39 ஆண்டாக பார்வையற்ற மாற்றுத்திறனாளி தலைமையில் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: பார்வையற்ற மாற்றுத்திறனாளி தலைமையில் மதுரையிலிருந்து 39 ஆண்டுகளாக வேளாங்கண்ணிக்கு வேண்டுதல்கள் நிறைவேற கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.

மதுரையிலிருந்து நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு கடந்த 39 ஆண்டுகளாக மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், பாதயாத்திரையாக பார்வையற்ற மாற்றுத்திறனாளி தாஸ் என்பவரின் தலைமையில் சென்று வருகிறார்கள்.

இவர் புது ஜெயில் சாலை மில் காலனியை சேர்ந்தவர். ஆரம்பத்தில் இவரது தந்தை பாக்கியம் தலைமையில் பாதயாத்திரை சென்றுள்ளனர். அவர்தான் இந்த பாதயாத்திரையை 38 ஆண்டிற்கு முன் ஆரம்பித்து வைத்துள்ளார். அவரும், தனது மகனை போல் கண் தெரியாதவர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3 வது வாரம் ஜெபமாலை அணிந்து ஜெப, தவ முயற்சிகளில் ஈடுபட்டு ஜூலை மாதம் கடைசி சனிக்கிழமை மாலை மதுரையிலிருந்து புறப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெள்ளியன்று வேளாங்கண்ணி ஆர்ச் சென்றடைகின்றனர். அந்த அடிப்படையில் இன்று மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து பாதயாத்திரை குழுவை சேர்ந்த ராஜன் கூறுகையில், “பாதயாத்திரையாக சென்றவர்களின் குடும்பத்தினர்கள் அவர்களை வரவேற்று பவனியாக ஆலயத்திற்கு அழைத்து வந்தனர். மாலை அணிந்த நாட்கள் முதல் பாதயாத்திரை துவங்கும் வரை ஒவ்வொருவர் இல்லங்களிலும் ஜெபமாலை வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

இந்த ஜெப வழிபாட்டில் நாட்டின் நலனுக்காகவும் மற்றும் குழந்தைகளின் படிப்புக்காகவும், படித்த இளைஞர், இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்புக்காகவும், திருமணமாகாத இளைஞர், இளம் பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், வயோதிகர்களுக்கு நல்ல உடல் நலம் வேண்டியும், மரித்தவர்கள் ஆன்மா இறைவன் பாதம் சாந்தியடைய வேண்டியும் மன்றாடுகிறார்கள்.

சாதி, மத பாகுபாடின்றி அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன் பெற்று வருகிறார்கள். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பாதயாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. 120 பேர் பாதயாத்திரை புறப்பட்டுள்ளோம். ஆகஸ்ட் 2ம் தேதி வெள்ளிக்கிழமை ஆலயம் அடைகிறோம்.

இலங்கையை சேர்ந்த மக்கள் மதுரையில் ஏராளமானோர் இருந்தனர். முன்பு, அவர்களும் எங்களுடன் இந்த பாதயாத்திரைக்கு வந்தனர். தற்போது அவர்களில் பெரும்பாலானோர், இலங்கைக்கு திரும்பி சென்று விட்டனர்’’ என்றார். ஐயப்ப பக்தர்கள் போல், கிறிஸ்தவர்களும் மாலை அணிந்து, மதுரையில் இருந்து இதுபோல் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்று வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE