தை கடைசி வெள்ளி : அம்பிகையைக் கொண்டாட மறக்காதீங்க!

By காமதேனு

தை கடைசி வெள்ளிக்கிழமையில் அம்பிகையைக் கொண்டாடுவோம். அவளின் அருள்மழையில் நனைவோம். அம்பிகையை தரிசனம் செய்து அவளின் பரிபூரண வரங்களைப் பெற்று வாழ்வோம்.

தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இன்று (10.02.2023). ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெண் தெய்வங்களுக்கு உகந்த நாள்தான். தை மாத வெள்ளிக்கிழமைகளும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளும் ரொம்பவே விசேஷம்.

தை வெள்ளிக்கிழமைகளில், அம்மன் வழிபாடு செய்து வேண்டிக்கொண்டால், வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் மகாசக்தி. கேட்டதையெல்லாம் கொடுத்துக் காப்பாள் தேவி.

தை மாத வெள்ளிக்கிழமைகளில், சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களை நம்மால் முடிந்த அளவுக்குத் தருவது பெண்களை தீர்க்கசுமங்கலியாக வாழவைக்கும். அதேபோல், கன்னிப்பெண்களுக்கு புத்தாடையோ வளையல் முதலான மங்கலப் பொருட்களோ வழங்குவதும் வளம் சேர்க்கும். தை கடைசி வெள்ளிக்கிழமையில் சுமங்கலிப் பெண்களுக்கும் கன்னிப் பெண்களுக்கும் வளையல், மஞ்சள், குங்குமம், ரிப்பன், மலர்கள், கண்ணாடி, சீப்பு, பழங்கள் முதலானவற்றை வழங்கி பிரார்த்தனை செய்வோம். நம்மை விட வயது முதிர்ந்த சுமங்கலிகளுக்கு வழங்கி ஆசி பெறுவதும் கன்னிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கி ஆசி கொடுப்பதும் நற்பலன்களை வழங்கக் கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

தை மாத கடைசி வெள்ளிக்கிழமையில் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனைத் தரிசிப்போம். முடிந்தால், திருச்சி வெக்காளி அம்மனுக்கு மனதார வேண்டிக்கொண்டு, அவளை நினைத்து பிரார்த்தனைச் சீட்டு எழுதி வைத்து, வீட்டு பூஜையறையில் மஞ்சள் தடவி, ஆத்மார்த்தமாக அவளுக்கு சமர்ப்பித்து வைப்போம். பிறகொரு தருணத்தில், திருச்சி வெக்காளி அம்மன் கோயிலுக்குச் செல்லும் போது, அங்கே பிரார்த்தனைச் சீட்டினை கட்டிவிட்டு வேண்டிக்கொள்வோம்.

ஒருகாலத்தில், சோழர்களின் தலைநகரமாகத் திகழ்ந்தது திருச்சி - உறையூர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் அருள் பொழியும் வெக்காளியம்மன் கோயிலில், கருணை தெய்வமாகக் குடிகொண்டிருக்கிறாள்.

சோழர்களின் இஷ்ட தெய்வம் இவள். உறையூரின் எல்லையில் அமைந்திருப்பதால் எல்லைத் தெய்வமாகவும் கோலோச்சிக் கொண்டிருக்கிறாள். வடக்கு நோக்கிய நிலையில் காட்சி தரும் பெண் தெய்வங்கள் எப்போதுமே நம் வாழ்வில் உள்ள நமக்கு உண்டான எதிர்ப்புகளை விலக்கி, வெற்றியைத் தந்தருளுவார்கள் என்பது ஐதீகம். இன்றைக்கும் பக்தர்களின் இஷ்ட தெய்வமாகவும் வெற்றியைத் தரும் தேவியாகவும் போற்றி வணங்கப்படுகிறாள் வெக்காளியம்மன்.

இங்கே... அம்மன் சந்நிதிக்கு எதிரில் சூலம் ஒன்று உள்ளது. பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை, கவலைகளை, கண்ணீரை, துக்கங்களை, பிரார்த்தனையாக ஒரு சீட்டில் எழுதி, இந்த சூலத்தில் கட்டிவைக்கின்றனர். அந்தச் சீட்டில் உள்ள வேண்டுதல்களை வெக்காளியம்மன் பார்த்து, நம்முடைய துயரங்களையும் துக்கங்களையும் போக்கி அருளுகிறாள். நம்முடைய வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றித் தருகிறாள் என்கிறார்கள் பக்தர்கள்!

திருச்சி மட்டுமின்றி, பக்கத்து ஊர்களில் இருந்தும் கூட பக்தர்கள் வந்து பிரார்த்தனைச் சீட்டு கட்டி, வேண்டிக்கொள்கின்றனர். வெளிமாநிலங்களில், வெளிநாட்டில் இருப்பவர்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களில், வீட்டில் விளக்கேற்றி, வெக்காளியம்மனை மனதார நினைத்துக் கொண்டு, ஒரு சீட்டில் தங்களின் பிரார்த்தனையை எழுதி, அதை பத்திரமாக பூஜையறையிலேயே வைக்கின்றனர். பின்னர், அவர்களின் வேண்டுதல் நிறைவேறியதும், திருச்சிக்கு வந்து வெக்காளித்தாயை தரிசித்து, தங்களது சீட்டைக் கட்டிவிடுவதுடன், தாங்கள் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்கின்றனர்.

வெக்காளித் தாய் கருணையே வடிவானவள். கனிவும் அன்பும் கொண்டவள். பக்தர்களுக்குத் தாயாக இருந்து அகிலத்தையே அரவணைப்பவள். நம்முடைய வேண்டுதல்களை அவளிடம் முறையிடுவோம். தை கடைசி வெள்ளிக்கிழமை நன்னாளில், பஞ்சமி திதி கூடிய வேளையில், வீட்டில் விளக்கேற்றி, பூஜையறையில் அமர்ந்து, வேண்டுதல்களை, துக்கங்களை, கஷ்டங்களை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி, அதில் கொஞ்சம் மஞ்சளும் குங்குமமும் சேர்த்து, பத்திரமாக அம்மன் படத்துக்கு முன்னே வைத்து ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்வோம்.

செவ்வாய், வெள்ளி என்றில்லாமல், வீட்டில் விளக்கேற்றும்போதெல்லாம் வெக்காளியம்மனை நினைத்துக்கொண்டு, அந்தப் பிரார்த்தனைச் சீட்டுக்கு தீப தூபம் காட்டுவோம். நம் கவலைகளைப் போக்கியருள்வாள் வெக்காளியம்மன். துக்கங்களை நிவர்த்தி செய்வாள் தேவி.

வெக்காளித்தாயைச் சரணடைவோம். ‘தாயே நீயே சரணம்’ என அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வோம். காவல் தெய்வமாகவும் எல்லைத் தெய்வமாகவும் திகழும் வெக்காளியம்மன், நம்மை குழந்தையென வாரியணைத்து நம் வம்சத்தையே காத்தருளுவாள் என்பது உறுதி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE