ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம்: ஜுலை 19-ல் தொடக்கம்!

By துரை விஜயராஜ்

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கான ஆன்மிகப் பயணம் ஜூலை 19-ம் தேதி தொடங்க இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

2024-2025-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், “ஆடி மாதத்தில் பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் கோயில்களுக்கும் 60 முதல் 70 வயதிற்கு உட்பட்ட, 1,000 பக்தர்கள் இந்து அறநிலையத்துறை மூலமாக அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்“ என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி மாதத்தில் 1,000 மூத்த குடிமக்களை கட்டணமின்றி ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர், கற்பகாம்பாள் கோயில், பாரிமுனை காளிகாம்பாள் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும், திருச்சி மண்டலத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோயில், உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், சமயபுரம் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர்

அதேபோல் மதுரை மண்டலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், அழகர்கோவில் ராக்காயியம்மன் கோயில், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும், கோவை மண்டலத்தில் கோவை கோனியம்மன் கோயில், பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், சூலக்கல் மாரியம்மன் கோயில், கோவை தண்டுமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இதே போல் தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோயில் வராகியம்மன் கோயில், தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில், புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோயில், திருக்கருகாவூர் கர்ப்ப ரட்சாம்பிகை கோயில், பட்டீஸ்வரம், துர்கையம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும், திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி, பகவதியம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குழித்துறை சாமுண்டியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

இதற்கான முன்பதிவை இந்து சமய அறநிலையத்துறை தொடங்கியுள்ளது. அந்த வகையில், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 17-ம் தேதிக்குள் அந்தந்த மண்டல அலுவலகத்தில் பக்தர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE