ஆயுதபூஜை செய்ய உகந்த நேரம்!

By வி. ராம்ஜி

ஆயுதபூஜையை உரிய முறையில் பூஜித்து வழிபட்டால், தொழில் சிறக்கும். வியாபாரத்தில் ஏற்றம் கிடைக்கப் பெறலாம். செய்யும் தொழிலிலும் வியாபாரத்திலும் லாபம் கொழிக்கும் என்பது ஐதீகம்.

நவராத்திரி என்பது புரட்டாசி அமாவாசையை அடுத்த பிரதமையில் இருந்து தொடங்குகிறது. நவம் என்றால் ஒன்பது. ஒன்பது ராத்திரிகளும் அம்பிகைக்கு உரியவை. அம்பிகை வழிபாட்டுக்கு உரியவை. துர்கை, லட்சுமி, சரஸ்வதி என்று முப்பெருந்தேவியரை நம் வீட்டுக்கே வரவழைக்கும் வகையில். ஆவாஹனம் செய்து அவர்களின் அருளைப்பெறும் நன்னாட்கள் இவை.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் கொலு வைப்பதும் புண்ணியம். கொலு வைத்திருப்பவர் வீட்டுக்குச் சென்று பார்ப்பதும் புண்ணியம். ஒவ்வொருநாளும் தேவிக்கு ஒவ்வொரு விதமான நைவேத்தியம் படைப்பதும் கொலுவுக்கு வருகிற பெண்களுக்கு புடவை, வளையல், ஜாக்கெட் பிட், குங்குமம், மருதாணி முதலான மங்கலப் பொருட்கள் வழங்குவதும் இல்லத்திலும் உள்ளத்திலும் நற்சக்திகள் குடியிருந்து நம்மை அரணெனக் காக்க உதவும்.

நவராத்திரியின் எட்டாம் நாள் அஷ்டமி எனப்படுகிற மிக முக்கியமான நாள். இதை துர்காஷ்டமி என்பார்கள். அக்டோபர் 3-ம் தேதி திங்கட்கிழமை துர்காஷ்டமியைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நவமி. இதுவே நவராத்திரியின் ஒன்பதாம் நாள். இதை ஆயுதபூஜை நாளாகக் கொண்டாடுகிறோம்.

இந்த ஒன்பது நாட்களும் பெண்கள் வழிபாடாக இருப்பது, ஒன்பதாவது நாளில், தொழில் செய்யும் இடங்கள், வியாபார நிறுவனங்கள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் என பல இடங்களிலும் செய்யப்படுகிற பூஜைக்கு உரிய புண்ணிய நன்னாளாகப் போற்றப்படுகிறது. இந்தநாளில், முன்னதாகவே தொழில் செய்யும் இடத்தைத் தூய்மைப்படுத்தி, சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். நாம் தொழிலுக்கு பயன்படுத்துகிற உபகரணங்களையெல்லாம் சுத்தப்படுத்தி, அவற்றுக்கு சந்தனம், குங்குமமிட்டு அலங்கரித்து, பூக்கள் வைத்து தெய்வப் படங்களுக்கு முன்னே வைத்து அவற்றையும் தெய்வத்துக்கு நிகராக வணங்கவேண்டும். சுவாமிக்கு, அவல், பொரி, கடலையுடன், பழங்கள் வைத்து நைவேத்தியம் படைக்கவேண்டும்.

முக்கியமாக, நம் தொழில் சிறந்து விளங்குவதற்கும் வியாபாரம் கொழித்து உயருவதற்கும் நம்மிடம் பணிபுரிகிற ஊழியர்கள் மிக முக்கியமான காரணம். எனவே, அவர்களை இந்த பூஜையில் பிரதானப்படுத்தி, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆயுதபூஜையை மேற்கொள்ளவேண்டும்.

’’அக்டோபர் 4-ம் தேதி ஆயுதபூஜை. செவ்வாய்க்கிழமையில் இந்த பூஜை அமைந்திருக்கிறது. ஆயுதபூஜையை செய்வதற்கு உரிய நேரம் காலை 10.40 முதல் 11.10 மணி வரை. இதையடுத்து மதியம் 12.10 மணி முதல் 1.10 மணி வரையிலான நேரத்திலும் ஆயுத பூஜை வழிபாட்டைச் செய்யலாம்’’ என்கிறார் பாலாஜி வாத்தியார்.

நலமும் வளமும் தரும் நவராத்திரியின் ஒன்பதாவது நாளான ஆயுத பூஜையை தொழிலாளர்களுடனும் வீட்டாருடனும் சேர்ந்து கொண்டாடி வழிபடுவோம். நம் வாகனங்களையும் சுத்தப்படுத்தி, சந்தன குங்குமமிட்டு, ஆராதிப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE