அருள்தரும் சக்தி பீடங்கள் - 44

By கே.சுந்தரராமன்

அம்மனின் சக்தி பீட வரிசையில், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் அமைந்துள்ள காளிகட் காளிகா கோயில், உக்ர சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது. ஆதி கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு அனைத்து மதத்தினரும் வந்து வழிபடுவது தனிச்சிறப்பு.

காளிகட்டா என்ற பெயரில் இருந்து கல்கத்தா என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. பாகீரதி நதிக்கரையில் அமைந்த காளிதேவியின் தீர்த்தக் கட்டம் என்பதால் பின்னாட்களில் காளிகாட் என்பது உருமாறி கல்கத்தா என்று ஆனது.

தல வரலாறு

பகன், முகன் என்ற இரு அசுரர்கள், தங்கள் உடலை வருத்தி, தவம் இயற்றினர். இதன் காரணமாக, ஒப்பற்ற வரங்களைப் பெற்றனர். தங்களுக்கு மிஞ்சிய சாதனையாளர்கள் உலகில் எவரும் இல்லை என்ற ஆணவம் மேலிட, தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல விதங்களில் இன்னல்கள் அளித்து வந்தனர். தவ வலிமையால் பெற்ற வரங்களை எல்லாம் தவறான வழிகளில் இந்த அரக்கர்கள் பயன்படுத்தி வந்தனர். இறைவனுக்கு செய்ய வேண்டிய பூஜைகள், யாகங்களை செய்யவிடாமல் முனிவர்களை அந்த இடத்தில் இருந்து விரட்டி அடித்தனர். தேவர்களும் இவர்களுடன் போரிட்டு தோல்வியைத் தழுவினர்.

செய்வதறியாது தவித்த தேவர்களும், முனிவர்களும், பின்னர் காசி விஸ்வநாதரை சரண் புகுந்து, தங்கள் மனக் குறைகளைத் தெரிவித்தனர். பிறை சூடிய பெருமானும், அசுரர்களை அழித்து, தேவர்களையும் முனிவர்களையும் காக்க திருவுள்ளம் கொண்டார்.

அதன்படி இரு பெண்களை அவதரிக்கச் செய்தார். காளிகா தேவி, பகவதி தேவி ஆகிய இருவரையும் தோற்றுவித்து, இரு அசுரர்களை அழிக்கச் செய்தார். மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காக ஒரு தேவி வட எல்லையிலும் (கல்கத்தா), மற்றொரு தேவி தென் எல்லையிலும் (குமரி) கோயில் கொண்டனர்.

காளிகட் பகுதியில் கோயில் கொண்ட காளிகா தேவி, மிகவும் பயங்கர வடிவத்தைக் கொண்டவராக உள்ளார். தாட்சாயணியின் கோபத்தில் உருவான மாகாளியைப் போன்று கோபம் கொண்டவராக அமைந்திருந்தாலும், ஒரு தாயின் கருணையோடு அனைவரையும் காத்து வருகிறார் காளிகா தேவி.

சமுத்திர ஸ்நானம்

காளிகட் பகுதியில் கங்கையும் கடலும் கலப்பதால், இங்கு நீராடுவது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, புராணங்களிலும் புனித நீராடல் குறித்து விசேஷமாகக் கூறப்படுகிறது. இதனால் ஸ்நான கட்டத்துக்கு அருகில் நிறைய தர்ம சத்திரங்கள் கட்டப்பட்டுள்ளன. இவ்விடத்தில் பூஜைக்குத் தேவையான சந்தனம், துளசி, மலர்கள், விளக்குகள் கிடைக்கப் பெறுகின்றன. பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு திதி கொடுக்கும் வழக்கமும் இங்கு உள்ளது. ஸ்நானம், பூஜை, சங்கல்பம், தர்ப்பணம் கொடுப்பது ஆகியவற்றை முடித்த பிறகே பக்தர்கள் காளி தரிசனத்துக்குப் புறப்படுகின்றனர்.

காளி கோயில்

200 ஆண்டு கால பழமையானதாக கோயிலமைப்பு இருந்தபோதிலும், இக்கோயில் பற்றிய தகவல்கள் 15 முதல் 17-ம் நூற்றாண்டு இலக்கிய பதிவுகளிலும் காணப்படுகின்றன. முதலாம் குமாரகுப்தா காலத்திய நாணயங்கள் இத்தலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முன்பு சிறிய குடிசையாக இருந்த இந்தக் கோயில் மானசிங் மன்னரால் 16-ம் நூற்றாண்டில் விரிவாக்கம் செய்து கட்டப்பட்டது. பின்னர் சபர்ணா ராய் சௌத்ரி குடும்பத்தினர் தற்போதைய அமைப்புள்ள கோயிலை 1806-ல் கட்டினர்.

கங்கை வங்கக் கடலுடன் கலக்கும் இடம் ‘கங்கா சாகர்’ என்று அழைக்கப்படுகிறது, முன்பொரு காலத்தில் இதன் முகத்துவாரத்தில் கபில முனிவர் வசித்து வந்தார். இன்றும் கபில முனிவர் பெயரில் இங்கு கோயில் உள்ளது.

ஒரு சமயம் கபில முனிவரை தரிசிக்க காபாலிக முனிவர்கள் வந்திருந்தனர். கங்கா சாகரில் புனித நீராடிய பின்னர், கபில முனிவரை சந்திக்க காடு வழியாக வந்து கொண்டிருந்தனர். வரும்வழியில் விரல்கள் வடிவில் ஒரு பாறை தென்பட்டது. அருகில் சென்று பார்த்தபோது அந்த பாறை காளி வடிவில் இருந்தது. அந்த பாறையை வழிபாட்டு தெய்வமாக நினைத்து அவர்கள் வழிபட்டனர். அந்தச் சிலையே (பாறை) இன்றைய காளிகாட் காளிதேவி. கொல்கத்தாவின் டாலிகஞ்ச் பகுதியில் காளிகாட் கோயில் அமைந்துள்ளது. இந்த இடம் முதலில் ‘காலேஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டது.

காளிதேவி மகா சக்தி பீடம்

காளிகாட் காளி கோயில் அமைந்துள்ள இடம் ஒருகாலத்தில் வனங்கள் சூழ்ந்து காணப்பட்டது. அப்பொது ஆத்மராம் என்ற பக்தர், தேவியை தினம் ஆராதித்து வந்தார். தினம் பாகீரதி நதிக் கரையில் காளிதேவியைப் போற்றும் மந்திரங்களை உச்சரிப்பதும் அதன்பிறகு கோயிலுக்கு வந்து காளிதேவியை வழிபடுவதும் நடைபெற்றன.

ஒருநாள் மாலை நேரத்தில், பாகீரதி நதிக் கரையில் ஆத்மராம் மந்திர உச்சாடனம் செய்யும்போது, கண்களைப் பறிக்கும் ஒளிக்கதிர் தோன்றியது. இதைக் கண்டு ஆத்மராம் வியந்தார். சிறிது நேரத்தில் அந்த ஒளி மறைந்தது. பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது, தெளிவான தண்ணீருக்கு அடியில் மனிதக் கால் விரல்கள் போல் தோன்றும் சிறிய கல் ஒன்றைக் கண்டார். அந்தக் கல்லில் தோன்றிய விரல்கள், தாட்சாயணியின் வலது கால் விரல்கள் என்பதை உணர்ந்த ஆத்மராம், அதை எடுத்து வந்து, கோயிலில் உள்ள காளிதேவியின் பாதங்களோடு ஒட்டிவைத்து வழிபாடு செய்தார். அந்த இடமே தற்போது மகா சக்தி பீடமாகக் கருதப்படுகிறது.

கல் இருந்த இடத்தருகே ஒரு சிவலிங்கமும் இருந்ததால், அதையும் எடுத்து வந்து காளிதேவியின் அருகே வைத்து வழிபட்டார். அவருக்கு ‘நகுலேஷ்வர பைரவர்’ என்று பெயர் சூட்டி, தினமும் வழிபாடு செய்தார் ஆத்மராம். விரல்கள் போல காணப்பட்ட கல், தற்போது வெள்ளிப் பேழைக்குள் வைக்கப்பட்டு, காளி சிலையின் அடியில் வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்ஹார நாயகி

காளிதேவியின் இடது மேற்கரத்தில் மகா பத்ராத்மஜன் என்ற வாள் உள்ளது. கீழ்க்கையில் குருதி சொட்டும் அசுரனின் தலை காணப்படுகிறது. வலது மேற்கரத்தில் அபய முத்திரையும் கீழ்க் கரத்தில் வரம் அருளும் முத்திரையும் உள்ளன. கருமை நிறம் தாங்கி, மண்டை ஓட்டு மாலை அணிந்து அசுரரை வதம் செய்த பின்னர் உக்கிரத்துடன் காளிதேவி திரும்பினார். யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் காளிதேவி இருந்தார்.

காளிதேவியை சாந்தப்படுத்த வேண்டும் என்று நினைத்த சிவபெருமான், அவர் வரும்வழியில் குறுக்காகப் படுத்துக் கொண்டார். சிவபெருமான் மேல் கால் இடரி, காளிதேவி விழுவதற்கு முற்படும் சமயத்தில், தன் தவறை உணர்ந்து நாக்கைக் கடிக்கும் நிலையே அவரது தோற்றமாகக் கொள்ளப்பட்டது.

காளிதேவி சம்ஹார நாயகியாக இருப்பதால் மூன்று கண்களுடன் அருள்பாலிக்கிறார். காளிதேவியின் கழுத்தில் உள்ள 51 கபால மாலை 51 மாத்ருகா அக்‌ஷரங்களாக கருதப்படுகின்றன. இவை கோடானுகோடி மந்திரங்களுக்கு ஆதாரமாக போற்றப்படுகின்றன.

தட்சிணேஷ்வர் காளி

ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள தட்சிணேஷ்வர் காளி கோயிலில் காளிதேவி பவதாரிணியாக இருந்து அருள்பாலிக்கிறார். இந்த காளிதேவியை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தினமும் பூஜித்து வந்தார். 1847-ம் ஆண்டு ராணி ராசமணி தேவியார் காசி யாத்திரை செல்ல விரும்பினார். 24 படகுகளில் உறவினர்களுடன் யாத்திரை கிளம்பத் தயாரானார். அதிகாலை கிளம்ப வேண்டும் என்று இருந்த நிலையில், முதல்நாள் ராணியின் கனவில் தோன்றிய அம்பாள், கல்கத்தாவிலேயே தனக்கு கங்கை ஆற்றங்கரையில் கோயில் அமைக்குமாறு பணித்தார். அதன்படி, ஒன்பது விமான அமைப்புகளைக் கொண்டு காளிதேவிக்கு, ராணி ஒரு கோயிலை நிர்மாணித்தார்.

கங்கை ஆற்றங்கரையில் சிவபெருமானுக்கு 12 சிறு கோயில்கள் அமைந்துள்ளன. காளிதேவிக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரின் தமையனார் பூஜைகள் செய்துவந்தார். அவரது காலத்துக்குப் பிறகு ராமகிருஷ்ணர் காளிதேவிக்கு பூஜைகள் செய்து அவரது தரிசனத்தைப் பெற்றார். இதே இடத்தில் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சரை குருநாதராக ஏற்று அருள்பெற்றார். துறவியாக ஆக வேண்டும் என்று முடிவு செய்து, பின்னர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார் சுவாமி விவேகானந்தர்.

துர்கா பூஜை

இங்கு நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். துர்கா மாதாவின் அருள்பெற துர்காதேவிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்யப்படும். எண்ணற்ற பக்தர்கள், வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் வந்திருந்து காளிதேவிக்கு வழிபாடுகள் செய்வது வழக்கம். காளிதேவி அசுர சக்திகளை அழிப்பது போன்று விதவிதமான தோற்றங்களில் அவரை வடித்து, வழிபாடுகள் நடைபெறும். விஜயதசமி தினத்தில் ராமபிரான் ராவணனை அழித்தார் என்று கூறப்படுகிறது. நவராத்திரி நாட்களில் தேவி மகாத்மியம், தேவி பாகவதம் படிப்பதாலும் கேட்பதாலும் அதிக நன்மை ஏற்படும்.

மனதில் உதிக்கும் தீய குணங்களான ஆணவம், முறைகேடு, நியாயமின்மை, கோபம், லோபம், காமம், மோகம், தற்பெருமை, பொறாமை, சுயநலம் ஆகியவற்றைக் களைந்து வெற்றியை நம் வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே காளி அவதாரத்தின் தாத்பர்யம் ஆகும். நல்ல விஷயங்களை நமக்குக் கற்றுக்கொடுப்பதில் நம் முன்னோர், பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள், ஆச்சாரியர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். காளிதேவியும் குருவாக இருந்து, அனைவருக்கும் நல்லவற்றை அருள்கிறார். உக்கிர கோலத்தில் வந்திருந்து, நம் தீய எண்ணங்களை அழித்து, நன்மை அருள்கிறார்.

மகாகவி பாரதியார் தனது காளி ஸ்தோத்திரத்தில்,

காளி மீது நெஞ்சம் என்றும் கலந்து நிற்க வேண்டும்

வேளையொத்த விறலும் பாரில் வேந்த ரேத்து புகழும்

யாளியொத்த வலியும் என்றும் இன்பம் நிற்கும் மனமும்

வாழி யீதல் வேண்டும் அன்னாய் வாழ்க நின்தன் அருளே!

என்று பாடுகிறார்.

ஓம் சக்தி..!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE