திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம்

By என். மகேஷ்குமார்

பிரசித்தி பெற்ற வைஷ்ணவத் திருத்தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலின் புரட்டாசி பிரம்மோற்சவ விழா, நாளை செவ்வாய்க்கிழமை 27ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவினையொட்டி, திருப்பதி மற்றும் திருமலை நகரமே விழாக்கோலத்தில் ஜொலிக்கிறது.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் என பக்தர்களால் போற்றி வணங்கப்படும், திருப்பதி ஏழுமலையானின் பிரம்மோற்சவ விழா நாளை 27ம் தேதி செவ்வாய்கிழமை இரவு கருடன் சின்னம் பொறித்த கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.

பிரம்மாவே முன்னின்று நடத்தும் விழா என்பதால், இதற்கு பிரம்மோற்சவம் என பெயர் வந்ததாக ஐதீகம். ஆகவே, பிரம்மோற்சவ விழாவின் போது, ஒவ்வொரு வாகனத்தின் முன்பும் ‘பிரம்ம ரதம்’ இழுத்துச் செல்லப்படும்.

முப்பத்து முக்கோடி தேவர்கள் இந்த பிரம்மோற்சவத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வருவதாகவும் அவர்களை கொடியேற்றுவதன் மூலம் அழைக்கப்படுவதாகவும் ஐதீகம். மேள தாளங்கள் முழுங்க, வேத பண்டிதர்கள் வேதங்களை ஓத, பிரம்மோற்சவ விழாவின் கொடி ஏற்றப்படும். பின்னர், ஆந்திர அரசு சார்பில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பட்டு வஸ்திரங்களை சிரசில் வைத்து சுமந்தபடி, கோயில் நேர் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து, ஏழுமலையானின் கோயிலுக்குள் சென்று சமர்ப்பிப்பார். இதையடுத்து, முதல் வாகன சேவையாக ஏழு தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி எழுந்தருளி,நான்குமாட வீதிகளில் பவனி வந்து, பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளாக, கரோனா பரவலால், திருமாட வீதிகளில் வாகன சேவை நடைபெற வில்லை. தேவஸ்தான வரலாற்றிலேயே இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2 ஆண்டுகளுக்கு பின்னர், பழைய கோலாகலத்துடன் பிரம்மாண்டமாக பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்த தீர்மானித்துள்ளது.

விழாக் கோலத்தில் ஜொலிக்கும் திருப்பதி

ஆகவே, இந்த புரட்டாசி பிரம்மோத்சவ வைபவத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புரட்டாசி மாதம் என்பது ஏழுமலையானுக்கு உகந்த மாதமானதால், திருமலையில் இந்தமுறை பல மடங்கு பக்தர்கள் அலைமோதுவார்கள் எனத் தெரிகிறது. அதுவும், பிரம்மோற் சவத்தின் மிக முக்கியமானதான, மிகவும் பிரசித்தி பெற்ற 5-ம் நாள் பிரம்மோற்சவத்தின் மாலை, கருட வாகன சேவை நடைபெறும். அன்றைய தினம் புரட்டாசி சனிக்கிழமையும் வருவதால், பக்தர்கள் கூட்டம் திருமலையில் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பிரம்மோற்சவத்தையொட்டி, வைகானச ஆகம விதிகளின்படி, நேற்றிரவு, ஏழுமலையானின் சேனாதிபதியாக கருதப்படும் விஸ்வகேசவர் 4 மாட வீதிகளிலும் எழுந்தருளி பிரம்மோற்சவ ஏற்பாடுகளை பார்வையிட்டார். முன்னதாக அங்குரார்ப்பன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 5-ம் நாள் பிரம்மோற்சவத்தில், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலையும், கிளியும் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மேலும், தமிழகத்தில் இருந்து மஞ்சள் ஆடை உடுத்தி புரட்டாசி விரதமிருந்து திருமலைக்கு வரும் பக்தர்களும் இம்முறை ஏராளமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், லட்டு பிரசாதங்கள் தடையின்றி கிடைக்க தினமும் 5 லட்சம் லட்டுகள் தயாரிக்க தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE