தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே, மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் காசவளநாடு புதூர் கிராமத்தில் வசித்து வரும் இந்துக்கள் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்கள் மொஹரம் பண்டிகையை ஒட்டி தீக்குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே உள்ளது காசவளநாடு புதூர். இந்த கிராமத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக, மொஹரம் பண்டிக்கையை கொண்டாடி வருகிறார்கள். இதற்காக 10 நாட்களுக்கு முன்னதாகவே விரதத்தை துவங்கி, ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில் உள்ளங்கை போன்ற உருவத்தை ‘அல்லா சுவாமி’ என வைத்து, தினமும் அதற்கு பூஜைகள் நடத்தி, ஃபாத்தியா ஓதி வழிபாடு நடத்துகின்றனர்.
அதன்படி இந்தாண்டும் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக விரதம் இருந்து நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை, அல்லா சுவாமிக்கு மாலை அணிவித்து வீதியுலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் சென்றனர். அப்போது அனைத்து வீடுகளிலும் புது மண்கலயத்தில் பானகம் வைத்து அவல், தேங்காய், பழங்கள் சகிதம் அல்லா சுவாமியை வழிப்பட்டனர். இன்று காலையும் கிராமத்தின் அனைத்து வீடுகளுக்கும் அல்லா சுவாமியை தாரை, தப்பட்டையுடன் எடுத்துச் சென்றனர். அப்போது வீட்டுக்கு வீடு அல்லா சுவாமிக்கு எலுமிச்சை, ரோஜா மாலைகள் மற்றும் பட்டுத்துண்டு சாத்தி வழிபட்டனர்.
மீண்டும் செங்கரையில் சாவடிக்கு வந்ததும், அல்லா சுவாமியை தூக்கி வந்த நபர்கள் முதலில் தீக்குண்டத்தில் இறங்கினர். அவர்களைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தீ குண்டத்தில் இறங்கி வழிபட்டனர்.
» பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக நூதன மோசடி: இருவர் கைது!
» ஓமன் கடலில் மூழ்கிய சரக்குக்கப்பல் - 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயம்
இது குறித்து பேசிய கிராம மக்கள், “எங்கள் கிராமத்தில், குளம் வெட்டப்பட்ட போது உள்ளங்கை உருவத்தில் ஒரு உலோகம் கிடைத்தது. அதை நாங்கள் அல்லாவின் கையாக கருதி, அதற்காக கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறோம். இவ்விழாவை இந்துக்களான நாங்கள் கொண்டாடும் போது, இஸ்லாமியர்களும் உடன் இருந்து அவர்களும் வழிபடுகின்றனர். இந்துக்கள் அதிகம் இருப்பதால், இந்து முறைப்படியே வீதியுலா, தீக்குண்டம் இறங்குவது போன்ற விநோத வழிபாடை நாங்கள் செய்கிறோம்.
எங்கள் ஊரில் பிறந்த பெண்கள் அனைவரும் மொஹரம் திருவிழாவின் போது பிறந்த வீட்டுக்கு வந்து பானகம் தயாரித்து அல்லாவுக்கு வழங்குவதை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக, மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், இந்த விழாவை கிராம விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். இதற்காக பத்து நாளும் கிராமமே மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும்” என்றனர்.