தைப்பூசம் : நல்வழி காட்டுவான் வல்லக்கோட்டை முருகன்!

By காமதேனு

இன்று (05.02.2023) ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத் திருநாள்.

இந்த நன்னாளில், வல்லக்கோட்டை முருகப்பெருமானை தரிசித்தால், வரமும் அருளும் தந்து காத்தருளுவான். வல்லக்கோட்டை கோயிலில், ஏனைய விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டாலும் தைப்பூசத் திருவிழா அமர்க்களமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநாளில், ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வேண்டிக்கொள்கின்றனர். பால் காவடி எடுத்தும் அலகு குத்தியும் வழிபடுகின்றனர். நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

ஆறுபடை வீடு என்றில்லாமல், முருகன் குடிகொண்டிருக்கும் கோயில்கள் அனைத்துமே தைப்பூசத் திருநாளில் கோலாகலமாகக் காட்சியளிக்கும். அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.

இலஞ்சி எனும் நாட்டில், சங்கொண்டபுரம் எனும் சிறிய நகரத்தை பகீரதன் எனும் அரசன் ஆட்சி செய்தான். பகீரத ராஜாவைப் பார்க்க நாரத முனிவர் வந்தார். ஆனால், ஆணவமும் கர்வமும் கொண்ட மன்னன், நாரதரைப் பார்க்காமல் புறக்கணித்தான். இதில் கோபமுற்றார் நாரத மாமுனிவர்!

மன்னனின் கர்வத்தை அடக்க நினைத்த நாரத முனிவர், கோரன் எனும் அரக்கனைக் கொண்டு மன்னனுக்குப் பாடம் கற்பிக்க முடிவு செய்தார். ’’நீ பல தேசத்தை வென்றிருக்கிறாய். பல மக்களை அடிமைப்படுத்தியிருக்கிறாய். இலஞ்சியை மட்டும் உன்னால் வெல்லவே முடியாது’’ என்று அரக்கனை உசுப்பேற்றிவிட்டார்.

அவ்வளவுதான். கோரன் இதைக் கேட்டு ஆவேசமானான். ’’ஜெயித்துக் காட்டுகிறேன் பாருங்கள்’’ என்று சூளுரைத்தான். இலஞ்சியை நோக்கிப் போர் தொடுத்தான். அசுரனின் ஆட்டத்தில் பகீரதன் மிரண்டு போனான். அவனுடைய வெறியாட்டத்தில் வீரர்கள் சுருண்டு மடிந்தார்கள். மன்னன் தலைதெறிக்க ஓடினான். காட்டுக்குள் சென்று ஒளிந்துகொண்டான். தேசத்தையும் அதிகாரத்தையும் இழந்தான். ஆட்சியையே இழந்தான். அரண்மனையையெல்லாம் விடுத்து காட்டுக்குள் திரைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வந்தான்.

அங்கே நாரதர் வந்தார். மன்னனைக் கண்டார். ’’எனக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா முனிவரே?’’ என்று மனம் நொந்து புலம்பினான். ’’எல்லாம் சரியாகும். முதலில் உன் ஆணவத்தை விடு. கர்வத்தை ஒழி. நல்லவழி கிடைக்கப் பெறுவாய். இது உறுதி’’ என அருளினார் நாரதர்.

அப்போது ஒருநாள்... துர்வாச முனிவரைக் கண்டான் மன்னன் பகீரதன். அவரை வணங்கினான். தேசத்தை இழந்ததை, ராஜாங்கத்தை இழந்ததை, வனவாசத்தில் தலைமறைவாக இருப்பதைத் தெரிவித்து வருந்தினான். “எனக்கு நற்கதி அருளுங்கள் சுவாமி” என வேண்டினான்.

‘’அதோ... அங்கே பாதிரி மரம் இருக்கிறதே... அந்த மரத்தடியில் முருகப்பெருமான் இருக்கிறார். வெள்ளிக்கிழமை தோறும் கந்தனை மனமுருகி வழிபட்டு வா. உன் ஆணவம் மொத்தமும் அழியும். இழந்தவை அனைத்தையும் கிடைக்கப் பெறுவாய்’’ என அருளினார்.

தொடர்ந்து, முருகப்பெருமானை வேண்டினான் மன்னன். இடைவிடாது பூஜித்து வந்தான். மன்னனின் ஆணவம் அழிந்தது. கர்வம் தொலைந்தது. முருகப்பெருமான் மன்னனுக்குக் காட்சி தந்தார். ’’இழந்ததைத் தந்தேன்’’ என அருளினார். மீண்டும் ராஜாங்கம் அவன் வசம் வந்தது. நல்லாட்சி புரிந்தான். முருகப்பெருமான் அருளிய அதே இடத்தில், அழகிய கோயில் ஒன்றை எழுப்பினான். அனுதினமும் வழிபட்டு வந்தான். அதுவே வல்லக்கோட்டை ஆலயம் என விவரிக்கிறது ஸ்தல புராணம்.

செங்கல்பட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில், ஒரகடத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லக்கோட்டை திருத்தலம். சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் இது என்கிறார் வல்லக்கோட்டை கோயிலின் சரவண சிவாச்சார்யர்.

அற்புதமான ஆலயம். கோயிலும் திருக்குளமும் என கொள்ளை அழகுடன் திகழ்கிறது ஆலயம். கருவறையில் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேதராகத் திருக்காட்சி தந்தருள்கிறார் முருகக் கடவுள். இங்கே உள்ள முருகனின் திருநாமம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி.

இங்கே உள்ள மூலவர் சுமார் ஏழடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் முருகப் பெருமான். செவ்வாய்க்கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் வல்லக்கோட்டை முருகப் பெருமானை வணங்கி வந்தால், திருமணத் தடைகள் அனைத்தும் விலகும். கல்யாண யோகம் கூடிவரும். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கப் பெறலாம். எதிரிகளையும் எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்கி அருளுவார் கந்தப்பெருமான்.

அருணகிரிநாதர் இந்தத் தலத்து முருகப்பெருமான் குறித்து ஏழு திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். வல்லக்கோட்டை முருகனை கண் குளிரத் தரிசிப்போம். வரங்கள் அனைத்தும் தந்திடுவான் அந்த ஸ்ரீசுப்ரமணிய சுவாமி.

தைப்பூச நன்னாளில், வல்லக்கோட்டை முருகப்பெருமானை கண்ணாரத் தரிசிப்போம். கவலைகளையெல்லாம் தீர்த்தருளுவான் கந்தகுமாரன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE