காமதகன பூஜையில் கரும்பு நைவேத்தியம் செய்தால், நல்ல வாழ்க்கைத்துணை நிச்சயம்!

By காமதேனு

இன்று செவ்வாய்க்கிழமை - மாசி பெளர்ணமி, காமதகன பூஜை.

காமதகன நாளில், பூஜைகள் முடிந்து, அன்றைய மாலையில், முழு நிலவென ஜொலிக்கும் பெளர்ணமியில், சந்திர தரிசனம் செய்வதும் சந்திரனின் ஒளி படும் விதமாக, ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதும், கிரிவலம் முதலான வழிபாடுகளில் பங்கேற்பதும் கணவன் மனைவியிடையேயான ஒற்றுமையை பலப்படுத்தும். பிரிந்து சென்ற தம்பதி ஒன்று சேருவார்கள். நல்ல பண்பான, அன்பான வாழ்க்கைத்துணை அமையப் பெறலாம்.

நம் மனதில் உள்ள பற்றுகளை, ஆசைகளை ஒவ்வொன்றாக அறுத்து, நம்மைப் புதுப்பித்து நம்மை ஞானமார்க்கத்துக்குள் பயணிக்கச் செய்பவனே இறைவன். மாறாக, நமக்குள் சின்னச்சின்ன ஆசைகளையும் பெரிதாக்கி, நம்மை அந்த ஆசை என்னும் கடலுக்குள் மூழ்கடித்து, வேடிக்கை பார்ப்பவன் யார் தெரியுமா? அவன் தான் மன்மதன். சிற்றின்ப ஆசைகளைத் தூண்டிவிட்டு, நமக்குள் அவற்றை ஒவ்வொன்றாக பூதாகரமெடுத்து வளரச்செய்பவன் என்று மன்மதன் எனும் பெயருக்கு அர்த்தம் சொல்கிறது புராணம்.

’பெரிய மன்மதன்னு நெனப்பு’ என்று சிற்றின்பத்தில் திளைப்பவர்களைச் சொல்லுவார்கள். அதேபோல் கொஞ்சம் பேரழகுடன் இருந்தால் அந்தப் பெண்களை ‘ரதி’ என்று வர்ணிப்பார்கள். மன்மதனின் காதலி, மன்மதனின் மனைவிதான் ரதி! சிற்றின்பங்களை நமக்குள் பெருகச் செய்யும் குணம் கொண்டவன் என்றபோதும், ‘காதலின் கடவுள்’ என்றுதான் மன்மதனை புராணங்கள் புகழ்கின்றன.

ஒருவகையில் பார்த்தால், மன்மதனின் விளையாடல்களால்தான் ஆண் - பெண் ஈர்ப்பும், திருமண பந்தமும், குழந்தைப் பிறப்பும் என பிரபஞ்சத்தில் படைப்புத் தொழிலானது குறைவற நடக்கிறது. மகாவிஷ்ணுவின் மானஸ புத்திரன் மன்மதன் என்றும் சிவபெருமானின் நிஷ்டையைக் கலைத்து, அவரின் கோபத்துக்கு ஆளாகி, சிவனாரின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த கனலாலும் அனலாலும் எரிந்தவன் என்றும் புராணங்கள் மன்மதன் குறித்து தெரிவிக்கின்றன.

இதனால்தான் மன்மதனுக்கு ‘காமகோபன்’ என்ற பெயரும் அமைந்தது. சிவாகம நுல்களிலும் சிவபுராணங்களிலும் ‘காமதகனம்’ என்று விரிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கொரு புராணக் கதையும் உண்டு.

காசிபமுனிவரின் மனைவி மாயை. இவர்களுக்கு சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் என அசுரர்களாக மகன்கள் பிறந்தார்கள். இந்த மூன்று பேரும் படைப்புக் கடவுளான பிரம்மாவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார்கள். தவத்தின் பலனாக, வரங்களையும் பெற்றார்கள்.

எவரும் தங்களை நெருங்காதபடி, கடலுக்கு நடுவே பட்டினமொன்றை அமைத்தார்கள். அதை வீரமகேந்திரபுரம் என்று அழைத்தார்கள். அங்கிருந்துதான் இந்த அசுர சகோதரர்கள், 108 அண்டசராசரங்களையும் அடக்கி ஆர்ப்பரித்தார்கள். இதனால் இந்திரன் முதலான தேவர்களும் முனிவர் பெருமக்களும் மக்களும் பெரிதும் அவதிப்பட்டார்கள். இந்திரன், தன் தேசத்தையே இழந்து தவித்தான். தேவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு பிரம்மாவை தரிசித்து அவரிடம் தங்கள் இழப்புகளையெல்லாம் தெரிவித்தான் இந்திரன். ’’ஈசனும் பார்வதியும் இணைந்து உருவாக்கும் குமாரனால் மட்டுமே அந்த அசுரர்களை அழிக்கமுடியும்” என தெரிவித்தார் பிரம்மா. சிவ பார்வதிக்கு சிற்றின்ப ஆசையைத் தூண்டவேண்டும். அப்படித் தூண்டினால்தான் குமாரன் பிறப்பான்.

உடனே தேவர்கள், மன்மதனிடம் சென்று விஷயத்தையெல்லாம் விளக்கிச் சொன்னார்கள். “சிவசாபத்துக்கும் சிவகோபத்துக்கும் ஆளாகிவிடுவேன். வேண்டாம், என்னைவிட்டுவிடுங்கள்” என மன்மதன் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். ஆனால் தேவர்கள் விடாப்பிடியாக இருந்து சம்மதிக்கவைத்தனர். இதையடுத்துதான், தன் மனைவி ரதிதேவியையும் அழைத்துக்கொண்டு, திருக்கயிலாயத்துக்குச் சென்றான் மன்மதன்.

சிவபெருமான் தவமியற்றும் சோலைவனத்துக்குள் ஒளிந்திருந்து, மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவதற்குத் தயாராக இருந்தான். சிவபெருமான் வந்தார். தவம் மேற்கொண்டார். அப்போது மலர்க்கணையை சிவனார் மீது பாய்ச்சினான் மன்மதன். இதனால் தவம் கலைந்தது. இச்சைக்கு ஆளானார் சிவபெருமான். கடும் கோபத்துடன், புன்னைமரத்துக்குப் பின்னே ஒளிந்திருந்த மன்மதனை, தன் நெற்றிக்கண்ணால் எரித்தார் ஈசன். சாம்பலாகிப் போனான் மன்மதன்.

அதைக் கண்டு கதறியபடி ஓலமிட்டாள் ரதிதேவி. ‘’அசுரக்கூட்டத்தை அழிப்பதற்காகவும் தேவர்களுக்கும் முனிவர் பெருமக்களுக்கும் நன்மைகள் நடைபெற வேண்டும் என்பதற்காகவும் என் கணவர் விட்ட அம்பு இது. இந்த மன்மதனின் அம்பெல்லாம் உங்களுக்கு எம்மாத்திரம்? என் கணவரை உயிர்த்தெழச் செய்து எனக்குத் தாருங்கள்’’ என மன்றாடி வேண்டிக்கொண்டாள்.

சிவனாரும் மனமிரங்கினார். முதல்கட்டமாக, சிவபெருமானுக்கும் உமையவளுக்கும் திருமணம் நிகழ்ந்தது. மன்மதனுக்கு உயிர் கொடுத்தார். ‘’உன் கணவன் உயிருடன் எழுந்துவிட்டான். ஆனாலும் தவம் கலைத்த பாவம் அவனைவிடாது. எனவே, உன் கணவன், உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான். மகாவிஷ்ணு, பகவான் ஸ்ரீகிருஷ்ணாவதாரம் எடுக்கும் தருணத்தில், பிரத்யும்னன் என்ற பெயரில் பிறப்பான். நீ மாயாவதி என்ற பெயரில் அவதரிப்பாய்’’ என அருளினார் சிவபெருமான்.

காமனை எரித்ததே காமதகனம் எனும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஒரு பூஜைபோல் செய்கிற வழக்கம் இன்றைக்கும் பெரும்பாலான கிராமங்களில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதை காமன் பண்டிகை என்றும் சொல்கிறார்கள்.

மாசி மாதத்து பெளர்ணமியின் போது, ஊருக்கு நடுவே, ஒரு கரும்பை நட்டுவைப்பார்கள் மக்கள். மன்மதன் கையில் கரும்பு வைத்திருப்பான். அந்தக் கரும்பையே வில்லாக்கி மலர்க்கணை தொடுப்பான். அந்தக் கரும்பை மன்மதனாக பாவித்து, அந்தக் கரும்புக்கு தர்ப்பைகளும் மலர்களும் சார்த்துவார்கள். நன்றாக அழகுற அலங்கரிப்பார்கள். அப்போது ரதிதேவியின் உருவத்தையும் ஓவியமாக வரைந்து வைப்பார்கள். சில ஊர்களில் மரத்தால் செய்யப்பட்டு, மன்மதனுக்கும் ரதிதேவிக்கும் வர்ணம் பூசி, சிலைகளைப் போல் வைத்து பூஜிப்பதும் நடைபெறுகிறது.

முன்னதாக, மாசி மகத்துக்கு முன்னதாக, மன்மதனுக்கும் ரதிதேவிக்கும் திருமணம் நடக்கும் வைபவமும் நடந்தேறும். சிவ தவம், மலர்க்கணையால் தவம் கலைக்கும் மன்மதன், காமதகனம், ரதிதேவி சிவனாரிடம் மன்றாடுதல், மீண்டும் உயிர் பெற்று எழுந்து வருதல் என வில்லுப்பாட்டாகவும் நாடகமாகவும் அரங்கேற்றி மகிழ்வார்கள் மக்கள்.

மன்மதனாக பாவித்து நட்டுவைக்கப்பட்ட கரும்பை, தீயிட்டுக் கொளுத்துவார்கள். பிறகு, அப்படி எரியும்போது, அந்தத் தீயைச் சுற்றி, அந்தக் கரும்பைச் சுற்றி, மன்மதனைச் சுற்றி வலம் வந்து வேண்டிக்கொள்வார்கள். அப்படி வேண்டிக்கொண்டால், பூமி செழிக்கும், விவசாயம் தழைக்கும், வம்சம் விருத்தியாகும், வாழையடிவாழையென பரம்பரை சீரும் சிறப்புமாக வளரும், வளரச்செய்வார் மன்மதன் என்பது நம்பிக்கை.

மாசி பெளர்ணமியில், காமதகனம் நடந்ததாகச் சொல்லப்படுகிற நாளில், வீட்டில் மன்மதனை நினைத்தும் ரதிதேவியை நினைத்தும் விளக்கேற்றி, கரும்பு அல்லது கரும்புச்சாறு நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தினருக்கு வழங்கினால், இல்லத்தில் தடைபட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE