ஸ்ரீவில்லிபுத்தூர்/தூத்துக்குடி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஆக. 7-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஆண்டுதோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில், தேரோட்டத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடிப்பட்டம் மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடிமரத்துக்கு அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு கருட கொடியேற்றம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர், ராம்கோ குழுமஇயக்குநர் நிர்மலா ராஜு, ராம்கோகல்விக் குழும இயக்குநர் ஸ்ரீகண்டன் ராஜா, அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லதுரை, கோயில் செயல் அலுவலர் லட்சுமணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நாளான இன்று இரவு ஆண்டாள், ரெங்கமன்னார் 16வண்டி சப்பரத்தில், 4 ரத வீதிகளில் உலா வருகின்றனர். ஆகஸ்ட் 3-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் 5 கருட சேவையும், 5-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 9 மணியளவில் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூரில் ஆடி கிருத்திகை: தமிழகத்தில் பிரதான முருகன்கோயில்களில் ஆடி கிருத்திகைநேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. திருச்செந்தூர் கோயிலில்நேற்று நடைபெற்ற இவ்விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
மேலும், 108 மகாதேவர் சந்நிதி முன்பு சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டன மாலையில் சாயரட்சை பூஜை, கோயிலின் முதல் பிரகாரத்தில் திருவிளக்கு பூஜை, ஜெயந்திநாதர் புறப்பாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், மடிப்பிச்சை ஏந்தியும் வேண்டுதலை நிறைவேற்றினர்