திருவள்ளூர்: பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் பவானி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
அதன்படி, கோயில் விமானம், 4 கோபுரங்கள், பவானி அம்மன் சந்நிதி, சக்தி மண்டபம், அற்புத சக்தி விநாயகர், முருகன், சீனிவாச பெருமாள் உள்ளிட்ட சுவாமி சந்நிதிகள் புதுப்பித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று வந்தன. அப்பணிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, பவானி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 10ம் தேதி காலை விக்னேஸ்வரர் பூஜை உள்ளிட்ட நிகழ்வுகளுடன் தொடங்கியது.
தொடர்ந்து, இன்று அதிகாலை 5 மணி வரை யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இதனையடுத்து யாக சாலைகளில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள், மேளதாளங்கள் முழங்க விமானம் மற்றும் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. சரியாக அதிகாலை 5.30 மணியளவில் ராஜகோபுரம், பரிவார தெய்வங்கள், பவானி அம்மன் உள்ளிட்ட விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
» சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும்: அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்
» காஞ்சிபுரம் நடுத்தெரு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
இதில் சென்னை, திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.