தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் ஆடித்தேரோட்டம்: திரளான பக்தர்கள் தேரை இழுத்தனர் 

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது.

திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று சவுந்திரராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கருட வாகனத்திலிருந்து எழுந்தருளி வீதி உலா வந்து மக்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து தினமும் இரவு சேஷவாகனம், ஆஞ்சநேயர், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பெருமாள் மணக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தேரோட்டம் இன்று மாலை நடைபெற்றது.

தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளிய சவுந்திரராஜப்பெருமாள்.

முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தேர் ஏற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் தேர் வலம் வந்தது. தேரில் சவுந்திரராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

வடமதுரை சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. சவுந்திரராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளி வலம் வந்தார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமிதரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE