திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி பல லட்சம் பக்தர்கள் நேற்று கிரிவலம் சென்றனர்.
“ஞான தபோதனரை” வாவென்றுஅழைக்கும் தலம் ‘திருவண்ணா மலை’. பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் மலையே மகேசன் என போற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள ‘திரு அண்ணாமலை’ உள்ளன. இம்மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற திரு அண்ணாமலையை பவுர்ணமி நாளில் வலம் வந்து வழிபடுவது கூடுதல் சிறப்பாகும். இதையொட்டி, ஆடி மாத பவுர்ணமி நாளான நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பின்னர், மெல்ல ,மெல்ல அதிகரித்த பக்தர்களின் எண்ணிக்கை மாலை 4 மணிக்கு பிறகு கிடுகிடுவென உயர்ந்தது. 14 கி.மீ., தொலைவுள்ள கிரிவலப் பாதையில் ‘யாத்திரை’ சென்ற சிவ பக்தர்கள், ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்த படி சென்றனர். மேலும், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணா மலையார் கோயில், அஷ்டலிங்க கோயில் மற்றும் திருநேர் அண்ணாமலையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மூலவரை தரிசித்தனர். விடிய, விடிய பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். வார விடுமுறை (ஞாயிறு) என்பதால், கிரிவல யாத்திரை இன்றும் தொடரும்.
பவுர்ணமி மற்றும் வார விடுமுறை என்பதால், அண்ணா மலையார் கோயிலிலும் பக்தர் களின் கூட்டம் அலைமோதியது. கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 3 மணி நேரம் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசித்தனர். இடைவிடாமல் சுமார் 15 மணி நேரம் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வருகை இன்றும் (21-ம் தேதி) தொடரும் என்பதால், விரைவாக சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளன.
» அம்மன் ஆலயங்களுக்கு சிறப்பு சுற்றுலா: தமிழக சுற்றுலா கழகம் சிறப்பு ஏற்பாடு!
» மொஹரம் பண்டிகை: விரதமிருந்து பூமிதி திருவிழாவில் தீ மிதித்த இந்துக்கள்!