நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை. உலகில் எங்கிருக்கிறோமோ, அங்கே இருந்துகொண்டு நினைத்தாலே போதுமாம்... நமக்கு முக்தியைத் தந்தருளுவார் அண்ணாமலையார் என்பது ஐதீகம். அப்பேர்ப்பட்ட திருவண்ணாமலைக்கு, சித்தர்களின் பூமி என்ற பெருமையும் உண்டு. எத்தனையோ சித்தபுருஷர்களும் மகான்களும் யோகிகளும் நடந்த, வாழ்ந்த புன்ணிய க்ஷேத்திரம். அதனால்தான், மற்ற தலங்களை விட, திருவண்ணாமலைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் பக்தர்கள்.
மலையும் மலைக்கு முன்னதாக ஊருக்குள் அருணாசலேஸ்வரர் ஆலயமும் என கொள்ளை அழகுடன் காட்சி தரும் திருத்தலம் திருவண்ணாமலை. இன்னும் சொல்லப்போனால், மலையே சிவமெனத் திகழும் திருத்தலம் இது. அதனால்தான், ‘மலையும் நமசிவாயம், மண்ணும் நமசிவாயம்’ என்றெல்லாம் பாடிப் பரவசமானார்கள்.
மலையை கிரி என்றும் சொல்லுவார்கள். திருவண்ணாமலையின் மலையை, மலையடிவாரத்தை வலம் வந்து மலையே சிவமெனத் திகழும் சிவபெருமானை வேண்டிக்கொள்வது, சிவனருளையும் வழங்கவல்லது. சூட்சும வடிவில் உள்ள எண்ணற்ற சித்தபுருஷர்களின் ஆசியும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
அக்னி ஸ்தலமாகப் போற்றப்படுகிற திருவண்ணாமலையில், சந்திரன் குளிரக் குளிரக் காட்சி தருகிற பெளர்ணமி நன்னாளில், கிரிவலம் வருவது நம் உடலுக்கும் புத்திக்கும் எண்ணற்ற நல்லதிர்வுகளை வழங்கவல்லது என்கிறார் திருவண்ணாமலை திருக்கோயிலின் கார்த்திகேய சிவாச்சார்யர்.
மாசி மாதத்தை மகத்தான, மகத்துவம் நிறைந்த மாதம் என்பார்கள். மாசி மாத பெளர்ணமி கூடுதல் சிறப்பு கொண்டது. இந்த முறை பெளர்ணமி செவ்வாய்க்கிழமையில் வருவது இன்னும் சிறப்புமிக்கது என்கிறார்கள். மாசி மாத பெளர்ணமியில், திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 6-ம் தேதி திங்கட்கிழமை மாசி மகத்தில் தொடங்கி, செவ்வாய்க்கிழமை பெளர்ணமியில் நிறைவடைகிறது. அன்றைய தினம், காலை 5.08 மணிக்குத் தொடங்கி 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது என திருவண்ணாலை ஸ்ரீஅருணாசலேஸ்வர் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதுவாகவே பெளர்ணமி சிறப்புக்குரியது. பெளர்ணமியில் இறைவனை வழிபடுவது சிறப்பான பலன்களை வழங்கக்கூடியது. அதிலும் குறிபாக, நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது, இன்னும் பல வளங்களையும் நலன்களையும் நம் வாழ்வில் தந்தருளும். மாசி மாத பெளர்ணமி என்பது கூடுதல் பலன்களை வழங்கக்கூடியது. மாசி பெளர்ணமியில் மலையை வலம் வந்தால், மும்மடங்கு யோகங்களையும் பலன்களையும் பெறலாம்.
பெளர்ணமியில், கடவுளை தரிசிப்பதும் கிரிவலம் முதலான வழிபாடுகளில் ஈடுபடுவதும் இயலாதவர்களுக்கும் சாதுக்களுக்கும் தானங்கள் செய்வதும் புண்ணியத்தைத் தரவல்லது. திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில், ஏதோவொரு வடிவத்தில் சித்தபுருஷர்கள் இருக்கலாம். ஆகவே, நாம் தரும் தானமானது, அன்னதானமானது சித்தபுருஷர்களுக்காகக் கூட இருக்கலாம். ஆகவே, கிரிவலத்தின் போது தானம் செய்வது நம் பாவங்களைப் போக்கும். பகவான் ரமண மகரிஷி, ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் முதலான எண்ணற்ற மகான்களின் பரிபூரண ஆசியும் அருளும் கிடைக்கப் பெறலாம்!
திருவண்ணாமலை புண்ணிய க்ஷேத்திரம். வயதானவர்களும் உடல் நலிவுற்றவர்களும், ‘திருவண்ணாமலையில் கிரிவலம் வர வேண்டும் என்றுதான் விருப்பம். ஆனால் முடியவில்லையே...’ என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி முதலான தோஷங்கள் நீங்கிவிடும் என்கிறது அருணாசல புராணம்.
திருவண்ணாமலையில் இன்னொரு விசேஷம்... பெளர்ணமியன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டும் என்றில்லை. நாம் எப்போது நினைக்கிறோமோ, அப்போதெல்லாம் கிரிவலம் வரலாம்.
ஒவ்வொரு கிழமையில் கிரிவலம் வருவதற்கும் பலன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. திங்கட்கிழமை கிரிவலம் வந்து சிவனாரை தரிசித்தால், இந்திர பதவி கிடைக்கும். இழந்த பதவியையும் செல்வத்தையும் பெறலாம். செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால், கடன், வறுமை, தரித்திர நிலை நீங்கும். புதன்கிழமை கிரிவலம் வந்து பிரார்த்தனை மேற்கொண்டால், கலைகளில் தேர்ச்சி பெறலாம். வியாழக்கிழமை கிரிவலம் வந்து வேண்டிக்கொண்டால், ஞானமும் யோகமும் கிடைப்பது உறுதி. வெள்ளிக்கிழமை நாளில், கிரிவலம் வந்து வேண்டிக்கொண்டால், சிவலோகப் பதவி கிடைக்கப் பெறலாம். சனிக்கிழமை நாளில், கிரிவலம் வந்து ஈசனை தரிசித்தால், நம்முடைய வாழ்வின் பிறவிப்பிணி முழுவதும் அகலும். ஞாயிற்றுக்கிழமை நாளில் கிரிவலம் வந்து வேண்டிக்கொண்டால், அடுத்த பிறவி என்பது இல்லை என்கிறது அருணாசல புராணம்.
கிரிவலப் பாதை என்பது சுமார் 14 கிலோமீட்டர் கொண்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர், நமசிவாய மந்திரத்தை பாராயணம் செய்தபடி, சிவபுராணம் படித்தபடி, தேவார திருவாசகப் பாடல்களைப் பாடிக்கொண்டு வருகிறார்கள். இதுவே உத்தமமானது. பேசிக்கொண்டும் அரட்டையடித்துக் கொண்டும் வரக்கூடாது. சிவபுராணம் முதலான விஷயங்கள் தெரியாது, பாராயணம் செய்யவில்லை என்றால், மெளனமாக இருந்தபடி கிரிவலம் வருவது இன்னும் சிறப்புக்கு உரியது.
ஒருசிலர், காரில், இருசக்கர வாகனங்களில், சைக்கிளில் கிரிவலம் வருகிறார்கள். இவையெல்லாம் கிரிவலப்பாதையில் பயணித்த திருப்தியை மனதுக்குத் தரலாம். சந்தோஷமும் நிறைவும் கொள்ளலாம். ஆனால், கிரிவலப் பாதையை நடந்தே கடக்கவேண்டும் என்பதுதான் அருணாசல புராணம் சொல்லும் தாத்பர்யம். திருவண்ணாமலையில் வாழ்ந்து முக்தி அடைந்த அத்தனை மகான்களும் கிரிவலப் பாதையில் நடந்து, மலையே சிவமென உணர்ந்து, சிலிர்த்திருக்கிறார்கள். ஆகவே, மகான்களின் திருவடிபட்ட கிரிவலப் பாதை, இன்னும் இன்னுமாக நற்பலன்களை நமக்கு வழங்கக் கூடியது என்பதைப் புரிந்து உணர்ந்து கிரிவலம் வருவோம்.
அண்ணாமலையானுக்கு அரோகரா!