ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேர் திருவிழா இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேரிழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் பிரசித்திப்பெற்ற, கொடியிடைநாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமையான இக்கோயில், தொண்டை நாட்டு பாடல் பெற்ற 32 தலங்களுள் 22-வது தலமாகவும், சுந்தரரால் பாடப் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயிலில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா, கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 23-ம் தேதிவரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேர் திருவிழா இன்று காலை நடைபெற்றது.
இவ்விழாவில், வண்ண மலர்கள், வண்ணத் துணி மற்றும் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் காலை 8 மணியளவில், தங்க ஆபரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாசிலாமணீஸ்வரர், கொடியிடைநாயகியுடன் எழுந்தருளினார். தொடர்ந்து, காலை 9 மணியளவில், ஆவடி எம்.எல்.ஏ., சா.மு.நாசர், கோயில் பரம்பரை அறங்காவலர் பாபு என்கிற பொன்னம்பலம், செயல் அலுவலர் பிரபாகரன் உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்து திருத்தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
» மதுக்கடைகளை மூடக்கோரி முதல்வரிடம் நேரில் வலியுறுத்த சென்ற இளைஞர் கைது @ சென்னை
» 7 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கிராம கோயில் திறப்பு @ முதுகுளத்தூர்
இதையடுத்து, தேரடியிலிருந்து புறப்பட்ட திருத்தேர் 4 மாடவீதிகள் வழியாக காலை 11 மணியளவில் மீண்டும் தேரடியை வந்தடைந்தது. இதில், திருமுல்லைவாயில், ஆவடி, அம்பத்தூர், பாடி, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இத்தேர் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், மோர், குளிர்பானங்களை வழங்கினர்.