திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்!

By வ.செந்தில்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வரும் மே 22-ம் தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளன.

மலையே மகேசன் என போற்றப்படும் திருவண்ணாமலையில் உள்ள திரு அண்ணாமலையை பவுர்ணமி நாளில் 14 கி.மீ. கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபடுகின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

அதன்படி, வைகாசி மாத பவுர்ணமி வரும் 22-ம் தேதி (புதன்கிழமை) இரவு 7.09 மணிக்கு தொடங்கி மறுநாள் (23-ம் தேதி - வியாழக்கிழமை) இரவு 7.44 மணிக்கு நிறைவு பெறுகிறது. மேற்கண்ட நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்லலாம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளன.

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தாம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.

பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE