முருகப் பெருமானுக்கு ஐப்பசி கந்த சஷ்டி விழா (6 நாள்), வைகாசி விசாக விழா (1 நாள்), அம்மையப்பனுக்கு மார்கழி திருவாதிரை விழா என்று கோயில் எப்போதும் விழாக் கோலம் பூண்டு காணப்படும். பக்தர்கள் ஒன்று கூடி கந்தன் குறித்த பாடல்கள், திருப்புகழ்கள் பாடுவது வழக்கம்.

ஒவ்வொரு மாத கார்த்திகை தினத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினத்தில் எதிரிகளால் ஏற்படும் துன்பம் தீர ‘சத்ரு சம்ஹார திரிசதை’ என்ற சிறப்பு பூஜை நடைபெறும். எதிரிகளால் ஏற்படும் நியாயமான துன்பங்களுக்காக மட்டுமே இந்த பூஜையை செய்ய வேண்டும். எதிரிகளை அழிக்க வேண்டும் என்று நினைத்து இந்த பூஜை செய்தால், எதிர்வினைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. தேய்பிறை சஷ்டி, பிறந்த நட்சத்திர தினத்திலும் இந்த பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் முருகப் பெருமானின் ஆறுமுகங்களுக்கும் நைவேத்தியம், அபிஷேகம், புஷ்ப அலங்காரம் செய்யப்படுவது தனிச்சிறப்பு.

திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, பக்தர்கள், சுவாமிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். மேலும், ஆதிப் படை வீடு என்று அழைக்கப்படும் இத்தலத்தில் காவடி எடுப்பதும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

திருவாரூர் – வேதாரண்யம் பேருந்து வழித்தடத்தில் திருவாரூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். நாகப்பட்டினம் – திருத்துறைப்பூண்டி சாலையில் சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் இறங்கி, 2 கி.மீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE