ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

By KU BUREAU

ஈரோடு: ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில், வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

ஈரோடு கோட்டை பகுதியில் உள்ள ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழா கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து கோயிலின் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. தினந்தோறும் காலை, மாலை யாக பூஜைகள் நடந்து வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. ஸ்ரீ வருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வருணாம்பிகை உடனமர் சோமாஸ்கந்தர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

சிவனடியார்களும், திரளான பக்தர்களும் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து தொடங்கிய தேரோட்டம், ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, காமராஜ் வீதி வழியாக சென்று மாலையில் நிலை சேர்ந்தது.

அலங்கரிக்கப்பட்ட தேருடன் வருணாம்பிகை அம்பாள், விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளின் சப்பரங்களும் சென்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின், மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான கோயில் தெப்பக் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் வரும் 22-ம் தேதி நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE