கோடி நன்மை தரும் கோலவில்லி ராமர்!

By காமதேனு

திருவெள்ளியங்குடி திருத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் விலகும். புண்ணியங்கள் பெருகும். சுக்கிர யோகம் கிடைக்கப் பெற்று, சுபிட்சமும் ஐஸ்வர்யமும் பொங்க வாழலாம்.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருவெள்ளியங்குடி. சுக்கிர பரிகாரத் திருத்தலம் என்று போற்றப்படுகிற ஒப்பற்ற க்ஷேத்திரம் இது. இங்கே உள்ள ஸ்ரீகோலவில்லி ராமர் தன்னை நாடி வரும் அன்பர்களின் குறைகளைத் தீர்த்து வைத்து அருள்பாலிக்கிறார். அசுரகுல சிற்பிக்கு மட்டுமின்றி அசுர குல குருவுக்கும் கோலவில்லி ராமர் அருள் பாலித்திருக்கிறார் என்கிறது ஸ்தலபுராணம்.

இந்தத் தலம், ஸ்ரீமந் நாராயணனின் தசாவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்துடனும் தொடர்பு உடையது என்பது கூடுதல் சிறப்பு. மஹாபலியின் செருக்கை அடக்க வாமன அவதாரம் எடுத்து வந்த பெருமாள், அவனிடம் மூன்றடி நிலத்தை யாசகமாகக் கேட்டார். மகாபலிக்குக் குருவாக இருந்தவர் சுக்கிராச்சார்யர். அசுர குலத்துக்கே இவர்தான் குரு.

‘வந்திருப்பவன் சாதாரணமானவன் அல்ல... ஸ்ரீமந் நாராயணனே வந்திருக்கிறான்’ என்பதை அறிந்த சுக்கிராச்சார்யர், வாமனன் கேட்டபடி மூன்றடி நிலத்தை மகாபலி தாரை வார்த்துக் கொடுக்கக்கூடாது என்று விரும்பினார். திருமாலின் அவதார நிகழ்வையும், தானம் கொடுத்த பின் மகாபலியின் நிலையையும் சுக்கிராச்சார்யர் நன்றாகவே அறிவார். இருந்தாலும், தாரை வார்த்துக் கொடுப்பது என்கிற தன் முடிவில் இருந்து பின்வாங்க மறுத்தான் மகாபலி சக்ரவர்த்தி.

மகாபலி தானம் கொடுப்பதைத் தடுக்க நினைத்த சுக்கிராச்சார்யர், ஒரு முடிவுக்கு வந்தார். மகாபலியின் கமண்டலத்தில் இருந்து நீர் வரும் வழியை, ஒரு வண்டு உருவில் வந்து அடைத்துக் கொண்டார் சுக்கிராச்சார்யர். எனவே, மகாபலியின் கமண்டலத்தில் இருந்து நீர், வாமனன் கையில் வந்து விழவில்லை. வாமனன், சாமான்யனா? ஒரு தர்ப்பைப் புல்லால் கமண்டலத்தின் துளையில் சரேலென்று குத்தினார். அந்தத் தர்ப்பைப் புல், வண்டின் ஒரு கண்ணை ஏகத்துக்கும் பாதிக்கச் செய்தது.

தனது தகாத செயலால் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்திய சுக்கிராச்சார்யர், இழந்த பார்வையை மீண்டும் பெற இந்தத் தலத்துக்கு வந்து வண்டு வடிவில் ஒரு மண்டல காலம் தவம் மேற்கொண்டார். இங்கு உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடினார். அப்போது, தான் சேகரித்து வைத்திருந்த தேன் துளிகளை எல்லாம், இந்தத் தீர்த்தத்தில் கலந்தார் என விவரிக்கிறது ஸ்தலபுராணம். அவரது தவத்துக்கு இரங்கிய எம்பெருமாள், உளம் கனிந்து அவருக்கு திருக்காட்சி தந்து பார்வையையும் கொடுத்து அருளினார். அன்று சுக்கிரனுக்குக் கொடுக்கப்பட்ட ஒளி, இப்போதும் தூண்டா விளக்காக (நேத்திர தீபம்) கருவறை அருகே, இரவும் பகலும் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது. சுக்கிர பகவானுக்குப் பெருமாள் தந்த ஒளி, இன்றும் இந்த தீபத்தில் உயிர்ப்புடன் இருப்பதாக ஐதீகம்!

சுக்கிர பகவான் வணங்கியதால், இது சுக்கிரபுரி ஆயிற்று. சுக்கிரனுக்குத் தமிழில் வெள்ளி என்று பெயர் உண்டு. எனவே, இந்தத் திருத்தலம், ‘திருவெள்ளியங்குடி’ என்றானது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள வைணவ நவக்கிரகத் தலங்களில், இது சுக்கிரனுக்கான திருக்கோயில் (இதர தலங்கள் சூரியன்- சாரங்கபாணி திருக்கோயில், குடந்தை; சந்திரன்- ஸ்ரீநாதன் கோயில், நந்திபுர விண்ணகரம்; அங்காரகன்- திருநறையூர், நாச்சியார்கோவில்; புதன்- திருப்புள்ள பூதங்குடி; குரு- திருஆதனூர்; சனி- திருவிண்ணகர், ஒப்பிலியப்பன்கோயில்; ராகு- கபிஸ்தலம்; கேது- திருக்கூடலூர், ஆடுதுறை பெருமாள்கோயில்). சுக்கிர தோஷம் உள்ளவர்களும், சுக்கிரனின் அருள் வேண்டுபவர்களும் இங்கு வந்து தரிசித்துச் சென்றால் நற்பலன்கள் விளையும் என்பது ஐதீகம்.

பார்க்கவ முனிவர் இந்தத் தலத்தில் நீண்ட காலம் தவம் இருந்ததால் பார்க்கவபுரி என்றும், தான் இழந்த சிருஷ்டி பதவியை இந்தத் தலத்தில் தவம் இருந்து மீண்டும் பிரம்மதேவன் பெற்றதால் பிரம்மபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

ஆலயத்தில் நான்கு தீர்த்தங்கள் உள்ளன. இந்திர தீர்த்தம், ஆலயத்தின் எதிரே இருக்கிறது. பிரம்ம தீர்த்தம், ஆலயத்துக்கு மேற்கே இருக்கிறது. சுக்கிர தீர்த்தக் கிணறு ஆலயத்துக்கு வடக்கிலும், பராசர தீர்த்தக் கிணறு ஆலயத்துக்குத் தென் திசையிலும் விளங்குகின்றன.

கிழக்கு நோக்கிய பிரம்மாண்ட திருக்கோயில். மூன்று நிலை ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றதும், பலிபீடம், கொடிமரம். கருடாழ்வார் சந்நிதி. சங்கு- சக்கரத்துடன் அருள்பாலிக்கும் அற்புதமான திருமேனி. இடக் காலை மடித்து, வலக் காலைக் குத்திட்டு அமர்ந்திருக்கும் வடிவத்தில் அழகு ததும்பக் காட்சி தருகிறார் பெருமாள்.

இரண்டாம் பிரகாரத்தில் மரகதவல்லித் தாயார் மற்றும் ஆண்டாளின் சந்நிதிகள். மரகதவல்லித் தாயாரின் சந்நிதி விஸ்தாரமானது. நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கும் பச்சைக்கல் வடிவம். அமர்ந்த நிலை. தவிர யோக நரசிம்மர், வரதராஜ பெருமாள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், குலசேகர ஆழ்வார், ராமானுஜர், தேசிகர், விஷ்வக்சேனர் என்று பல மூலவர் மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். ஆலயத்துக்கு வெளியே ஸ்ரீஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார்.

மூலவர் க்ஷீராப்திநாதர். அத்தி மரத்தால் ஆன ஜய- விஜயரான துவாரபாலகர்களை வணங்கி உள்ளே சென்றால், புஜங்க சயனத்தில் பெருமாளின் பிரம்மாண்டத் திருமேனி. சிலா விக்கிரத்தின் மேல் வர்ண கலாபம் பூசப்பட்டுள்ளது. அழகான திருக்கோலம். க்ஷீராப்திநாதரின் தலைமாட்டில் ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷியும், கால்மாட்டில் ஸ்ரீபூதேவியும் தரிசனம் தருகிறார்கள். இந்தப் பெருமாளைத்தான் ‘கோலவில்லி ராமர்’ என்கிற பெயரில் மங்களாசாசனம் செய்தார் திருமங்கை ஆழ்வார். உற்சவர் கோலவில்லி ராமர் என்றும் சிருங்காரசுந்தரர் என்றும் அழைக்கப்படுகிறார். பிறகு இதுவே கோலவிழி ராமர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE