எல்லா பரிகாரங்களும் செய்து விரக்தி அடைந்தவர்கள், எந்தத் துன்பமாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க வழி தெரியவில்லையே... என்று கலங்கித் தவிப்பவர்கள், பெரிய பரிகாரமோ, விசேஷ ஹோமங்களோ செய்ய இயலாதவர்கள், பகவான் ஷீர்டி சாயிபாபாவை மனதார நினைத்துக் கொண்டு வேண்டினால் போதும். நம் கவலைகளை காணடிப்பார். நம் கண்ணீரைத் துடைப்பார் பாபா என்கிறது சாயி சத்சரிதம்.
முன்னதாக, விநாயகரை வணங்கி, சிதறுகாய் உடைத்து பாபா வழிபாட்டுக்குச் செய்யத் தொடங்கவேண்டும். இதேபோல், தினமும் அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்றோ அல்லது வீட்டில் இருக்கும் பிள்ளையார் படத்துக்கு முன்போ ஒரு விளக்கு ஏற்றிவைத்து வணங்கிவாருங்கள். இதையடுத்து, வீட்டில் உள்ள பாபாவின் படத்துக்கு அல்லது சிலைக்கு விளக்கேற்றி வையுங்கள். மனதார பாபாவை நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள்.
’’எல்லா நாளும் விளக்கேற்றி பாபாவை வணங்குவது இயலாத காரியம், நேரமில்லையே...’’ என்று சிலர் சொல்லலாம். அவர்கள் வியாழக்கிழமையும் சனிக்கிழமையும் மட்டுமாவது விளக்கேற்றி வணங்கவேண்டும். அதேபோல், நமக்காக மட்டுமின்றி மற்றவர்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தால், நமக்காக ஒரு விளக்கு, அவர்களின் நலனுக்காக ஒரு விளக்கு என ஏற்றி வழிபடவேண்டும்.
அதேபோல, வாரத்தில் ஒருமுறையேனும் காலபைரவ வழிபாடு செய்யவேண்டும். விநாயகரையும் பாபாவையும் தினமும் வணங்கவேண்டும். இயலாதவர்கள், விநாயகரை தினமும் வணங்கிவிட்டு, பாபாவை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வணங்கவேண்டும். காலபைரவ வழிபாட்டை, வாரம் ஒருமுறையேனும் சென்று தரிசித்து பிரார்த்தனை செய்யவேண்டும்.
ஞாயிறு - சூரியன் கோளையும், திங்கள் - சந்திரன் கோளையும் , செவ்வாய் - செவ்வாய் கோளையும் , புதன் - புதன் கோளையும் , வியாழன் - குரு கோளையும் , வெள்ளி - சுக்கிரன் கோளையும் , சனி - சனி கோளையும் என அந்தந்தக் கிழமைகளை ஆதிக்கம் செய்கின்றன. ஆனால், ஞானிகளும் யோகிகளும் கோள்களுக்கு அப்பாற்பட்டவர்கள். விநாயகர் கணங்களுக்கெல்லாம் அதிபதியாக கணபதியாகவே கொண்டாடப்படுகிறார். காலபைரவரும் கலியுகத்தை அருள்பாலிக்கும் அற்புத சக்தி கொண்ட சிவப்பரம்பொருளின் திருமேனி வடிவம்.
அனைத்து கிரகங்களையும் வணங்குவதற்குப் பதிலாக, விநாயகரையும் சாயிபாபா எனும் புனித மகானையும் காலபைரவரையும் வணங்கி வந்தாலே நம் ஜனன தோஷங்கள், முற்பிறவியின் சாபங்கள், பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெறலாம். அல்லல்கள் அனைத்தும் விலகும் என்கிறார் பிரபல ஐயப்பப் பாடகரும் பாபாவின் தீவிர பக்தருமான வீரமணி ராஜு.
தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, சங்கடஹர சதுர்த்தி, முதலான நாட்களிலும் தவறாமல் பாபாவையும் ஆனைமுகத்தானையும் பைரவ வழிபாட்டையும் தொடர்ந்து செய்து வருவது மிக நல்ல பலன்களையெல்லாம் வழங்கும் என்கிறார். ’’நாம் செய்து கொண்டிருக்கிற தவறுகளை நமக்கு உணர்த்தி , நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நமக்குள் உணர்த்தி, பொறுமையையும் நிதானத்தையும் நமக்கு அருளிவிட்டு, தன் அருள்மழையைப் பொழிவார் சாயிபாபா!’’ என்று விவரிக்கிறார் வீரமணி ராஜூ.
நம் வாழ்வில் நடக்கிற கெட்ட விஷயங்கள், நமக்கு ஏற்படுகிற கஷ்டங்கள், நம் குடும்பத்துக்குள் கலங்கடிக்கிற துன்பங்கள் எல்லாமே நம்மை விட்டு விலகும். நல்ல விஷயங்கள் என்று சொல்லப்படும் சத்விஷயங்கள், நம்மை நோக்கி வரத்தொடங்கும். வாழ்வில், முன்னேற்றத்தைத் தந்தருளுவார் பாபா. சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறைகளை அவரே தந்தருளுவார் என்பதுதான் பாபாவின் அருள் செய்யும் மாயம்!
’’மனிதர்களை, பக்தர்களை எடை போடுவதுதான் பாபா நம்மிடம் நெருங்குவதற்கான முதல் அறிகுறி. அளவுக்கு அதிகமான விரக்திக்குத் தள்ளுவார். பெரியதொரு அவமானம் ஏற்படுமோ என பயத்தையும் கலக்கத்தையும் உருவாக்குவார். குழப்பத்தையும் மனம் ஒருநிலையில் இல்லாமல் தவிப்பதையும் செய்துவிட்டு வேடிக்கை பார்ப்பார். பிறகுதான், நம்மை அவர் ஆட்கொண்டு அருளுவார். பிறகு நாமே போதும் என்று நினைத்தாலும் பாபா விடமாட்டார். தன் அருளால், நம்மை வாழ்வில் நல்லதொரு நிலைக்கு உயர்த்திவிடுவார். நம் குடும்பத்தில் அந்நியோன்யத்தையும் குழந்தைகளிடம் நற்குணங்களையும் விதைத்துவிடுவார். இதைத்தான் ‘சாயி சத்சரிதம்’ வேறொரு விதமாக பக்தர்களுக்கு உணர்த்துகிறது’’ என சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார் வீரமணி ராஜூ.
’ஓம் ஸ்ரீ சத்குரு சாய்ராம்’ என்று தினமும் 11முறை பாராயணம் செய்வோம். பாபாவுக்கு விளக்கேற்றி வேண்டுவோம். நம்மையும் நம் குடும்பத்தின் நலனையும் பாபா பார்த்துக் கொள்வார்!