ஆறுபடை வீடு மட்டும்தானா... குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது போல் ஏராளமான கோயில்கள் குமரக் கடவுளுக்கு அமைந்திருக்கின்றன. கெளமாரம் என்று சொல்லப்படும் குமார வழிபாடு பிற்காலத்தில் வந்ததுதான் என்றாலும் பெரும்பாலான பக்தர்கள், எளிய வழிபாடுகளின் மூலமாக முருக பக்தர்களாகவே திகழ்கிறார்கள்.
ஆறுபடை வீடுகளில் ஞானகுருவாக, குருவாக சுவாமிமலையிலும் திருச்செந்தூரிலும் முருகன் அருளாட்சி செய்துவருகிறார் என்கிறார் பாலாஜி குருக்கள். ’’ஞானகுருவாக முருகப்பெருமான்; உலகுக்கே தந்தையான சிவனார்; குரு வியாழ பகவான், சனீஸ்வரர் என அமைந்திருக்கும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கு வந்தாலே, ஒரேமுறை தரிசித்தாலே மகா புண்ணியம். இப்பிறவியில் நமக்குக் கிடைக்கும் பாக்கியம். இங்கே, செந்தூருக்கு வந்தால், குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம். ஞானமும் யோகமும் பெற்று சகல ஐஸ்வரியங்களுடன் வாழலாம். சகல தோஷங்களைப் போக்கி அருளுவார் செந்தில் வேலன். சனீஸ்வரரின் அருளையும் பெறலாம்’’ என்கிறார் பாலாஜி குருக்கள்.
குரு வியாழ பகவானுக்கு உரிய க்ஷேத்திரங்களில் ஒன்றான திருச்செந்தூருக்கு வந்து, செந்திலாண்டவரைத் தரிசித்தால், குருவருள் கிடைக்கப் பெறலாம் என்கிறது ஸ்தல புராணம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது திருச்செந்தூர் திருத்தலம். கடலோரத்தில் அமைந்துள்ள அற்புத ஆலயம். சூரபத்மனை அழிப்பதற்காக, சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் செய்தார் என்கிறது கந்தபுராணம்.
சூரபத்மனை அழிப்பதற்காக, தேவர்களின் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டார் முருகப்பெருமான். வழியில் வந்த போது, தாரகாசுரனை அழித்தார். கிரெளஞ்ச மலையைப் பிளந்து அதையும் ஒழித்தார். அப்போது செந்தூர் திருத்தலத்துக்கு வந்தார். தன் படை பரிவாரங்களுடன் அங்கே அந்த க்ஷேத்திரத்தில் தங்கினார். அங்குதான், பத்மாசுரனை அழித்தொழித்தார் என்று விவரிக்கிறது ஸ்தல புராணம்!
அப்போது, அங்கே... முருகப்பெருமானின் தந்தையான, உலகுக்கே தந்தையான சிவபெருமானை வணங்கி வழிபடுவதற்காக, தேவதச்சனான மயனிடம் ஆலயம் ஒன்றை எழுப்பிக்கும்படி பணித்தார் முருகக் கடவுள். அதன்படி கடலோரத்தில், மயன் அமைத்த ஆலயமே திருச்செந்தூர் திருத்தலம்.
மேலும், குரு பகவான் என்று போற்றப்படும் வியாழ பகவானால் வணங்கி வழிபடப்பட்ட திருத்தலம் எனும் பெருமை கொண்டது இந்தத் திருத்தலம். அதனால்தான் திருச்செந்தூர் குரு பகவான் திருத்தலம் என்றும் வியாழ க்ஷேத்திரம் என்றும் போற்றப்படுகிறது.
கடல் அலைகள் கரையில் வந்து மோதிக்கொண்டே இருக்கும் தலம் திருச்செந்தூர். அதனால், இந்தத் தலத்துக்கு திருச்சீரலைவாய் எனும் பெயரும் உண்டு. சூரனை சம்ஹரித்து வெற்றி பெற்ற தலம் என்பதால் ஜெயந்திபுரம் எனும் திருநாமம் அமைந்தது.
ராமாயண காலத்துக்கு முந்தைய திருத்தலம் என்ற பெருமையும் திருச்செந்தூருக்கு உண்டு. இந்தத் தலத்துக்கு, கபாடபுரம் என்றொரு பெயரும் உண்டு. வால்மீகி ராமாயணத்தில், ‘கபாடபுரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், ராமாயணத்துக்கு முந்தைய காலத்திலேயே திருச்செந்தூர் திருத்தலம் அமைந்திருக்கிறது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
முதல் பிராகாரத்தில், தெற்கில் ஜயந்தி நாதர் சந்நிதி அமைந்துள்ளது. குமாரவிடங்கப் பெருமான், ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் அழகுற அருளும் பொங்கத் திருக்காட்சி தருகிறார். மேலும், தென்மேற்கில் ஸ்ரீவள்ளிக்கும் வடமேற்கில் ஸ்ரீதெய்வானைக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைந்திருக்கின்றன என்பதே சிறப்புக்கு உரியன என்பார்கள்.
திருச்செந்தூர் திருத்தலத்தின் இன்னொரு சிறப்பு... ஓம் எனும் பிரணவத்தை அடிப்படையாகக் கொண்ட தலம் இது. அதாவது, வாஸ்து விஷயங்களுடன் கட்டமைக்கப்பட்ட, ஓம் பிரணவ அடையாளங்களுடன் திகழும் ஆலயம் என்கிறது ஸ்தல புராணம். அதனால்தானோ என்னவோ... மிகுந்த சக்தியுடனும் சாந்நித்தியுடனும் திகழ்கிறது திருச்செந்தூர் திருத்தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். வருடத்தின் 365 நாட்களும் பக்தர்கள் திரளாக வந்து தரிசிக்கும் திருத்தலமாக இருக்கிறது.
திருச்செந்தூர் தலத்தை, வீரபாகு க்ஷேத்திரம் என்றும் போற்றுகிறார்கள். கோயிலின் அர்த்தமண்டபத்தில் வீரபாகுவும் வீர மகேந்திரரும் காவல் தெய்வங்களாக காட்சி தந்து காத்துவருகின்றனர். இந்தத் தலத்தில் வீரபாகுவுக்கு முதலில் பூஜை நடந்த பிறகுதான், முருகக் கடவுளுக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. அதேபோல், வீரபாகுவுக்கு ‘பிட்டு’ நைவேத்தியம் செய்யப்படுவதும் திருச்செந்தூர் கோயிலின் சிறப்புகளில் ஒன்று!
சிவபெருமானை வணங்குவதற்காக முருகப்பெருமான் எழுப்பிய திருச்செந்தூர் திருத்தலத்தில், குரு வியாழ க்ஷேத்திரத்தில், சனீஸ்வர பகவானுக்கு தனிச்சந்நிதியும் அமைந்துள்ளது. அதாவது, ஞானகுருவாக முருகப்பெருமான்; உலகுக்கே தந்தையான ஈசன், குரு வியாழ பகவான், சனீஸ்வர பகவான் என ஒருசேர அமைந்திருக்கும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கு வாழ்வில் ஒரேயொரு முறை வந்தாலே புண்ணியம். தரிசித்தாலே மகா புண்ணியம். கடல் நீராடி, செந்திலாண்டவரை வேண்டிக் கொண்டால், நம் ஏழு ஜென்ம பாவங்களும் நீங்கப் பெற்று, குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம். சனீஸ்வரரின் அருளைப் பெறலாம். சகல தோஷங்களையும் நீக்கி அருளுவார் வெற்றிவேலன்.
வேல்வேல் முருகா... வெற்றிவேல் முருகா!