வெள்ளிக்கிழமை: சுபீட்சம் தரும் சுக்கிர ஹோரை வழிபாடு!

By காமதேனு

சுக்கிர வாரம் என்று அழைக்கப்படும் வெள்ளிக்கிழமையில், சுக்கிர ஹோரையில் பூஜைகளையும் பிரார்த்தனைகளையும் மேற்கொண்டால், மும்மடங்கு பலன்கள் கிடைக்கப்பெறலாம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஜோதிடத்தில் பலவிதமான சூட்சும முறைகள் இருக்கின்றன. அவற்றில், மிக முக்கியமானது ஹோரைகள். ஹோரை என்பது ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய நேரம். நவக்கிரகங்களில் ராகு மற்றும் கேதுவை சாயா கிரகங்கள் என்று அழைக்கிறோம். மீதம் இருக்கக்கூடிய ஏழு கிரகங்களும் தினமும் நான்கு மணி நேரம் தங்களுடைய கதிர்வீச்சை செலுத்துவதாகச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்!

அதன்படி, நவக்கிரகங்களில் சூரியன் - சந்திரன் - செவ்வாய் - புதன் - குரு - சுக்கிரன் - சனி ஆகிய ஏழு கிரகங்களுக்கும் ஹோரைகள் உண்டு. ஹோரை என்பது ஒருமணி நேரம். ஒருநாள் என்பதை தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24 மணி நேரமாக ஜோதிட சாஸ்திரம் எடுத்துக் கொள்கிறது. பொதுவாக காலை 6 மணி என்பதை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரைகள் கணக்கிடப்படுகின்றன. ஹோரைகள் ஆரம்பிக்கும் நேரம் காலை 6 மணி. ஒருநாளுக்கான ஹோரை என்பது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையாகும். இதில் அந்தந்த கிழமைக்கான அதிபதியின் ஹோரை அந்தநாளில் காலை 6 மணிக்கு தொடங்கும்.

உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை என்றால் ஞாயிற்றுக்கிழமைக்கானது. அதாவது, சூரிய பகவானுக்கானது. அவருடைய ஹோரை காலை 6 மணிக்கு தொடங்கும். செவ்வாய்க்கிழமையை எடுத்துக்கொண்டால் செவ்வாயினுடைய ஹோரை செவ்வாய் அன்று காலை 6 மணிக்கு தொடங்கும். வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு சுக்கிரனுடைய ஹோரையானது ஆரம்பிக்கும்.

இதிலும் குறிப்பாக, வெள்ளிக்கிழமையில் ஹோரையானது, காலை 6 மணிக்கு சுக்கிர ஹோரை. இதையடுத்து மதியம் ஒரு மணியில் இருந்து 2 மணி வரைக்கும் சுக்கிர ஹோரை. இதன்பின்னர், இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை சுக்கிர ஹோரை.

வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்று சொல்கிறோம். எனவே, சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமையில், சுக்கிர ஹோரை நேரத்தில், நாம் செய்யும் பூஜைகள், வழிபாடுகள், தான தர்மங்கள் என அனைத்துமே நம் பாவங்களில் இருந்து நம்மை விடுபடச் செய்யும்.

மதியம் ஒரு மணியில் இருந்து 2 மணிக்குள், விளக்கேற்றி நம்முடைய பிரார்த்தனைகளைச் செய்வது அதிக மகத்துவம் கொண்டது. காலையில் விளக்கேற்றினாலும் மதியத்தில் விளக்கேற்றி வழிபடுவதற்கு மும்மடங்கு பலன்கள் உள்ளன. அதேபோல், வெள்ளிக்கிழமையில் காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபட்டாலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை நாம் வழிபாடுகளில் கவனம் செலுத்தினால், நம் பிரார்த்தனைகளை கடவுளிடம் சமர்ப்பித்துப் பிரார்த்தனை செய்தால், எண்ணியது நடக்கும் என்பது ஐதீகம்.

முக்கியமாக, கடன் பிரச்சினையில் தவிப்பவர்கள், கடன் கொடுத்துவிட்டு, திரும்பி வரவில்லையே என்று கலங்குபவர்கள், தொழிலில் லாபம் வரவேண்டுமே என்று எதிர்பார்ப்பவர்கள், வியாபாரம் விருத்தி அடையாமல் தேக்கநிலையில் இருக்கிறதே என கைபிசைந்து வருந்துபவர்கள், வெள்ளிக்கிழமையன்று, சுக்கிர ஹோரையில் பூஜையறையில் விளக்கேற்றி பிரார்த்தனைகளை மகாலட்சுமியிடமும் பெருமாளிடமும் முன்வைத்து வேண்டிக்கொண்டால், விரைவில் நல்லது நடந்தே தீரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஹோரைகளுக்கும் ஹோரை நேரங்களுக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கிறது. பிரபஞ்ச சக்தியுடன் இரண்டறக் கலந்திருக்கும் இந்த வேளைகளில், குறிப்பிட்ட ஹோரை நேரத்தில் பூஜைகளும் வழிபாடுகளும் மேற்கொண்டால், நற்பலன்களைப் பெறலாம் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE