திருப்போரூர் செங்கல்பட்டுக்கு அருகே உள்ளது. இங்குள்ள முருகப்பெருமான் ஆலயத்தை மிகப்பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகக் கொண்டாடுகிறார்கள் முருக பக்தர்கள்.
சுமார் 700 வருடப் பழைமையான கோயில் இது. புராதனப் பெருமைகளும் புராணப் பெருமைகளும் கொண்ட திருத்தலம் என்று போற்றுகிறது ஸ்தலபுராணம். முருகன்புகழை ஓங்கி ஒலிக்கச் செய்த அருணகிரிநாதர், இந்தத் தலத்துக்கு வந்து, முருகப்பெருமானைத் தரிசித்தார். திருப்புகழ் பாடினார். அதேபோல், சிதம்பர சுவாமிகளும் இங்கு வந்து முருகக் கடவுளைத் தரிசித்திருக்கிறார்.
நமக்கெல்லாம் அம்மையும் அப்பனுமாகத் திகழ்பவர்கள் சிவனாரும் பார்வதிதேவியும். பல ஆலயங்களில், சிவனார், லிங்கத் திருமேனியாக, சுயம்புவாக எழுந்தருளியது போலவே, இங்கே மைந்தன் கந்தனும் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றினார் என விவரிக்கிறது ஸ்தல புராணம்.
ஆகவே, மூலவருக்கு இங்கே அபிஷேக ஆராதனைகள் இல்லை. ஆலயத்தின் கருவறையில், ஸ்ரீசுப்ரமண்ய யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்த்ரத்துக்குத்தான் அபிஷேக ஆராதனைகள் என விமரிசையாக நடந்தேறுகின்றன. இந்த யந்த்ரத்தில் கந்தக் கடவுளின் திருநாமங்கள் சுமார் 300-க்கும் மேல் பொறிக்கப்பட்டிருப்பதாக ஸ்தல புராணம் சொல்கிறது.
கோயிலும் அழகு. எதிரில் உள்ள திருக்குளமும் அழகு. அப்பனுக்கே பாடம் சொன்னவனாயிற்றே முருகக்கடவுள். பிரணவப் பொருள் தெரியாததால் அந்த பிரம்மாவையே சிறைவைத்தவனல்லவா... இங்கே, திருப்போரூர் முருகக் கடவுள், பிரம்மாவுக்கு உரிய அட்சமாலையை கையில் ஏந்தியபடி காட்சி தருகிறார். அதுமட்டுமா? மகாவிஷ்ணுவைப் போல இடது திருக்கரத்தை தொடையில் வைத்தபடி காட்சி தருகிறார். சிவனாருக்கே உரித்த அபய ஹஸ்த முத்திரையுடன் தரிசனம் தருகிறார். ஆக, சிவா, விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாவே திகழ்கிறார் ஸ்ரீமுருகக் கடவுள்!
பிரளயத்தால் ஆறு முறை அழிவைச் சந்தித்து, ஏழாவது முறையாகக் கட்டப்பட்ட திருக்கோயில் இது என ஸ்தல புராணம் விவரிக்கிறது. ’ஓம்கார’ அமைப்பில் அமைந்த ஆலயம் எனும் கூடுதல் விசேஷமும் இதற்கு உண்டு.
எல்லாக் கோயில்களிலும் கோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் கொடிமரம் அமைந்திருக்கும். ஆனால் இங்கே, கோபுரத்திற்கு வெளியே இருக்கிறது கொடிமரம். அதேபோல, முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் சுவாமிமலை, திருத்தணி முதலான திருக்கோயில்களில் முருகப் பெருமானின் சந்நிதிக்கு எதிரே ஐராவதம் எனும் வெள்ளை யானை வாகனமாக நிறுத்தப்பட்டிருப்பதைத் தரிசிக்கலாம். இங்கேயும் ஐராவதம் இருக்கிறது.
பொதுவாகவே வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகப்பெருமானையே தரிசித்திருப்போம். ஆனால் இந்தத் தலத்தில், வள்ளிக்கும் தெய்வானைக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைந்திருக்கின்றன. மூலவரான முருகன் சந்நிதியின் கோஷ்டப்பகுதியில், பிரம்ம சாஸ்தா எனும் வடிவம் வைக்கப்பட்டு உள்ளது. இதை முருகனின் இன்னொரு வடிவம் என்றும் சொல்கின்றனர் முருக பக்தர்கள்.
இன்னொரு சிறப்பு... ஆச்சரியம்... திருப்போரூர் கோயிலில், நவக்கிரக சந்நிதி இல்லை. கந்தக் கடவுளை தரிசித்து வேண்டிக் கொண்டாலே, அனைத்து விதமான கிரக தோஷங்களும் விலகும் என்பது இந்தத் தலத்தின் மற்றுமொரு சிறப்பு.
வைகாசி விசாகமும் தைப்பூசத் திருவிழாவும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. விசாக விழாவில், சுவாமிக்கு திருப்பாவாடை வைபவமும் தைப்பூசத் திருவிழாவின் போது தெப்ப உற்சவமும் சிறப்புற நடைபெறும். அதேபோல் ஐப்பசியில் கந்தசஷ்டி வைபவமும் விமரிசையாக நடைபெறும்.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு உள்ள யந்திர முருகனை வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம் நீங்கப் பெறுவார்கள். மாங்கல்ய பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம். இங்குள்ள அம்மனும் சிறப்பு வாய்ந்தவள். சக்தி மிக்கவள். திருப்போரூர் திருத்தலத்துக்கு வந்து வேண்டிக் கொண்டால், கேட்டது அனைத்தும் விரைவில் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதேபோல, பிரார்த்தனை நிறைவேறியவர்கள், சுவாமிக்கு திரிசதி அர்ச்சனை செய்வது இங்கே உள்ள மிக முக்கியமான நேர்த்திக்கடனாகச் சொல்வார்கள். மேலும், பால் குடம் எடுத்து வேண்டுதல் செலுத்துவார்கள். அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஸ்ரீமுருகன் சந்நிதி சுற்றுச்சுவரில் அவரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இந்தத் திருநாமம் அமைந்தது.
வெளிநாடு செல்ல விரும்புபவர்கள், அதாவது, கடல் கடந்து செல்ல நினைப்பவர்கள், திருப்போரூர் முருகனிடம் அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் நலமாக இருக்கவும் இவரை வேண்டிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதால் முருகனை சிவ அம்சமாக வழிபடுகிறார்கள் சிவனடியார்கள். பிரணவ மந்திரப் பொருள் தெரியாத பிரம்மாவை சிறையிலடைத்தபோது, முருகனே படைப்புத்தொழில் செய்தார் என்கிறது புராணம். இதனால் இவரை பிரம்மாவின் அம்சமாகவும் வழிபடுகிறார்கள். திருச்செந்தூர் முதலான திருத்தலங்களில் விழாக்காலங்களில் சுவாமி, மும்மூர்த்திகளின் அலங்காரத்தில் எழுந்தருளுவார். திருப்போரூர் திருத்தலத்தில், மும்மூர்த்திகளின் அம்சமாகவே தினந்தோறும் காட்சி தருகிறார் ஸ்ரீகந்தசுவாமி.
கோயிலுக்கு அருகிலுள்ள சிறிய குன்றில் ஸ்ரீகயிலாசநாதர்- பாலாம்பிகை அம்பாள் கோயில் உள்ளது. மலையில் சிவனும், அடிவாரத்தில் முருகனுமாக அமைந்த திருத்தலம் எனும் பெருமையும் கொண்டது திருப்போரூர். முருகன் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் அபிஷேகத்திற்குப் பதிலாக புனுகு மட்டும் சாத்துகின்றனர்.
சிவாலயங்களில் அம்பாளுக்கும் பெருமாள் கோயில்களில் தாயாருக்கும் நவராத்திரி விழா சிறப்புற நடைபெறும். உமையவளின் மருமகள்களான வள்ளி தெய்வானைக்கும் நவராத்திரி விழா இங்கு விமரிசையாக நடைபெறுகிறது. இந்த நாட்களில் வள்ளி, தெய்வானைக்கு ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்யப்படும்.
அதேபோல் சிவனாரைப் போல ஐப்பசி பௌர்ணமியில் முருகப்பெருமானுக்கு இங்கே அன்னாபிஷேகமும், சிவராத்திரி நாளில், இரவில் நான்கு கால பூஜையும் விமரிசையாக நடக்கிறது. இங்குள்ள அம்பிகை புண்ணியகாரணியம்மன் என்று கொண்டாடப்படுகிறாள்.
இந்தக் கோயில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியின் கீழே இருந்தது. மதுரையில் வாழ்ந்த ஸ்ரீசிதம்பர சுவாமியின் கனவில் தோன்றி, இதையெல்லாம் தெரிவித்தார் முருகக் கடவுள்.
உடனே, சிதம்பர சுவாமிகள், திருப்போரூர் வந்தார். முருகனின் திருமேனியைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தினார். புதிய ஆலயம் எழுப்பினார். அத்துடன் கந்தசுவாமியைப் போற்றி ஏராளமான பாடல்களைப் பாடி அருளினார். எனவே, இங்கே ஆலயத்தில் ஸ்ரீசிதம்பரம் சுவாமிகளுக்கு சந்நிதி அமைந்திருக்கிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு குருபூஜை வைபவம் சிறப்புற நடைபெறுகிறது.
அருணகிரிநாதர் திருப்புகழில் இந்தத் தலம் குறித்துப் பாடும் போது, சகல வேதங்களின் வடிவம் என கந்தபெருமானைக் குறிப்பிடுகிறார். இதனால் முருகக்கடவுளுக்கு வேத உச்சி யாக சுவாமி என்றும் பெயர் உண்டு. எனவே, கல்வியில் சிறக்கவும் ஞானம் பெறவும் திருப்போரூர் கந்தசுவாமியை வேண்டிச் செல்கின்றனர் பக்தர்கள்.
சென்னையை அடுத்த வண்டலூர், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு முதலான இடங்களில் இருந்து திருப்போரூர் செல்ல பஸ் வசதி உண்டு. தாம்பரம், கோயம்பேட்டில் இருந்தும் பஸ் வசதி உண்டு. சோளிங்கநல்லூர் - செங்கல்பட்டு சாலையில் உள்ளது திருப்போருர் கந்தசுவாமி திருக்கோயில்.