குற்றாலநாதர் கோயில் சித்திர சபையில் தாண்டவ தீபாராதனை தரிசனம்!

By காமதேனு

தென்காசி குற்றாலநாதர் கோயிலில் அமைந்துள்ள சித்திர சபையில், ஸ்ரீநடராஜ பெருமானுக்கு, தாண்டவ தீபாராதனை தரிசனம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் பிரசித்திபெற்றதும் பழைமைவாய்ந்ததுமான குற்றாலநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா, ஐப்பசி விசு திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா முதலான விழாக்கள் 10 நாள் விழாவாக வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும்.

அந்தவகையில் கடந்த 28-ம் தேதி அதிகாலையில் மார்கழி மாத திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு குற்றாலநாதர் சந்நிதியில் உள்ள கொடிமரத்தில் 16 வகை மூலிகைப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வேத மந்திரங்களுடன் பஞ்ச வாத்தியங்கள் இசைக்க கொடியேற்றப்பட்டது.

விழாவின் இன்று சிகர நிகழ்ச்சியான பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபையில் நடராஜமூர்த்திக்கு 16 வகை மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பச்சை மலர்கள் சார்த்தப்பட்டன. பச்சைப் பட்டு உடுத்தி அலங்காரம் செய்யப்பட்ட நடராஜ மூர்த்திக்கு ஆனந்த பைரவி ராகத்தில் தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

10 நாள் திருவிழாவில், 06.01.2023 அன்று திரிகூட மண்டபத்தில் நடராஜ மூர்த்திக்கு ஆருத்ரா தரிசனமும் தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும் கட்டளைதாரர்களும் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE