தாம்பரம்: தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் பல கோடி மதிப்புள்ள ஸ்ரீஈந்த முக்கல் ஜாலாம்பாள் கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட 69 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அளவீடு செய்து எல்லைக்கல் நட்டு அறிவிப்பு பலகை வைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே பழைய பெருங்களத்தூரில் ஸ்ரீஈந்த முக்கல் ஜாலாம்பாள் திருக்கோயில் உள்ளது. சுமார் 400 ஆண்டு பழமையான கோயில் இது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான 69 சென்ட் நிலங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
அரசு உத்தரவுப்படி இவற்றை மீட்க, நிலங்களைக் கண்டறிந்து அளவீடு செய்யும் பணி தொடங்கியது. அதன்படி இன்று காலை இந்து சமய அறநிலையத் துறை செங்கல்பட்டு மாவட்ட வட்டாட்சியர் (நிலங்கள்) தங்கராஜ், செயல் அலுவலர் இரா.ப. தீபா, கோயில் அறங்காவலர்கள் ராஜாராமன், ஐயப்பன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் முதல்கட்டமாக பெருங்களத்தூர் கிராமம் யோகாம்மாள் தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்த 69 சென்ட் நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்களை நட்டனர். பின்னர் அறிவிப்பு பலகை வைத்தனர்.
» காஞ்சியில் மழைநீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்: அகற்றக் கோரி பொதுமக்கள் மறியல்
» ராமநாதபுரம் கனமழை: அதிகபட்சமாக கமுதியில் 12.44 செ.மீ பதிவு
தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாத்திடும் பொருட்டு நில அளவை செய்து, நில அளவை கற்கள் நடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணி, இந்து சமய அறநிலையத்துறையினர் வழிகாட்டுதல் படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் துரிதமாக நடந்து வருகிறது.
அதன்படி பெருங்களத்தூர் ஈந்த முக்கல் ஜாலாம்பாள் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் சர்வேயர் மூலம் அளவீடு செய்யப்பட்டு, நிலத்தின் எல்லையை குறிக்க எல்லை கற்கள் நடப்பட்டது. இதற்காக, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, தற்போது அளவீடு பணி நடைபெற்றது. கோயில் நிலத்தில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.