வெள்ளி வழிபாடு: சுக்கிர யோகம் தரும் மகாலட்சுமி மந்திரம்!

By காமதேனு

வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி மந்திரம் சொல்லி மனதார வேண்டிக்கொள்ளுங்கள். சுக்கிர யோகத்தைத் தந்தருளுவாள் மகாலட்சுமி. சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெற்று இனிதே வாழச் செய்வாள் தேவி.

வெள்ளிக்கிழமையின் நாயகி மகாலட்சுமி தேவி. பெரும்பாலான விஷ்ணு ஆலயங்களில், பெருமாளின் திருமார்பிலேயே குடிகொண்டிருக்கும் விதமாகக் காட்சி தந்தருளுவாள் மகாலட்சுமி. பல ஆலயங்களில், தனிச்சந்நிதியில் எழுந்தருளி, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருவாள்.

அம்பாளை வழிபட்டு வந்தால், தைரியமும் வீரியமும் மனோபலமும் எப்படிக் கிடைக்கச் செய்வாளோ, மகாலட்சுமியை வணங்கினால், தனம் தானியத்தைத் தந்து நம்மை ஐஸ்வர்ய கடாட்சத்துடன் வாழச் செய்வாள் என்பது ஐதீகம்.

அதனால்தான், நவராத்திரியின் ஒன்பது நாட்களில், துர்கையை வழிபடுகிறோம். மகாலட்சுமியை வழிபடுகிறோம். சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம். கலையும் கல்வியும் அவசியம். தைரியமும் காரியத்தில் திடமும் முக்கியம். அதேபோல், வாழ்வதற்குப் பொருளும் தனமும் செல்வமும் அவசியம். அதனால்தான் முப்பெருந்தேவியரை வணங்கச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்றே சொல்லுவார்கள். ஒருவரின் வாழ்வில் ஏற்றங்களும் நல்ல மாற்றங்களும் வந்தால், ‘அவருக்கென்னப்பா... சுக்கிர திசை அடிச்சிருச்சு’ என்பார்கள். ‘சுக்கிரயோகம் அவருக்கு இருக்குப்பா. அதான் மளமளன்னு முன்னேறிட்டாரு’ என்பார்கள். சுக்கிர யோகம் கிடைக்கவேண்டும் என்றால், மகாலட்சுமியின் பேரருளைப் பெறுவது முக்கியம்.

மகாலட்சுமியின் ஸ்லோகங்களில் மிக மிக எளிமையான ஸ்லோகம் இது.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம:

இந்த ஒற்றை மந்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் தலா 108 முறை சொல்லிவரவேண்டும். வெள்ளிக்கிழமையன்று வீட்டில் இருக்கும் மகாலட்சுமி படத்துக்கோ சிலைக்கோ வெண்மை நிற மலர்கள் சார்த்துங்கள். தாமரை மலர் சூட்டுங்கள். தூப தீப ஆராதனை செய்யுங்கள். அவளுக்கு எதிரே அமர்ந்துகொண்டு, கண்கள் மூடி, இந்த ஸ்லோகத்தை 108 முறை ஜபியுங்கள். ஜபித்து முடித்ததும் மகாலட்சுமிக்கு பால் பாயசம் அல்லது வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமியின் மந்திரம் சொல்லி, ஆத்மார்த்தமாக வேண்டிவந்தால், சகல ஐஸ்வர்யங்களும் தந்தருளுவாள். தனம் தானியம் பெருகும். இல்லத்தில் இதுவரை இருந்த தரித்திரம் விலகும். சுக்கிர யோகம் கிடைக்கப் பெற்று, வாழ்வில் நல்ல மாற்றங்களும் ஏற்றமும் நிச்சயம் என்கிறார்கள் வைஷ்ணவ ஆச்சார்யப் பெருமக்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE