ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா - கொடியேற்றத்துடன் துவக்கம்!

By செ.ஞானபிரகாஷ்

ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா ஜுலை 29 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது ஆடித் திருக்கல்யாண நிகழ்ச்சியாகும். இந்த ஆண்டுக்கான ஆடித்திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் ஜுலை 29 அன்று துவங்கி 17 நாட்கள் ஆகஸ்ட் 14 வரையிலும் நடைபெறுகிறது.

ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் முதல் நாளான ஜுலை 29 திங்கட்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். பின்னர் சாயரட்சை பூஜை, கால பூஜையை தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் நவசக்தி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்குள்ள அம்பாள் தங்கக்கொடி மரத்தில் காலை 10.30 மணிக்கு மேல் கன்னி கொடியேற்றப்பட்டு ஆடித்திருவிழா துவங்குகிறது.

இதன் நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு, ‘ஆகஸ்ட் 04 ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை, ஆகஸ்ட் 06 செவ்வாய்கிழமை தேரோட்டம், ஆகஸ்ட் 08 வியாழக்கிழமை ஆடிதபசு, ஆகஸ்ட் 09 வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம், ஆகஸ்ட் 14 புதன்கிழமை கெந்தனமாதன பர்வதம் மண்டபகப்படிக்கு எழுந்தருளல்’ ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE