ஏழு தலைமுறை பாவமும் விலகும் - காஞ்சி மகான் அறிவுரை

By காமதேனு

நடமாடும் தெய்வம் என்று போற்றப்படும் மகான் காஞ்சி மகாபெரியவா. இவர் வாழ்வையும் ஆன்மிகத்தையும் இறையுணர்வையும் மிக மிக எளிமையாகப் போதித்துள்ளார். அவையெல்லாம், ‘தெய்வத்தின் குரல்’ என்றே தொகுக்கப்பட்டு, புத்தகங்களாக வந்துள்ளன.

காஞ்சி மகாபெரியவா, மிகப்பெரிய விஷயங்களைக் கூட, மிக மிக எளிமையாக பக்தர்களுக்கு உபதேசித்துள்ளார்.

இப்படித்தான் ஒருமுறை, பக்தர் ஒருவர், ‘’பச்சரிசிக்கு மட்டும் அப்படியென்ன மகத்துவம் சுவாமி?’’ என்று மகாபெரியவரிடம் கேட்டார். உடனே மற்றொருவர் தயங்கித் தயங்கி, ‘’எறும்புக்கு பச்சரிசி போடுகிறோமே... ஏன் சுவாமி?’’ என்று கேட்டார்.

அவர்களை மட்டுமின்றி மொத்தக் கூட்டத்தையும் கூர்ந்து பார்த்த மகா பெரியவா, முதலில் புன்னகைத்தார். பிறகு விவரிக்கத் தொடங்கினார்.

’’தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் நம்மை மீறியும் ஏதேனும் பாவங்களை நாம் செய்துவிடுகிறோம். பாவத்தில் சின்னப் பாவம், பெரிய பாவம் என்றெல்லாம் இல்லை. பாவம் பாவம்தான். எவர் மனதையோ காயப்படுத்தி, நோகடித்து விடுகிறோம். நம் இன்றைய பிறப்பு என்பதே கர்மாதான்! முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுதான் இந்தப் பிறப்பு.

இந்தப் பிறப்பு எடுத்ததற்குக் காரணமே, முந்தைய பிறவியில் செய்த வினைகளைத் தீர்ப்பதற்குத்தான் என்கிறது தர்மசாஸ்திரம். ஒருவரின் பிறப்பில், முந்தைய ஒரு தலைமுறைக்கான பாவம் மட்டும் இருக்காதாம். ஏழு தலைமுறை பாவங்களும் சேர்ந்திருக்குமாம். அப்படித்தான் சாஸ்திரம் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களும் என நாம் செய்த எல்லாப் பாவங்களும் தீருவதற்கு உபாயத்தையும் சொல்லியிருக்கிறது சாஸ்திரம்.

சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்கு பொடியாக்கிக் கொள்ளுங்கள். அதனை கையில் வைத்துக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். மனதார வேண்டிக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் நாம் முதலில் நமஸ்கரிக்க வேண்டியது சூரிய பகவானைத்தான். அதன் பிறகு பெற்றோரை. இவர்களுக்கு அடுத்து, குருமார்களை!

சூரிய நமஸ்காரமெல்லாம் முடித்துவிட்டு, அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் செல்லுங்கள். மரத்தடி விநாயகர், தெருமுனை விநாயகர் என்று பிள்ளையார் எங்கே இருந்தாலும் பிள்ளையார்தான்! அவர்தான் எப்போதுமே ஒசத்தி. அவர் இருப்பதாலேயே, அந்த இடமும் அனுக்கிரகம் மிக்க இடமாகிவிடுகிறது. பிள்ளையாரை தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். மூன்று முறை வலம் வந்து விநாயகரைச் சுற்றிலும் பச்சரிசிப் பொடியைத் தூவிவிடுங்கள்.

அந்தப் பொடியை நோக்கி எறும்புகள் வரும். நீங்கள் அழைக்காமலேயே வரும். வரிசையாக வந்து எறும்புகள் அவற்றை எடுத்துச் செல்லும். நீங்கள் போடுகிற பச்சரிசியை, பச்சரிசிப் பொடியை எறும்புகள் தூக்கிச் சென்றாலே உங்களுடைய பல பாவங்கள் நீங்கிவிடும்.

அதுமட்டுமா? அப்படி தூக்கிச் சென்ற பச்சரிசிப் பொடியை, எறும்புகள் முழுவதுமாக சாப்பிட்டு தீர்த்துவிடாது. மழைக்காலத்திற்கு உணவு வேண்டுமே என்று தன் புற்றுக்குள் சேமித்துவைத்துக் கொள்ளும். அதெப்படி... பச்சரிசிப் பொடி கெடாமல் இருக்குமா என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். எறும்பின் எச்சில் பட்டதுமே அரிசி மாவானது, கெட்டுப்போகிற தன்மையை இழந்துவிடுகிறது. இந்த மாவு அல்லது பொடி இரண்டே கால் வருஷங்களுக்குக் கெடாமல் இருக்கும்.

இப்படி எறும்புகள் எடுத்து வந்த பொடியை, புற்றுக்குள் இருக்கும் பொடியை, இரண்டே கால் வருஷங்களாக இருக்கும் பொடியை முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை கிரக நிலை மாறும் அல்லவா. அப்போது அரிசிப் பொடியின் குணமும் மாறிவிடும்.

ஆகவே, உங்களுக்கு பொழுது போக்குகிற நேரத்தைக் கடந்து எப்போதெல்லாம் முடிகிறதோ, ஒரு கைப்பிடி பச்சரிசியை இடித்து வைத்துக் கொண்டு, எறும்புக்கு உணவாக இட்டு வாருங்கள். சனிக்கிழமை என்று சொல்லிவிட்டேன் என்பதற்காக, சனிக்கிழமை வரை காத்திருக்கவேண்டாம். எந்தக் கிழமையில் உங்களுக்கு தோதுப்படுகிறதோ, அப்போதெல்லாம் இதை செய்யுங்கள். வியாழக்கிழமை பண்ணினால், வெள்ளிக்கிழமை பண்ணக்கூடாது என்று சட்டமெல்லாம் இல்லை. சாஸ்திரத்துக்கும் பாவங்களைப் போக்குவதற்கும் எல்லா காலமும் க்ஷேமமான காலம்தான்!’’ என தெளிவு தந்தார் காஞ்சி மகான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE