விஷ்ணுபதி புண்யகாலத்தில் மகாலட்சுமிக்கு பால்பாயசம்; காஞ்சி காமாட்சிக்கு புடவை!

By காமதேனு

மாசி மாதம் புண்ய காலம் என்பார்கள். இந்த மாசி மாதத்தில்தான் மக நட்சத்திரம் சேர்ந்து வருகிற மாசி மகத் திருவிழாவும் மகா சிவராத்திரி வைபவமும் நிகழ்கிறது. மாசி மாதத்தை விஷ்ணுபதி புண்யகாலம் என்று போற்றுவார்கள். பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மகா விஷ்ணுவுக்கு உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது.

ஏகாதசி அன்று நாம் செய்யும் பூஜைகளும் நாம் அனுஷ்டிக்கும் விரதங்களும் சிறந்த பலன்களைத் தருவதாகவும் விஷ்ணு புராணம் கூறுகிறது. அத்தனை பெருமை மிகுந்த ஏகாதசியை விட மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் என்கிறார் பாலாஜி பட்டாச்சார்யர்.

மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அற்புதமான மாதமாக விஷ்ணுபதி புண்யகாலம் அமைந்திருக்கிறது. அதாவது, ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவது உண்டு. தமிழ் மாத கணக்கின் படி மாசி , வைகாசி , ஆவணி, கார்த்திகை மாதங்களில் விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. அதிகாலை 1 :30 மணி முதல் காலை 10 :30 மணி வரை இந்த புண்ய கால நேரம் வருகிறது. முழுமையாக 9 மணி நேரம் இந்த புண்ய காலம் இருப்பதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

விஷ்ணுபதி புண்ய காலத்தின்போது நம்முடைய பிரச்சினைகளை, பிரார்த்தனைகளை மகா விஷ்ணுவிடம் ஆத்மார்த்தமாகச் சொல்லி வேண்டுவோம். நியாயமான கோரிக்கைகள் எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேற்றித் தந்தருளுவார் வேங்கடநாதன் என்கிறார் பாலாஜி பட்டாச்சார்யர்.

ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பது, பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம் என சாஸ்திரங்கள் விவரிக்கின்றன. இந்த புண்ய காலத்தில் நாம் மகாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் மனதார வழிபாட்டு நமது தேவைகளையும் , வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை செய்துகொள்வோம். திருமால் குறித்த பாராயணங்களையும் திருமாலின் திருமார்பில் துலங்கும் ஸ்ரீதேவி நாச்சியார் குறித்த துதிகளையும் சொல்லி வேண்டிக்கொள்வோம்.

மாசி மாதமான விஷ்ணுபதி புண்யகாலத்தை விரதத்தை மேற்கொண்டு நம் பிரார்த்தனையை பெருமாளிடம் சமர்ப்பிப்போம். ஆவணி மாதத்தில் பெருமாள் கோயிலுக்குச் சென்று, கொடி மரத்துக்கு நமஸ்கரித்து 27 பூக்களை கையில் வைத்துக் கொண்டு 27 முறை பிராகார வலம் வந்து, ஒவ்வொரு சுற்று முடியும்போதும் ஒவ்வொரு பூவை கொடிமரத்துக்கு வைத்து பிரார்த்திப்போம். மாசி மாதத்தில் ஏதேனும் ஒருநாளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று, 27 பூக்களால் 27 முறை வலம் வந்து, கொடிமரத்துக்கு சமர்ப்பித்து பிரார்த்தனைகளைச் செய்யலாம்.

அப்போது, தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு தங்களின் பிரார்த்தனைகளை மனமுருகி சொல்லி வேண்டிக்கொள்ளலாம். முடிந்தால், துளசி பூஜை , கோ பூஜை மற்றும் ஸ்ரீதேவிக்கு பால் பாயச நைவேத்தியங்களைச் செய்து மாசி மாத செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் நைவேத்தியம் செய்து, வேண்டிக்கொள்வது சுக்கிர யோகத்தைக் கொடுக்கும்!

மேலும் நமது அக வளர்ச்சி, ஆனந்தம் . ஆன்மிக முன்னேற்றம் , மன அமைதி மற்றும் மோட்சத்தையும் அளிக்கக்கூடியது, இந்த விஷ்ணுபதி புண்ய கால வழிபாடு. விஷ்ணுபதி புண்ய காலத்தை முழுமையாகக் கடைப் பிடித்து ஸ்ரீலக்ஷ்மியின் அருளையும் ஸ்ரீமந் நாராயணரின் பேரருளையும் பெறுவோம்.

அதேபோல, இத்தகைய புண்ணியம் நிறைந்த மாதத்தில், அம்மனின் சாந்நித்தியம் எங்கெல்லாம் நிறைந்திருக்கிறதோ, அந்த ஆலயங்களுக்குச் சென்று, அம்பிகையை வணங்கி ஆராதனைகள் செய்வது உத்தமம். சென்னை ஸ்ரீகற்பகாம்பாளுக்கு மாசி மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் பிரம்மோற்சவம் களைகட்டும். மற்ற பல ஆலயங்களிலும் அம்பிகைக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். இதில் கலந்து கொண்டு செவ்வரளி மாலை சார்த்தி வழிபட்டால், வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் உடனே நிகழும்.

முக்கியமாக, காஞ்சியம்பதி என்று போற்றப்படும் காஞ்சிபுரத்தில் எந்தக் கோயிலிலும் அம்பாளுக்கு சந்நிதி இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, பொதுவாக, தலைவியாக, தலைமைப் பீடத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீகாமாட்சி அம்பாள். எனவே சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழும் காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாளை, மாசி மாதத்திலும் மாசிச் செவ்வாயிலும் வெள்ளிக்கிழமையிலும் புடவை சார்த்தி வணங்குவது, சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE