மனதுக்கு தைரியம் கொடுக்கும் ராகு - கேது மந்திரங்கள்!

By காமதேனு

ராகுவின் காயத்ரி மந்திரத்தையும் கேது பகவானின் காயத்ரி மந்திரத்தையும் தினமும் சொல்லி, விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால், மனதில் உள்ள குழப்பங்கள் விலகும். செய்யும் காரியங்களில் தெளிவு பிறக்கும். மனதில் தைரியமும் செயலில் வீரியமும் கிடைக்கப் பெறலாம்!

சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், ராகு - கேது பெயர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் எனப்படுகிறன. ‘சாயா’ என்றால் நிழல் கிரகங்கள் என்று அர்த்தம். எல்லா தருணங்களிலும் ராகு பகவானையும் கேது பகவானையும் பிரார்த்தித்து நம் கோரிக்கைகளை முன்வைப்பது எண்ணற்ற நன்மைகளைத் தந்தருளும் என்கிறார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.

ராகு பகவானுக்கு காயத்ரியையும் கேது பகவானுக்கு உரிய காயத்ரியையும் தினமும் சொல்லி வரலாம். இது மிகுந்த பலனைக் கொடுக்கும்.

ராகு பகவான் காயத்ரி:

நாக த்வஜாய வித்மஹே!

பத்ம ஹஸ்தாய தீமஹி!

தந்நோ ராகு ப்ரசோதயாத்!

இந்த ராகு காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபடலாம். முக்கியமாக, வியாழக்கிழமைகளில் தவறாமல் சொல்லி வரலாம். தினமும் 108 முறை இந்த மந்திரத்தை ஜபித்து வருவதுடன் எவருக்கேனும் தானம் வழங்கி வந்தால், ராகு முதலான சர்ப்ப தோஷங்கள், காலசர்ப்ப தோஷங்கள் முழுவதுமாக நீங்கப் பெறலாம்.

கேது மூல மந்திரம் :

ஓம் ஸ்ரம் ஸ்ரீம் ஸ்ரௌம் ஷக் கேதவே நம:

என்கிற மூலமந்திரத்தையும் ராகு காயத்ரியை சொல்லிவிட்டு, பாராயணம் செய்துவரலாம். வியாழக்கிழமைகளிலும் சங்கடஹர சதுர்த்தி முதலான விநாயகருக்கு உகந்த நாட்களிலும் இந்த மந்திரங்களை ஜபித்து எவருக்கேனும் தானங்கள் வழங்கி வருவது, நம் கிரக தோஷங்களைப் போக்கும். பாவங்களை நீக்கி புண்ணியத்தைத் தந்தருளும்.

ராகு - கேது பகவான்

கேது காயத்ரி மந்திரம்:

அச்வ த்வஜாய வித்மஹே!

சூல ஹஸ்தாய தீமஹி!

தந்நோ கேது ப்ரசோதயாத்!

- எனும் கேது காயத்ரியையும் கேது மூலமந்திரத்தையும் ராகு காயத்ரியையும் சொல்லிவந்தாலே, நம்மைச் சுற்றியுள்ள தீயசக்திகள் நம்மை விட்டு அகலும் என்பது ஐதீகம்.

ராகு கேதுவின் நாமங்களை தினமும் சொல்லி வருபவர்களுக்கு, சகல பிரச்சினைகளும் விலகும். தீராத நோய்களில் இருந்து விடுபடலாம். எதிரிகள் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கப் பெறலாம். தனம், தான்யம், பசு முதலான ஐஸ்வர்யங்கள் பெருகும். சகல செளபாக்கியங்களும் கிடைத்து நிம்மதியாக வாழ செய்வார்கள் ராகு பகவானும் கேது பகவானும்!

கறுப்பு நிற கடுகு தானம் கொடுப்பது நம் பாவங்களைத் தீர்க்கும். ராகு - கேதுவை வணங்கும்போது விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலையும் வெள்ளெருக்கு மாலையும் சார்த்தி வேண்டிக்கொள்வது மனக்கிலேசங்களைப் போக்கி, மனதில் தெளிவைக் கொடுக்கும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE