கோயிலில் பலிபீடத்தை ஏன் வணங்க வேண்டும் தெரியுமா?

By வி. ராம்ஜி

எந்த ஆலயத்துக்குச் சென்றாலும் உள்ளே நுழைந்ததும் கொடிமரம் இருக்கும். சிவாலயம் என்றால் நந்திதேவர் இருப்பார். அம்மன் கோயில் என்றால் சிம்மம் இருக்கும். முருகன் கோயில் என்றால் மயில் இருக்கும். எந்தக் கோயிலாக இருந்தாலும் கொடிமரத்துக்கு அருகில் பலிபீடம் இருக்கும்.

’’இந்த பலிபீடத்தை பெரிதாக நாம் எடுத்துக்கொள்வதே இல்லை. வணங்காமலேயே விட்டுவிடுகிறோம். நாம் ஆலயத்தின் சந்நிதிகளில் வாங்குகிற விபூதி குங்குமங்களை வைத்துவிட்டுச் செல்லும் இடமாகவே பலிபீடத்தை நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில், பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்தது. அளப்பரிய சக்திகளையும் நல்லதிர்வுகளையும் நமக்குள் கடத்துகிறது’’ என்கிறார் பாஸ்கர சிவாச்சார்யர்.

ஆகம நூல்களும் பலிபீடம் குறித்து விரிவாகவே சொல்லிவைத்திருக்கின்றன. பலி பீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை மலர் வடிவம் போன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த பீடங்களில் சிற்பங்களும் சில ஆலயங்களில் இருக்கும். இன்னும் சில கோயில்களில், பீடம் மட்டும் இருக்கும். திருப்பதி முதலான பிரசித்தி பெற்ற திருத்தலங்களில், பலி பீடத்துக்கு தங்கக் கவசம் சார்த்தியிருப்பார்கள். இதன் மூலம் கருவறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலி பீடத்துக்கும் கொடுக்கப்படுகிறது என்பதை அறியலாம்.

பலி பீடம் என்றதும் நம்மில் பலரும் கோழி, ஆடு முதலானவற்றை பலி கொடுக்கும் இடம் என்றூ தவறாக அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள். வேத காலத்தில் நம் முன்னோர்கள் வேள்வித் தூணாகத் திகழ்ந்தார்கள் என்றும் விலங்குகள் பலியிடும் மேடையாக இருந்தன என்றும் ஆகமங்கள் தெரிவிக்கின்றன. நாளடைவில் உருமாறி இன்று கொடிமரமாகவும், பலி பீடமாகவும் வடிவெடுத்துள்ளன என்கிறார்கள். எனவேதான் பலி கொடுக்கும் இடம் பலி பீடம் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

பலி பீடம் என்பது உயிர்களை பலியிட அமைக்கப்பட்டது அல்ல. ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ள சிவாலயங்களிலும், வைணவத் தலங்களிலும் உள்ள பலி பீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாக போற்றப்படுகின்றன. அந்த ஆலயங்களில் பலி பீடங்களில் உயிர்கள் பலி கொடுக்கப்படுவது இல்லை. அதற்கு பதில் நம்மிடம் உள்ள மோசமான குணங்களை அங்கு பலியிடுகிறார்கள். நம் துர்குணங்களை அழிப்பதே பலிபீடங்களின் நோக்கம்!

நம் ஆழ்மனதில் நம்மையும் அறியாமல், நம்மால் வெளியே சொல்லமுடியாமல், கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் முதலானவற்றில் ஏதேனும் கெட்ட குணங்கள் இருக்கலாம். இப்படி கெட்ட குணத்துடன் கருவறையில் இருக்கும் மூல சக்தியை தரிசித்தால், அந்த சக்தி நமக்கு எப்படி அருளுவார்?

’’நம் மனமானது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார். எதுவும் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால்தான் கடவுளின் பக்கத்தில் செல்ல முடியும். அதற்கு, நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். கெட்ட சிந்தனைகளை பலியிட வேண்டும். ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது இதுவே!’’ என்கிறார் பாஸ்கர சிவாச்சார்யர்.

நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும்போதுதான் நாம் கடவுளை நெருங்கமுடியும். அதாவது கருவறையில் சுத்தமான சிந்தனைகளுடன் நிற்கமுடியும். இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடமே பலிபீடம்.

’’பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும். பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன. பலி பீடத்தை பொதுவாக பத்ரலிங்கம் என்று அழைப்பார்கள். பலி பீடம் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவமலம், பலி பீடத்தில்தான் ஒதுங்கியிருக்கும். எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். ‘நான்’ எனும் அகங்காரத்தை பலி கொடுக்கவேண்டும்’’ என்கிறார் பாஸ்கர சிவாச்சார்யர்.

ஆலயத்தின் கருவறை வடக்கு, மேற்கு திசையை பார்த்தபடி இருந்தால், பலிபீடத்தின் இடது பக்கத்திலும், கருவறை கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும். மூலவருக்கு அபிஷேகம் நடக்கும்போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும்போதோ பலிபீடத்தை வழிபடுதல் கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

பலிபீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடம் திகழ்கிறது. இதைச் சுற்றி வந்து வழிபட்டால், ’ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு’ என்று வேண்டிக் கொள்கிறோம் என்று ஆகமம் தெரிவிக்கிறது.

கோயிலுக்குச் சென்றால், பலிபீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை வழக்கமாக்கிக் கொள்வோம். நம் துர்குணங்களை பலியிடுவோம். காலியான பாத்திரத்தில்தான், பால், தேன் முதலான நல்லவற்றை நிரப்பமுடியும். நம் துர்குணங்களை பலியிட்டால்தான், நற்பலன்கள் நம்மை வந்தடைவதற்கு இறையின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE